ஆர்யன் சோப்ரா Aryan Chopra | |
---|---|
![]() 2017 ஆம் ஆண்டு செயிண்ட் லூயிசு உலக சதுரங்க கூடத்தில் கிராண்டு மாசுட்டர் ஆர்யன் சோப்ரா. | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 10 திசம்பர் 2001 புது தில்லி, இந்தியா |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் (2016) |
பிடே தரவுகோள் | 2585 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2529 (செப்டம்பர் 2017) |
ஆர்யன் சோப்ரா (Aryan Chopra) என்பவர் ஓர் இந்திய சதுரங்க வீர்ர் ஆவார். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் இவர் பிறந்தார். 14 வயது 9 மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் என்ற சிறிய வயதிலேயே 2016 ஆம் ஆண்டு சோப்ரா கிராண்டு மாசுட்டர் ஆனார். அலுவல் முறையாக இப்பட்டத்தை பிடே அமைப்பு 2017 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது. பரிமராசன் நேகியைத் தொடர்ந்து இரண்டாவது இந்திய இளைய கிராண்டு மாசுட்டர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்த்து [1][2]. தற்போது இவர் இந்தியாவின் மூன்றாவது இளைய கிராண்டு மாசுட்டராக கருதப்படுகிறார்.
ஐந்தாவது வயதில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் காயமடைந்த காரணத்தால் தற்காலிகமாக சோப்ரா வீட்டில் இருக்க நேர்ந்தது. எனவே சோப்ரா ஆறாவது வயதிலேயே சதுரங்கம் விளையாடத் தொடங்கினார் [3][4][5].
2015 ஆம் ஆண்டு ரிகா தொழில்நுட்ப பல்கலைக்கழக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று சோப்ரா தனது முதல் கிராண்டு மாசுட்டர் தகுதி நிலையை அடைந்தார். இப்போட்டியில் இவர் எந்த ஆட்டக்காரரிடமும் தோற்கவில்லை[6][7]. 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 35 ஆவது சாலகாரோ சதுரங்கப் போட்டியில் சோப்ரா தனது இரண்டாவது கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை ஈட்டினார். வலிமையான மேம்பட்ட ஆட்டத்தின் மூலம் பல கிராண்டு மாசுட்டர்களை வீழ்த்தி இப்போட்டியில் வெற்றிபெற்றார்[8]. இதே ஆண்டு ஆகத்து மாதத்தில் அபுதாபியில் நடைபெற்ற சதுரங்க மாசுட்டர்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் சோப்ரா தன்னுடைய மூன்றாவதும் இறுதியானதுமான கிராண்டு மாசுட்டர் தகுதிநிலையை ஈட்டினார். இப்போட்டியின் இறுதி சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சோப்ரா, அர்மீனியா நாட்டைச் சேர்ந்த கிராண்டு மாசுட்டர் சாம்வெல் தெர்-சகாக்கியனை வீழ்த்திய போது இத்தகுதி நிலை இவருக்குக் கிடைத்தது[9]. அலுவல் முறையாக மார்ச்சு 2017 இல் இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது[10].
எட்டு அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த எட்டு ஆட்டக்காரர்களைக் கொண்ட உலக சதுரங்க அணி ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையிலான சதுரங்கப் போட்டி 2017 ஆம் ஆண்டு செயிண்டு இலூயிசில் நடைபெற்றது. இப்போட்டியில் உலக சதுரங்க அணி 30.5-17.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சோப்ரா 3.5/6 புள்ளிகள் ஈட்டினார். உலக அணி அப்பிரிவில் 19-13 புள்ளிகளுடன் வெற்றிபெற இப்புள்ளிகள் மிகவும் உதவின[11]
.
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற அபுதாபி மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் சோப்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்தார், அப்போட்டியில் அமின் பாசெம் முதலாவது இட்த்தையும் நைகில் சார்ட்டு இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். பல கிராண்டு மாசுட்டர்களை வீழ்த்தி 6.5/9 புள்ளிகள் பெற்றதன் மூலம் சோப்ராவுக்கு 22 எலோ தரவுகோள் புள்ளிகள் கூடின. சியார்சியாவைச் சேர்ந்த கிராண்டு மாசுட்டர் லிவான் பேன்ட்சுலாலாவை கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சோப்ரா வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு சிறந்த வெற்றியாகும் [12][13].