இந்திய விடுதலை கூட்டமைப்பு அல்லது இந்திய சுதந்திர லீக் (Indian Independence League, சுருக்கமாக IIL) 1920களிலிருந்து 1940கள் வரை இயங்கிய ஓர் அரசியல் இயக்கமாகும். இந்தியாவிற்கு வெளியே வாழ்ந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து இந்தியாவிலிருந்து பிரித்தானிய ஆட்சியை நீக்குவதற்காக இந்த இயக்கம் 1928ஆம் ஆண்டில் உருவானது. இந்த அமைப்பில் தென்கிழக்காசியாவின் பல்வேறு பகுதிகளில் வசித்த இந்திய குடியேறிகள், நாடு கடத்தப்பட்ட இந்திய தேசியவாதிகள் பங்கேற்றனர். இரண்டாம் உலகப் போரின் போது மலாயாவை கைப்பற்றியிருந்த சப்பானியர்கள் அங்கிருந்த இந்தியர்களை இந்தக் கூட்டமைப்பில் சேர்ந்திட ஊக்குவித்தனர்.[1]
முதன்மையாக இந்திய தேசியத்தை வளர்த்திடவும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு சப்பானியர்களின் ஆதரவைப் பெற்றிடவும் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு மோகன் சிங்கின் தலைமையிலமைந்த முதல் இந்திய தேசியப் படையுடன் செயலாற்றி பின்னர் நடத்திச் செல்லவும் நேரிட்டது. சுபாஷ் சந்திர போஸ் தென்கிழக்காசியா வந்து இந்தியத் தேசியப் படையை மீள்வித்த பிறகு கூட்டமைப்பு அவரது தலைமையில் இயங்கியது. நாடு கடந்த இந்திய அரசு உருவானநிலையில் இந்தக் கூட்டமைப்புக் கலைக்கப்பட்டது.