கணித இயலுக்கு அரும் பங்களித்த புகழ் பெற்ற இந்திய கணித அறிஞர்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். சிந்துவெளி நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் பூச்சியத்தின் கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.[1]
சயதேவர் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. பெல் (Pell) போன்ற சமன்பாடுகளுக்கு சக்கரவலா என்னும் முறையில் தீர்வு காணுதல். புகழ்பெற்ற செருமானிய கணித அறிஞர் ஹென்க்கல் (Henkel) சயதேவாவின் முறையை மிகவும் பாராட்டியுள்ளார்.
இரண்டாம் ஆரியபட்டர், கி.பி. 920-1000 மகா சித்தாந்தம் என்னும் நூலை இயற்றியவர்.
நாராயண பண்டிதர் 1340-1400, கேரள (சேர நாட்டு) அறிஞர். கணித கௌமுடி என்னும் நூலை ஆக்கியவர். பொறுக்கல் கணக்கை (combinatorics) எதிர்பார்த்தவர்.
மாதவர் கி.பி. 1350-1425 கேரள (சேர நாட்டு) அறிஞர். நுண்கணிதத்தில் பல கருத்துக்களை விதைத்தவர். கணிதவியல் பகுப்பாய்வின் (mathematical analysis) தந்தை எனப் புகழப்படுபவர். கேரள வானவியல் மற்றும் கணிதப் பள்ளியைத் தோற்றுவித்தவர்.
நீலகண்ட சோமயாஜி, கி.பி. 1444-1545 கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார். மாதவரின் கேரளப் பள்ளி.
மகேந்திர சூரி 14 ஆம் நூற்றாண்டு. யந்திரராஜா என்னும் நூலை எழுதியவர். வானவியல் பற்றிக் கணக்கிடும் விண்மீன்கணித்தட்டு (astrolobe) பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார்.
சங்கர வாரியார் சுமார் கி.பி. 1530. நீலகண்ட சோமயாஜியின் எழுதிய தந்திர சங்கிரகா என்னும் நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.