சுருக்கம் | ICCR |
---|---|
உருவாக்கம் | 9 ஏப்ரல் 1950 |
வகை | அரசு அமைப்பு |
தலைமையகம் | ஆசாத் பவனம், I. பி. தோட்டம், நியு தில்லி - 110002 |
சேவை பகுதி | உலகம் முழுமையும் |
தலைவர் | வினய் சாகாரசபுத்தே |
தலைமை இயக்குநர் | குமார் துகின் |
மைய அமைப்பு | குழு |
தாய் அமைப்பு | இந்திய அரசு |
வலைத்தளம் | iccr |
இந்தியக் கலாச்சார உறவுக் குழு (Indian Council for Cultural Relations)(முன்னர் ஜவகர்லால் நேரு கலாச்சார உறவுகளுக்கான குழு என அழைக்கப்பட்டது) என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது மற்ற நாடுகள் மற்றும் அவர்களின் மக்களுடன் கலாச்சார பரிமாற்றம் மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தினை உலகளாவிய நோக்கில் கொண்டு செல்லும் கலாச்சார உறவுகளில் ஈடுபட்டுள்ளது. இது சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் 9 ஏப்ரல் 1950-இல் நிறுவப்பட்டது.
பெங்களூர், சண்டிகர், சென்னை, கட்டாக், கோவா, குவகாத்தி, ஐதராபாத், செய்ப்பூர், கொல்கத்தா, இலக்னோ, மும்பை, பட்னா, புனே, சில்லாங், திருவனந்தபுரம் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் பிராந்திய அலுவலகங்களும், புது தில்லி ஆசாத் பவனில் தலைமையகமும் அமைந்துள்ளது. ஜோர்ஜ்டவுண், பரமாரிபோ,[1] போர்ட் லூயிஸ், ஜகார்த்தா, மாஸ்கோ, வல்லாடோலிட், பெர்லின், கெய்ரோ, இலண்டன் (நேரு மையம், இலண்டன்), தாஷ்கந்து, அல்மாத்தி, ஜோகன்னஸ்பேர்க், டர்பன், போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் ஆகியவற்றில் கலாச்சார மையங்களை நிறுவியதன் மூலம், இக்குழு பன்னாட்டு அளவில் பணிகளைச் செய்கிறது. போர்ட் ஆப் ஸ்பெயின் மற்றும் கொழும்பு, டாக்கா, திம்பு, சாவோ பாவுலோ, காத்மாண்டு, பேங்காக், கோலாலம்பூர் மற்றும் தோக்கியோ ஆகிய இடங்களில் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழு புதிய கலாச்சார மையங்களைத் திறந்துள்ளது.[2][3]
இந்தக் குழு இதன் கலாச்சார இராஜதந்திரத்தின் ஆணையைப் பரந்த அளவிலான செயல்பாடுகள் மூலம் செயல்படுத்துகின்றது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்வதோடு, இந்தியா முழுவதும் உள்ள பல கலாச்சார நிறுவனங்களுக்கு இந்தியக் கலாச்சார உறவுக் குழு நிதியுதவி அளிக்கிறது. மேலும் நடனம், இசை, ஒளிப்படவியல், நாடகம் மற்றும் காட்சிக் கலைகளில் தனிப்பட்ட கலைஞர்களுக்கு நிதியுதவி செய்கிறது. இது பன்னாட்டுப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருதையும் வழங்குகின்றது. இந்த விருது 1965ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. கடைசி விருது 2009-இல் வழங்கப்பட்டது.[4]
ஆறு காலாண்டு ஆய்விதழ்கள், ஐந்து வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்படுகின்றன:
இதழ் | மொழி |
---|---|
இந்தியன் அடிவானங்கள் | ஆங்கிலம் |
ஆப்பிரிக்கா காலாண்டு | ஆங்கிலம் |
ககனாஞ்சல் | இந்தி |
பேபிலஸ் டி லா இந்தியா | எசுபானியம் |
Rencontre Avec I' Inde | பிரெஞ்சு |
தகாபத்-உல்-ஹிந்த் | அரபு |