இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்

இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்கள் நிறுவனம் (Institute of Cost and Works Accountants of India- ICWAI) என்பது ஒரு இந்திய தொழில்முறை கூட்டமைப்பாகும். பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்தவும் கிடைத்தற்கரிய வளங்கள், மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்திய அரசு, உற்பத்திச் செலவுத் தணிக்கையை அறிமுகப்படுத்தியது. நிதித் துறை தணிக்கையாளர்களைப் போலவே உற்பத்திச் செலவுத் தணிக்கையாளர்களை உருவாக்குவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புச் சட்டம் ஒன்றின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நடத்தும் மூன்றடுக்குத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று செயல் முறைப் பயிற்சியையும் முடிப்பவர்கள், இந்நிறுவனத்தில் உறுப்பினராவதுடன் உற்பத்திச் செலவுத் தனிக்கையாளராகவும் சேவை புரிய முடியும்.

மூன்றடுக்குத தேர்வுமுறை

[தொகு]

அடிப்படை நிலை (Foundation)

[தொகு]

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இத்தேர்வினை எழுதலாம். இதற்காக இந்நிறுவனத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்நிலையில் நான்கு தாள்கள் (பொருளாதாரம், கணக்குப் பதிவியல், கணிதம் மற்றும் நிறுவன அமைப்பு மற்றும் மேலாண்மை) உள்ளன .

இடை நிலை

[தொகு]

இந்நிலையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் வீதம் மொத்தம் எட்டு தேர்வுகள் எழுத வேண்டும். இடை நிலை (இண்டர்மீடியட்டு) முடித்தபின் 1 ஆண்டு பயிற்சி பெற வேண்டும்.

இறுதி நிலை

[தொகு]

இடை நிலை போலவே இதிலும் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு தாள்கள் உள்ளன. எட்டு தாள்களிலும் வெற்றி பெற்று ஈராண்டு நடைமுறைப் பயிற்சியையும் முடித்தால் இந்நிறுவனத்தில் உறுப்பினராகப் பதிவு பெறலாம்.

உற்பத்திச் செலவுத் தணிக்கையினால் பொது மக்களுக்கு விளையும் நன்மைகள்

[தொகு]
  1. பொருட்களின் உற்பத்திச் செலவு குறைவதால் விலை குறைகிறது
  2. ஒரே பொருளை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவினை ஒப்பிடுவதால் செலவு குறைய வழி பிறக்கிறது.
  3. தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது

உற்பத்திச் செலவுத் தணிக்கையினால் அரசுக்கு கிட்டும் பலன்கள்

[தொகு]
  1. கிடைத்தற்கரிய மூலப் பொருட்களைகொண்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய வர்த்தக நிறுவனங்களை வலியுறுத்த முடியும்.
  2. பொருட்களின் உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்ட முடியும்
  3. விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியும்

உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கையும் நிதிநிலைத் தணிக்கை அறிக்கையும்

[தொகு]
  1. நிதி நிலை தணிக்கை அறிக்கை, ஒரு பொது ஆவணமாகும் - அதாவது இதனை யார் வேண்டுமானாலும் காண முடியும். ஆனால் உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை என்பது ஒரு இரகசிய ஆவணம் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதன் நகலைக் காண முடியாது.
  2. நிதி நிலை தணிக்கை அறிக்கை, வருடாந்திர உறுப்பினர் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை, இயக்குனர் குழுவிடமும் அரசிடமும் மட்டுமே சமர்ப்பிக்கப்படுகிறது.
  3. பொருட்களை உற்பத்தி செய்யும் முறை போன்ற பல தகவல்களைப் பற்றி அறிக்கையில் விவாதிக்கப்படுவதால், உற்பத்திச் செலவுத் தணிக்கை அறிக்கை இரகசிய ஆவணம் என்று கருதப்படுகிறது.
  4. உற்பத்திச் செலவைக் கட்டுப்படுத்துதல், உற்பத்திச் செலவைக் குறைத்தல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை தணிக்கையாளர் வழங்குகிறார். இதனாலும் இதன் இரகசியத் தன்மை அதிகரிக்கிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]