ஆறாம் பராக்கிரமபாகு (1410/1412/1415–1467) கோட்டை அரசை ஆண்ட திறன்மிக்க ஒரு மன்னன் ஆவான். சிங்கள இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலமாக இவன் காலம் சொல்லப்படுகின்றது. மிகச்சிறந்த அரசு சூழ்கை அறிவுய்தியாகவும் இவன் திகழ்ந்தான்.
சீமான் ஜயமகாலேனன் மற்றும் சுனேத்திரா மகாதேவிக்கு மகனாகப் பிறந்த இவனது அரச பதவியின் அதிகாரபூர்வம், உரிமை எதுவும் தெளிவாக அறியமுடியவில்லை. அவன் ஐந்தாம் பராக்கிரமபாகுவின் கொடிவழியில் வந்தவன் என்ற கருதுகோள் பல ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றது.[1] ஆரம்பத்தில் கம்பளை இராசதானியிலிருந்து மூன்றாண்டுகள் ஆண்ட இவன், 1415இல் ஆட்சிக்கு வந்ததுடன், சுவர்ணமாணிக்க தேவி அல்லது ரன்மெனிக்கேயை பட்டமகிஷியாகக் கொண்டிருந்தான்.
மலைநாட்டில் உருவான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிய பராக்கிரமபாகு, விஜயநகரப் பேரரசு 1435இல் இலங்கை மீது மேற்கொண்ட படையெடுப்பையும் தடுத்துநிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. 1445களில் தமிழகக் கரையோர நகரங்கள் மீதும் இவன் படையெடுத்ததாக சிங்கள நூல்கள் புகழ்கின்றன.[2] இவனது வளர்ப்பு மகன் செண்பகப்பெருமாளால் யாழ்ப்பாண அரசு வெற்றிகரமாகக் கைக்கொள்ளப்பட்டதும் புகழ்ந்து பாடப்பட்டிருக்கின்றது. ஆனையிறவுக்கு அண்மையில் இருந்த சாவகக்கோட்டையிலும், பின் ஆரியச் சக்கரவர்த்திகள் தம் தலைநகரான நல்லூரிலும் செண்பகப்பெருமாளின் படை பெருவெற்றி எய்தியது.[3][4]
இவனால் கோட்டையில் ஒரு அரண்மனையும், மூன்றடுக்கு கொண்ட தலதா மாளிகையும் அமைக்கப்பட்டது. தன் தாய் சுனேத்திரா நினைவாக, இவனால் அமைக்கப்பட்ட "பெப்பிலியான சுனேத்திரா பிரிவெனா" பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விசுத்தி மக்கசனய, பேசஜ்ஜ மஞ்சுசாவ, சமோத கூட வர்ணன முதலான நூல்கள் பராக்கிரமபாகுவே கைப்பட எழுதியவையாக சொல்லப்படுகின்றன. சிங்களத்தில் "சந்தேசய" என அறியப்படுகின்ற தூது இலக்கியங்களும் இவன் காலத்திலேயே அதிகளவில் எழுதப்பட்டன.
1. Shrilankave Ithihasaya, Department of educational publications, Sri Lanka.