இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து(Covid-19 vaccination in India) போடும் செயல் திட்டம் 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டது. கோவிட்-19 நோய்க்குக் காரணமான சார்சு-கோவ்-2 என்ற தீநுண்மிக்கு எதிராக செயல்படும் மருந்தை பகுதி பகுதியாக இந்திய மக்களுக்கு செலுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முதற்கட்டமாக நாடு முழுவதுமுள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தட்டுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பின்னர் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அல்லது சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி புனேவில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்திற்குச் சென்று, நவம்பர் 28, 2020 அன்று கோவிட் -19 தடுப்பூசி சோதனைகளை ஆய்வு செய்தார்.
புனேவைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் இந்திய சீரம் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரிக்கு கோவிட்-19 நோய் தொடர்பான சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள விண்ணப்பித்தது. ஓர் ஆண்டுக்குள் கோவிட்–19 நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்து கண்டுபிடித்து வழங்கப்படும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவல்லா தெரிவித்தார். இருப்பினும், இம்மருந்து 20 முதல் 30% மக்களுக்கு பயனுள்ளதாக இருக்காது.[1] வேறு இரண்டு நிறுவனங்களும் கோவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன: அகமதாபாத் நகரத்தை தலையிடமாகக் கொண்ட சைடசு கேடில்லா என்ற தனியார் சுகாதார நிறுவனம் வைரசு ஏந்துயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி டி என் ஏ மரபுப்பண்பு கடத்தும் தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.[2]ஐதராபாத்து நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த புளுகென் நிறுவனத்துடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த்து.[3]
பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் இந்திய சீரம் நிறுவனம் தடுப்பூசியை விலங்குகளில் செலுத்தி சோதனைகளைத் தொடங்கியது.[4] இதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் சைடசு கேடில்லா நிறுவனமும் இச்சோதனைகளை தொடங்கியது.[5] இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசியை முழுவதுமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமும் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மே மாதத்தில் கூட்டு சேர்ந்தது.[6] மே மாதம் வரையில் இந்தியாவில் 30 என்ற எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வகைகளில் கோவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசிகள் பரிசோதனை உருவாக்கத்தில் இருந்தன.[7] இவற்றில் பல முன்னதாகவே மருத்துவ பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன.[8] சூலை மாதத்தில் வெளிவந்த ஒரு அறிக்கையின்படி, நடைமுறையிலிருக்கும் மனிதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து ஆகத்து மாதம் 15 ஆம் தேதி இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பூசியான பிபிவி152 அல்லது கோவாக்சின் என்ற தடுப்பூசியை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தயாராகி வந்தது. இருப்பினும் பிற்காலத்தில் இந்த காலக்கெடுவானது கண்டுபிடிப்பை வெளியிடுவதற்காக மட்டுமே என்றும் பயன்பாட்டுக்கு எந்தவொரு இந்திய தடுப்பூசியும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வருமென்றும் உறுதியாக கூறப்படவில்லை.[9]
கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கோவிட்-19 நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சாதகமான முடிவுகளை கொடுப்பதாக அறியப்படுகிறது.[10] சூலை மாத நடுப்பகுதியில் சைடசு கேடில்லா நிறுவனமும் தான் உற்பத்தி செய்த சைகோவ்டி என்ற தடுப்பூசியை மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்யத் தொடங்கியது.[11] தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியுடன் சீரம் இந்தியா நிறுவனமும் இணைந்து பில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளையின் உதவியுடன் வளர்ந்துவரும் நாடுகளுக்காக 100 மில்லியன் மருந்தளவு தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவு செய்தது.[12]
இந்தியாவின் அறிவியல் மந்திரி டாக்டர் அர்ச வர்தன் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மக்கள் பயன்பாட்டுக்காக பயன்படுத்த முதல் தடுப்பூசி கிடைக்கும் என்று செப்டம்பர் மாதம் அறிவித்தார்.[13] கோவிட் நோயாளிகளுடன் நேரடியாக களத்தில் போராடும் 30 மில்லியன் சுகாதார ஊழியர்கள், குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் முதலில் தடுப்பூசி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தால் இறுதியாக முடிவு செய்யப்பட்டது.[14]
இந்திய சுகாதார அமைச்சர் அர்சு வர்தன் கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தும் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன் தயாரிப்புகளை 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 அன்று ஆய்வு செய்கிறார்.
இங்கிலாந்து நாட்டைத் தலைமையிடமாக்க் கொண்டு இயங்கும் ஆசுட்ராசெனிக்கா நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான ஏஇசட்டி1222 என்ற தடுப்பூசியை (சந்தைப்பெயர்: கோவிசீல்டு) அவசர அல்லது நிபந்தனைக்குட்பட்ட மருந்தாகப் பயன்படுத்த 2021 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி ஒப்புதல் அளித்தார்.[15]ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் இத்தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்தது.[16] வைரசு ஏந்துயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி டி என் ஏ மரபுப்பண்பு கடத்தும் தடுப்பூசி வகையாக வாசிடெக் நிறுவனம் கோவிசீல்டை தயாரிக்கிறது. சிம்பான்சி வகை குரங்களுக்கு கோவிசீல்டை செலுத்தியபோது அவற்றின் உடல்நிலை குளிர்ச்சி நிலையை சந்தித்தன என்பது மட்டுமே பக்கவிளைவாக உணரப்பட்டது. சாதாரண குளிரூட்டி வெப்பநிலைகளில் கோவிசீல்டு தடுப்பு மருந்தை கொண்டு செல்லவும், பராமரிக்கவும், சேமிக்கவும் முடியும். ஆறு மாதங்கள் வரை இதை சேமித்து வைத்திருந்து பயன்படுத்தவும் முடியும்.
2021 ஆம் ஆண்டு பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய முதல் உள்நாட்டு தடுப்பூசி பிபிவி 152 (சந்தைப் பெயர்: கோவாக்சின்) என்ற தடுப்பூசியும் அவசர அல்லது நிபந்தனைக்குட்பட்ட மருந்தாகப் பயன்படுத்த 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 அன்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி ஒப்புதல் அளித்தார்.[17] இருப்பினும் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளை முடிக்காத காரணத்தால் ஒப்புதலில் சில சிக்கல்கள் உள்ளன.[18]
இந்தியாவில் கோவிட்-19 தேசிய தடுப்பூசி இயக்கம் 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று 3,006 தடுப்பூசி மையங்களில் தொடங்கியது.[19]
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் கோவிசீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசிகளில் ஒன்று செலுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் கோவிசீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் சிலவற்றை முடிக்காத காரணத்தினால் ஒப்புகை படிவத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்ட பின்னரே மக்களுக்குச் செலுத்தப்படுகிறது.[20]
முதல் நாளான சனவரி 16 அன்று மட்டும் 1,65,714 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் எந்தவிதமான பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.[21]