ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | பத்தனம்திட்டா |
அமைவு: | ஆறன்முளா |
ஏற்றம்: | 34 m (112 அடி) |
ஆள்கூறுகள்: | 9°19′41.1″N 76°41′15.7″E / 9.328083°N 76.687694°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
ஆறன்முளா பார்த்தசாரதி கோயில், திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.[2] பிரம்மன், வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு. பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது மகாபாரத யுத்தத்தில் நிராயுத பாணியான கர்ணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க அர்ஜுனனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது.[3]
இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயருடன் விளங்குகிறார். இறைவியின் பெயர் பத்தமாஸனித்தாயார் என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் வேதவியாச தீர்த்தம், பம்பா தீர்த்தம் ஆகியன. விமானம் வாமன விமானம் என்ற வகையைச் சேர்ந்தது
இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் கொடிக்கம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறை உள்ளது. இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது. இந்த தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.