ஆஷா தேவி ஆர்யநாயகம் Asha Devi Aryanayakam | |
---|---|
பிறப்பு | 1901 லாகூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1972 |
பெற்றோர் | பானி பூசன் ஆதிக்காரி சர்ஜூபாலா தேவி |
வாழ்க்கைத் துணை | ஈ.ஆர்.டபிள்யு. ஆர்யநாயகம் |
விருதுகள் | பத்மசிறீ |
ஆஷா தேவி ஆர்யநாயகம் (Asha Devi Aryanayakam) லாகூரைச் சேர்ந்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையாவார். 1901 முதல் 1972 வரையிலான காலப் பகுதியில் இவர் வாழ்ந்தார்.[1] கல்வியாளராகவும், காந்தியவாதியாகவும்[2][3] ஆஷா தேவி செயற்பட்டார். மகாத்மா காந்தியின் சேவாகிராமம்[4] மற்றும் வினோபா பாவேவின் பூதான இயக்கம் ஆகியவற்றுடன் ஆஷா நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.[5]
முந்தைய பிரித்தானிய இந்தியாவில் 1901 ஆம் ஆண்டு லாகூரில் ஆஷா தேவி பிறந்தார். பேராசிரியரான பானி பூசண் ஆதிகாரி மற்றும் சர்ஜுபாலா தேவி ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். ஆஷா தனது குழந்தைப் பருவத்தை லாகூரிலும் பின்னர் பனாரசிலும் கழித்தார். தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை வீட்டிலிருந்தபடியே கற்றார். எம்.ஏ. முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் பனாரசு மகளிர் கல்லூரியில் ஆசிரிய உறுப்பினராக சேர்ந்தார். பின்னர், சாந்திநிகேதனில் சிறுமிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஆஷா ஏற்றுக்கொண்டார். அங்கு ரவீந்திரநாத் தாகூரின் தனிச் செயலாளராக பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஈ.ஆர். டபிள்யூ. ஆர்யநாயகத்தை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.[2][3] தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த சமயத்தில்தான் ஆஷா தேவி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். தனது கணவருடன் வார்தாவில் உள்ள சேவாகிராமத்தில் காந்தியுடன் சேர்ந்தார். ஆரம்பத்தில் ஆஷா மார்வாடி வித்யாலயத்தில் பணிபுரிந்தார், ஆனால் பின்னர் சர்வோதயக் கல்விக் கொள்கைகளை எடுத்துக் கொண்டு இந்துசுதானி சர்வோதய சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.[2][3] 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசு ஆஷா சமுதாயத்திற்கு செய்த பங்களிப்புகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[6] இவ்விருது பெற்ற முதல் நபர் என்ற சிறப்பும் இவருக்கு கிடைத்தது. ஆஷா தேவி ஆரண்யகம் மகாத்மா காந்தி தொடர்புடைய இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[7][8]
ஆஷா 1972 ஆம் ஆண்டு காலமானார்.[1]