ஆலயமணி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் பி. சரோஜாதேவி எஸ். எஸ். ராஜேந்திரன் சி. ஆர். விஜயகுமாரி |
வெளியீடு | நவம்பர் 23, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4527 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆலயமணி 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வீரப்பா தயாரித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. சரோஜாதேவி, சி. ஆர். விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 23 நவம்பர் 1962 இல் வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இப்படம் தெலுங்கில் குடி கண்டலு (1964) என்றும், இந்தியில் ஆத்மி (1968) என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
பணக்கார இளைஞ்சான தியாகராஜனும், ஏழையான சேகரும் (எஸ். எஸ். ராஜேந்திரன்) நண்பர்கள். இருவரும் மீனாவை (பி. சரோஜாதேவி) காதலிக்கின்றனர். மீனா சேகரை விரும்புகிறாள். ஒரு கட்டத்தில் தியாகராஜனை திருமனம் செய்து கொள்கிறாள் மீனா. ஒரு விபத்தில் காலை இழக்கிறார் சேகர். இதனால் சக்கர நாற்காலியை பயன்படுத்தவேண்டிய நிலைக்கு சேகர் ஆளாகிறார். இதன் பிறகு நட்பிலும், காதலிலும் பல சிக்கல்கள் எழுகின்றன இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
கே. சங்கர் சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன் ஆகிய இருவரின் படங்களையும் இயக்கியவர். ஆலயமணி படத்தை சங்கர் இயக்கத்தொடங்கிய பின்னர் சங்கரை அழைத்த ம.கோ.இரா தன் பணத்தோட்டம் படத்தை இயக்கித்தருமாறு கேட்டார். அதற்கு தான் ஆலயமணி படத்தை இயக்கத் தொடங்கிவிட்டதாக கூறினார். ஆனால் ம.கோ.இரா பிடிவாதமாக நீங்கள் தான் இயக்கவேண்டும் என்று கூறியதால் வேறுவழியின்றி இயக்க ஒப்புக் கொண்டார். ஆலயமணியை காலை முதல் நண்பகல் வரையும், பணத்தோட்டத்தை நண்பகலில் இருந்து இரவு வரையும் கே. சங்கர் இயக்கினார்.[1] இருபடங்களிலும் சரோஜாதேவியே நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலயமணி படத்தின் படப்பிடிப்பு வாகினி படப்பிடிப்புத் தளத்தில் நடக்க பணத்தோட்டம் படத்தின் படப்பிடிப்பு சத்தியா படப்பிடிப்புத் தளத்தில் நடந்தது.[1] ஆலய மணி படத்தின் இறுதியில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி ஆகியோரின் பாத்திரங்கள் இறந்துவிடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பிறகு அது மாற்றபட்டது.[1]
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த அனைத்து பாடல்களுக்கும் கண்ணதாசன் வரிகள் எழுதினார்.[2] "கல்லெல்லாம் மாணிக்க", "சட்டி சுட்டதடா", "பொன்னை விரும்பும்" போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.[3] தானே கற்ற கிட்டார் கலைஞரான பிலிப்ஸ், , "சட்டி சுட்டதடா" பாடலுக்காக கிதார் வாசித்தார்.[4] "கல்லெல்லாம் மாணிக்க" பாடல் மாயாமாளவகௌளை இராகத்தை அடிப்படையாகக் கொண்டது.[5] தி நியூ இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் எழுதிய சுஜாதா நாராயண், காற்று வெளியிடை (2017) படத்தின் "நல்லை அல்லை" பாடல் இந்த படத்தின் "பொன்னை விரும்பம்" போலவே இருந்தது என்று குறிப்பிட்டார்."[6] "சட்டி சுட்டதடா" பாடலுக்காக தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா 20 நாட்கள் காத்திருந்தும் கண்ணதாசன் படலைக் கொடுக்கவில்லையாம். இதனால் கண்ணதாசனின் அலுவலகத்துக்கு கோபமாக சென்ற பி. எஸ். வீரப்பா "சும்மா சட்டி சுடுருச்சி, கை விட்டுச்சுன்னு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறதை விட்டுட்டு இவ்வளவு நாளா இழுத்தடிக்கிறீங்களே?" என்று காபமாக கேட்டிருக்கிறார். வீரப்பா பேசிய அந்த வர்த்தையைக் கொண்டே கண்ணதாசன் "சட்டி சுட்டதடா" பாடலை எழுதினார்.[1]
பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|
"கல்லெல்லாம் மாணிக்க" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி | 05:00 |
"கண்ணான கண்ணனுக்கு" | சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா | 05:10 |
"கருணை மகன்" | ம. சு. விசுவநாதன் | 00:57 |
"மானாட்டம்" | பி. சுசீலா | 03:36 |
"பொன்னை விரும்பும்" | டி. எம். சௌந்தரராஜன் | 04:03 |
"சட்டி சுட்டதடா" | டி. எம். சௌந்தரராஜன் | 04:21 |
"தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே" | எஸ். ஜானகி | 03:22 |
ஆலயமணி 23 நவம்பர் 1962 இல் வெளியானது.[7] கல்கியின் காந்தன் பல்வேறு நடிகர்களின் நடிப்பையும் ஒளிப்பதிவையும் பாராட்டினார், ஆனால் விஜயகுமாரி குறைவாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதினார்.[8] இப்படம் கோடம்பாக்கம் விஜயா கார்டனில் 100வது நாளை கொண்டாடியது.[9]
ஆலயமணி தெலுங்கில் குடி கண்டலு (1964), இந்தியில் ஆத்மி (1968),[10] மலையாளத்தில் ஒரு ராகம் பல தாளம் (1979) என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யபட்டது.[11]