இந்தியாவில் தெருவோரக் குழந்தைகள் (street child) என்ற சொல், பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பெரியோர் யாருமின்றி தெருவோரங்களில் வாழ்கின்ற, வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது.[1]
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் கணக்கீட்டின்படி, 1992 இல் இந்தியாவில் தெருவோரக் குழந்தைகளின் எண்ணிக்கை 400,000 க்கும் மேலாகும்.[2] கவனிப்பாரின்றி தெருவோரங்களில் வாழ்ந்து, தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்ளும் நிலையில் இக்குழந்தைகள் இருப்பதற்கு முக்கியக் காரணமாக குடும்பச் சிக்கல்களே உள்ளன. தங்களது பாதுகாப்புக்காகத் தெருவோரக் குழந்தைகள் கூட்டங்களாக வாழ்ந்தாலும், அடிக்கடி அவர்களது முதலாளிகளாலும் காவற்துறையினராலும் சுரண்டப்படுகின்றனர்.[2][3]
அரசின் தகுந்த சட்டப் பாதுகாப்பும், அவர்களின் நிலையை மேம்படுத்தக்கூடிய அமைப்புகளுமே அவர்களை இந்நிலையிலிருந்து மீட்கக் கூடியவை.[1]
தெருவோரக் குழந்தைகள் குறித்த துவக்ககால ஆய்வுகளில் தெருக்களில் வேலைசெய்யும் குழந்தைகள் மட்டுமே தெருவோரக் குழந்தைகளாகக் கருதப்பட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், குழந்தைகளின் சிக்கலான அனுபவங்களை வரையறுப்பது கடினமாக இருந்தாலும் தெருவோரக் குழந்தைகள் வெவ்வேறாகப் பகுத்தறியப்பட்டனர். [1] தெருவோரக் குழந்தைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட மார்க் டபிள்யூ, லசுக் என்ற முக்கியமான ஆய்வாளர் அவர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்: தெருக்களில் வேலைசெய்து விட்டு இரவில் தங்கள் குடும்பத்திற்குத் திரும்பும் குழந்தைகள்; குடும்பத்துடன் நல்ல பிணைப்பில்லாத தெருவில் வேலை செய்யும் குழந்தைகள்; குடும்பத்துடன் வாழ்ந்து, குடும்பத்துடன் சேர்ந்து தெருக்களில் வேலை செய்யும் குழந்தைகள்; குடும்பம் ஏதுமின்றி தாங்களாகவே தெருவோரங்களில் வாழ்ந்து தெருக்களில் வேலைசெய்யும் குழந்தைகள்.[4]
“தெருவோரக் குழந்தை”கள் என்பது நான்காவது வகையைச் சேர்ந்த குழந்தைகளையே குறிக்கும். கவனித்துக் கொள்ள, பாதுகாக்க, வழிகாட்டப் பெரியர்வர்கள் யாருமின்றி, தெருக்களைத் (பயன்பாட்டிலில்லாத குடியிருப்புப் பகுதிகள், தரிசு நிலங்கள்) தனது வசிப்பிடமாக அல்லது வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு எந்தவொரு சிறுமியும்/சிறுவனும் தெருவோரக் குழந்தையாவரென ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வரையறுக்கிறது.[1] கவனித்துக்கொள்ள யாருமில்லாமல் தாமாகத் தெருக்களில் வாழும் குழந்தைகளை, தெருக்களில் வேலை மட்டுமே பார்க்கும் குழந்தைகளில் இருந்து வேறுபடுத்திப் பார்த்தல் அவசியம். இவ்விருவகைக் குழந்தைகளின் தேவைகளும் அவசியங்களும் வெவ்வேறானவையாக இருக்கும்.[3]
இந்தியாவில் தெருக்களில் வேலைசெய்யும் 18 மில்லியன் குழந்தைகளில்[5] , 5-20 விழுக்காடு குழந்தைகளே வசிக்க வீடில்லாத, குடும்ப அரவணைப்பற்ற குழந்தைகளெனக் கணக்கிடப்பட்டது.[3][4][6]தெருவில் செலவுசெய்யும் நேரத்தின் அளவு, தெருவோர வாழ்க்கை, பெரியோரின் பாதுகாப்பின்மை மற்றும் கவனிப்பின்மை போன்ற காரணிகளால், மேம்பாட்டுக் கவனம் அவசியப்படும் இந்திய மக்கட்தொகையின் ஒரு பகுதியாக இந்தியத் தெருவோரக் குழந்தைகளும் உள்ளனர்.[7] யூனிசெப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் மிகவும் பாதிப்படையக்கூடிய நிலையிலுள்ளவர்கள் என்பதால், தெருவோரக் குழந்தைகளின் நிலையையும் தேவைகளையும் குறித்த புரிதல் மிகவும் அவசியமான ஒன்றாகும்..[2]
தற்சமயம் இந்தியாவிலுள்ள தெருவோரக் குழந்தைகளின் எண்ணிக்கைக் குறித்த அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் எதுவுமில்லை.[8] இக்குழந்தைகள் ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை என்பதால் அவர்கள் பற்றிய துல்லிய தரவினைப் பெறுவது கடினமாக உள்ளது.[2] தெருவோரக் குழந்தைகளிடம் அடையாளச் சான்றுகள் கிடையாது என்பதுடன் அவர்கள் அடிக்கடி இடம் மாறிக்கொண்டும் இருப்பர்.[8] அதிகாரபூர்வமான அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 50,000 பேர் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இவர்களில் 45 விழுக்காடு 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.[9]
பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிட்ட சில நகரங்களிலுள்ள இக்குழந்தைகளின் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்டது. 1980களின் இறுதியில் கொல்கத்தாவிலும் மும்பையிலும் குறைந்தபட்சம் 100,000 தெருவோரக் குழந்தைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.[2] இந்தியாவிலுள்ள இக்குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 400,000-800,000 ஆக இருக்குமென மதிப்பிடப்பட்டது.[2]
வீட்டை விட்டு வெளியேறி தொடருந்தில் பயணம்செய்து தொடருந்து நிலையங்களில் வந்திறங்கும் சிறுவர்/சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80,000 ஆகும். இவர்கள் தொடருந்து நிலையங்களில் வந்திறங்கியவுடன் கண்டுபிடிக்கப்பட்டால்தான் அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் சேர்ப்பிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 80,000 பேரில் 10,000 பேரை மட்டுமே மீட்டு பெற்றோரிடம் சேர்க்க முடிகிறது. மீதமுள்ள 70,000 பேர் தொடருந்து நிலையத்திலோ அல்லது தெருக்களிலோ அலைகின்றனர். இவர்களால் ஆண்டுதோறும் தெருவோரக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்விவரங்களுக்கான ஆதாரங்களை, லலிதா ஐயர் மற்றும் மால்கம் ஹார்பர் எழுதிய "தொடருந்து குழந்தைகள்" ("railway Children") என்ற நூல் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் (" Railway Chidren, Sathi , Paul Hamlin Foundation" ...) இணையதளங்கள்/அறிக்கைகள் மூலம் அறியலாம்.
தெருவோரக் குழந்தைகளின் புள்ளிவிவரத்தைத் துல்லியமாகவும் நுட்பமாகவும் மதிப்பிடுவது கடினமானது என்பதால் அவர்களின் வயது குறித்த விவரங்களும் தோராயமானதே. இந்தியாவில் அதிகமான தெருவோரக் குழந்தைகள் ஆறுவயதுக்கு மேற்பட்டவர்களாகவும், பெரும்பான்மையோனார் எட்டு வயதுக்கு மேற்பட்டோராகவும் உள்ளனர்.[3] நகர்ப்புற விவகார தேசிய நிறுவனத்தின் 1989 ஆம் ஆண்டாய்வின்படி, இக்குழந்தைகளின் சராசரி வயது 13 ஆகும்.[2] யூனிசெப்பின் 1989 ஆம் ஆண்டறிக்கையின்படி ஆய்வு செய்யப்பட்ட இந்தியத் தெருவோரக் குழந்தைகளில் 72 விழுக்காட்டினர் 6-12 வயதினரும், 13 விழுக்காடு 6 வயதுக்கு உட்பட்டோரும் ஆவர்
இந்தியாவில் தெருவோரக் குழந்தைகளில் பெரும்பான்மையோர் சிறிதளவே கல்வியறிவுடைய அல்லது கல்வியறிவற்ற சிறுவர்கள் ஆவர்.[2][3][6]
இந்தியாவின் தெருவோரக் குழந்தைகள் பல காரணங்களுக்காகத் தங்களது வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியேறுகின்றனர்.[1] இவற்றுக்கான கருதுகோள்களாக மூன்று விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன: நகர வறுமை, பிறழ்ச்சிக் குடும்பங்கள், நகர்மயமாக்கல்.[4] இந்தக் கருதுகோள்கள் சரியானவையே என்பதை ஆதாரங்கள் ஓரளவுக்கு உறுதிப்படுத்துகின்றன. 1990 இல் மும்பையிலுள்ள 1000 தெருவோரக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 39.1 சதவீதத்தினர் தாங்கள் வீட்டைவிட்டு வந்ததற்குக் குடும்பச் சிக்கல்களும் சண்டைகளுமே காரணமெனவும் 20.9 சதவீதத்தினர் வறுமையைக் காரணமாகவும், 3.6 சதவீதத்தினர் நகரத்தைப் பார்க்கும் விருப்பமே காரணமெனவும் கூறியுள்ளனர்.[9] தெருவோரக் குழந்தைகளுக்கும் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகளுக்கும் தொடர்பு உள்ளது. பெரும்பாலான சூழ்நிலைகளில் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகளே இறுதியில் தெருவோரக் குழந்தைகளாகின்றனர். குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்களில் சில எளியவை; சில சிக்கலானவை. சில சமயங்களில் குழந்தைகளின் நடத்தை காரணமாகவும் சில சமயங்களில் பெற்றோர் காரணமாகவும் உள்ளனர். பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை, வீட்டுப்பாடம் செய்யாததால் கிடைக்கக் கூடிய அடித்தல் போன்ற தண்டனைகளுக்குப் பயந்து குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறுவதே பொதுவான காரணமாக உள்ளது. ஒரு குழந்தை பணத்தைத் திருடுவதும் உடன்பிறந்தோருடன் போட்டுக்கொள்ளும் சண்டைகளும் காரணங்களாய் அமைவதும் உண்டு.
பெரும்பாலான குழந்தைகள் குடும்பச் சிக்கல்கள் காரணமாகவே வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.[3][4][6] தாய்/தந்தை இறப்பு, தந்தையின் குடிப்பழக்கம், மாற்றாம் பெற்றோரிடம் ஏற்படும் மனவேதனை, தாய்-தந்தை பிரிவு, நிந்தனை மற்றும் குடும்ப வன்முறை போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் குடும்பச் சிக்கல்களாகும்.[4][6][10] கூடுதலாக, பெண்கள் பொறுப்பிலுள்ள குடும்பத்திலுள்ள குழந்தைகளே தெருவோரக் குழந்தைகளாகின்றனர்.[2]
எழுத்தறிவின்மை, போதைப் பழக்கம், வேலையின்மை போன்ற காரணிகள் அதிகமாய் காணப்படும் சேரி அல்லது மலிவுவிலைக் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக தெருவோரக் குழந்தைகள் பெரும்பாலும் உள்ளனர்.[10] குழந்தைகள் சிறிது சிறிதகத் தெரு வாழ்க்கையைப் பழகிக் கொள்கின்றனர். முதலில் ஒன்று அல்லது இரு இரவுகள் தெருவில் வாழத் தொடங்கும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே தங்கும் நேரத்தை மெதுவாகக் கூட்டி, பின்னர் ஒரு கட்டத்தில் வீட்டிற்குத் திரும்புவதில்லை.[4]
சில சமயங்களில் தெருவாழ்க்கை அவர்களுக்கு வீட்டு வாழ்க்கையைவிட உடலளவிலும் மனத்தளவிலும் மேம்பட்டதாகத் தோன்றுகிறது. இதற்குக் மோசமான வீட்டுச் சூழ்நிலைதான் காரணமேயன்றி, தெருவின் நிலைமை மேம்பட்டதாக உள்ளது என்பதாகாது. தெருச் சூழ்நிலை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல.[4] வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர் தங்களது உறவினர் எவரேனும் தங்களை அடையாளம் கண்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்லக் கட்டாயப் படுத்தலாம் என்ற பயத்தினால் குழந்தைகள் அடிக்கடித் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பர்.[6]
தெருவோரக் குழந்தைகள் தமது தேவைகளைத் தாமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதால், வேலை அவர்களுக்கு அவசியமானது.[2] அரசால் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாத பிரிவுகளில் வேலை செய்வதால் அங்கு அவர்களின் நிலை மோசமாக உள்ளது.[3] மும்பையில் 50,000 தெருவோரக் குழந்தைகள் சட்டத்துக்குப் புறம்பாக 11,750 வெவ்வேறு வகையான உணவகங்களில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். [9] பெற்றோர் மற்றும் சட்டப் பாதுகாப்பு இல்லாததால் பெரும்பாலும் முதலாளிகள் இவர்களைச் சிறைக் கைதிகளைப் போல அடைத்து வைத்து மிகக் குறைந்த சம்பளத்துக்கு அதிகப்படியான வேலை வாங்கித் துன்புறுத்துகின்றனர்.[2] வேலையாட்களை மோசமாக நடத்தாத முதலாளிகளோ, தெருவோரக் குழந்தைகளை வேலைக்கமர்த்துவது ஆபத்து எனக் கருதி அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதில்லை.[2]
முதலாளிகள் தரும் கூலி மிகவும் சொற்பமாக இருப்பதால் பெரும்பாலான தெருவோரக் குழந்தைகள் சுயவேலை அல்லது பல்வேறான வேலைகளைச் செய்கின்றனர்.[2] பெரும்பான்மையோர் சுயவேலை பார்ப்பவர்களாகவே உள்ளனர்.[3] அவர்கள் பொதுவாகச் செய்யும் வேலை நெகிழி, தாள், மாழை போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் குப்பைகளிலிருந்து பொறுக்குவதாகும்.[6]
செய்யும் இதர வேலைகள்:
மகிழுந்துகளைத் துடைத்தல்; பலூன் அல்லது இனிப்புப் பொருட்கள் விற்றல்; செய்தித்தாட்கள் அல்லது பூ விற்றல்; காலணிகளைத் துடைத்து மெருகேற்றல்; சிறு உணவகங்கள் அல்லது தெருவோர உணவுக் கடைகளில் வேலை பார்த்தல்; கட்டுமானப் பணி அல்லது தானுந்துப் பட்டறைகளில் எடுபிடி வேலை; பிச்சை எடுத்தல்.[2][5] மிகக் குறைந்த விகிதத்திலான தெருவோரக் குழந்தைகள் திருடுதல், பணப்பைகளைக் கத்தரித்து பணம் திருடுதல், போதைப்பொருள் விற்றல், பாலியல் தொழில் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர்.[2][5][6] வெவ்வேறான வேலைகளில் ஈடுபடும் இவர்களின் வேலை நேரவளவு ஒரு நாளைக்கு 8–10 மணியாக உள்ளது[2]
தெருவோரக் குழந்தைகளின் வருமானம் ஒரே அளவாக இருப்பதில்லை. குறைந்தபட்சத் தேவைகளுக்குத்தான் போதுமானதாக இருக்கும்[2][3] இந்தியாவில் பெரும்பாலான தெருவோரக் குழந்தை மாதத்திற்கு 200 முதல் 830 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இதில் சிறுகுழந்தைகளைவிட மூத்த குழந்தைகளே அதிகமாக சம்பாதிக்கின்றனர்.[6] இதேபோல முதலாளிகளின்கீழ் வேலைசெய்யும் குழந்தைகளைவிட சுயவேலை செய்யும் குழந்தைகள் அதிகமாகச் சம்பாதிக்கின்றனர்.[2] இக்குழந்தைகளின் முக்கிய செலவான உணவுச் செலவு நாளொன்றுக்கு 5-10 ரூபாயாக உள்ளது.[2] உணவுக்காகும் செலவைக் குறைப்பதற்காகப் பல குழந்தைகள் தேநீர் மட்டும் அருந்திப் பசியாற்றிக் கொள்கின்றனர்.[2]
மூத்த குழந்தைகள் அல்லது காவல்துறையினர் இவர்களது பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்பதால், உணவிற்காகச் செலவு செய்யாமல் வைத்திருக்கும் பணத்தை வேறுவழிகளில் விரைவாகச் செலவு செய்து விடுவார்கள்.[3] பணத்தைச் சேமிக்கும் பழக்கம் இல்லாமல் போவதால் அவசரத் தேவைகளின்போது பண நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.[6] எப்போதாவது தங்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்பும் இவர்கள் மீதமாகும் பணத்தைப் பெரும்பாலும் பொழுதுபோக்குகளில் செலவிடுகிறார்கள்[2]
பலர் திரைப்படங்கள் பார்ப்பதற்கு மாதமொன்றுக்கு 300 ரூபாய் செலவிடுகின்றனர். பெரிய குழந்தைகள் புகைபிடித்தல், புகையிலை, மது, போதைமருந்துகள் போன்றவற்றுக்குச் செலவிடுகின்றனர்.[6] உடைக்காக இவர்கள் அதிகம் செலவிடுவதில்லை. சிலருக்கு வேலைசெய்யும் இடங்களில் வேலைக்கான உடை வழங்கப்படும். சிலருக்கு குடும்பத்தினர் எப்போதாவது உடைகள் வாங்கித்தருகின்றனர். பெரும்பாலான தெருவோரச் சிறுவர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக அரைகுறை அல்லது கிழிந்த பழைய உடைகளோடு காணப்படுகின்றனர்.[2]
இந்தியாவில் தெருவோரக் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு மிகவும் குறைவு. [3] 1989 இல் மும்பையில் தெருவோரக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 54.5 சதவீதத்தினர் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை என்றும் 66 சதவீதத்தினர் எழுத்தறிவற்றவர்கள் எனவும் கண்டறியப்பட்டது.[3] மீண்டும் 2004 இல் நடத்தப்பட்ட ஆய்விலும் அக்குழந்தைகளின் கல்வியறிவு நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. அந்த ஆய்வறிக்கையின்படி, 60 சதவீதத்தினர் பள்ளிக்குச் செல்லாதவர்கள்; கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் எழுத்தறிவற்றவர்கள். 30 சதவீதம் பேர் தொடக்கக் கல்விப் பள்ளியிலும் 10 சதவீதம் நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்கள்.[6]
இதர குழந்தைகளுக்குக் கிடைக்கும் குடும்ப ஆதரவும் மன மற்றும் பண ஆதரவும் இந்தியாவின் தெருவோரக் குழந்தைகளுக்கு கிடைக்காததால் அவர்கள் எளிதில் பலவிதமான தாக்குதகளுக்கு உள்ளாகக் கூடிய நிலையில் உள்ளனர்.[11]வாழ்வில் சந்திக்கும் இன்னல்களை எதிர்கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். சிலர் முரட்டுத்தனமான வெளித்தோற்றம் மற்றும் அதிக சுதந்திரமான நடத்தையைக் கொள்கின்றனர். .[2] எப்பொழுதும் சுற்றுப்புற நிலையை விழிப்புடன் கவனித்து பாதுகாப்புக்காகப் போரட வேண்டியுள்ளது.[3] இதனால் புதுப்புது அடையாளங்களை உண்டாக்கிக் கொள்ளுதல், வன் தாக்குதல், லாபநோக்கில் உறவுகளை எதிர்கொள்வது போன்ற குடும்பங்களோடு வாழும் குழந்தைகளுக்கில்லாத பண்புகளைப் பழகிக் கொள்கின்றனர்.[11]
பெரும்பாலான தெருவோரக் குழந்தைகள் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு நல்லவிதமான உத்திகளைக் கையாள்கின்றனர். வெகுசிலர் மது அருந்துதல், போதை மருந்துகள் உட்கொள்ளல், பாலியல் தொழிலாளிகளிடம் செல்லல் போன்ற முறைகேடான வழிகளை மேற்கொள்கின்றனர்.[6] இக்குழந்தைகள் முழுவதுமாக தனியே இல்லாமல் அவர்களுள்ளான குழுக்களாக வாழ்கின்றனர்.[3] இந்தக் குழுக்களுக்கு ஒருவர் தலவராக இருப்பார். ஒவ்வொரு குழுவும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தைத் தமதாகக் கொண்டிருக்கும். ஆனால் இவ்விதம் குழுக்களாக இருக்கும்போது வயதில் சிறிய குழந்தைகளைத் திருடுதல் போன்ற சட்டப்புறம்பான செயல்களுக்கு பெரிய குழந்தைகள் ஈடுபடுத்துகின்றனர்.[10] உடல்நிலை சரியில்லாமல் போகும்போது கவனித்துக் கொள்ளவும், பணமில்லாதபோது கொடுத்துதவவும், வேலை குறித்த விபரங்களை அறிந்து கொள்ளவும் தங்களது நண்பர்களையே சார்ந்துள்ளதாக மும்பையின் தெருவோரக் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.[6] கிடைக்கக்கூடிய ஓய்வு நேரங்களைத் தங்களது நண்பர்களுடன் (திரைப்படங்களுக்குச் செல்லல்) செலவிடுகின்றனர்.[6]
தெருவோரக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் முக்கியமானது பெரியோர்களின் பாதுகாப்பும் வழிகாட்டலுமாகும்.[2] சிலர் இந்தத் தேவையை நிறைவுச் செய்யக்கூடிய நபர்களைத் தாங்களே தேடிக் கொள்கின்றனர். பெரும்பாலான குழந்தைகள் தாங்களாகவோ அல்லது நண்பர்களோடோ வாழும்போது, ஒரு சிலர் தெருவோரங்களில் அல்லது சேரிகளில் வாழும் குடும்பங்களோடு தொடர்பு கொண்டு அக்குடும்பங்களைத் தங்களுக்கான மாற்றுக் குடும்பகளாக ஏற்கின்றனர்.[6] பல குழந்தைகள் உடல்நிலை சரியில்லாதபோது கவனித்துக் கொள்ளவும், நலனில் அக்கறை காட்டவும் தாய் போன்ற ஒரு நபரைத் தேடிக் கொள்கின்றனர்.[6]
தெருவோரக் குழந்தைகளுக்கு சத்தான உணவு, சுகாதரம், மருத்துவப் பேணல் கிடைப்பதில்லை.[6][9] சிறுசிறு உணவகங்களில் மீதமாகும் உணவுகளையும் குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் உணவுகளையுமே நம்பி வாழ்கின்றனர்.[6] 1990 இல் மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெருவோரக் குழந்தைகளில் 62.5 விழுக்காட்டினர் உணவகங்களில் கிடைக்கக் கூடிய உணவினை உண்பதாகக் கண்டறியப்பட்டது.[9]
சுத்தமான கழிப்பறை, குளியலறை மற்றும் தண்ணீர் கிட்டாமையும் இக்குழந்தைகளின் நலக்கேட்டுக்குக் காரணமாகும். மேலே கூறப்பட்ட அதே ஆய்வில் மும்பையின் தெருவோரக் குழந்தைகளில் 29.6 விழுக்காட்டினர் கடலிலும் 11.5 விழுக்காட்டினர் குழாயடிகள், கிணறுகள், வாய்க்கால்களில் குளிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருவோரக் குழந்தைகள் திறந்த வெளிகளில் குளிக்கும் காட்சி இந்தியாவின் பலபகுதிகளிலும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்றாக உள்ளது. இக்குழந்தைகளில் 26.4 விழுக்காட்டினர் தொடருந்துப் பாதைகள் அல்லது தெருவோரங்களையே கழிவறைகளாகப் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் தேவைக்கு, 69.1 விழுக்காட்டினர் உணவு விடுதிகளைக் கேட்பதாகவும் 15.6 விழுக்காட்டினர் தண்ணீர்க் குழாய்களைச் சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்[9]
இந்தியாவின் பெரும்பான்மையான தெருவோரக் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.[6] மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே காயம்படும்போது அல்லது உடல்நலக் குறைவின்போது மருத்துவ உதவி கிடைக்கிறது. வெகுசிலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.[9]
பல ஆய்வுகளில், தெருவோரக் குழந்தைகள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2002 இல் கொல்கத்தாவின் தெருவோரக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 554 குழந்தைகளில் 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது அறியப்பட்டது.[5] பற்சொத்தை[5], சரியான குளிர்கால ஆடைகள் இல்லாத காரணத்தால் குளிர்கால நோய்த் தாக்குதலுக்கும் இக்குழந்தைகள் ஆளாகின்றனர்.[6]
தெருவோரக் குழந்தைகள் அடிக்கடி நிந்தனைகளுக்கும் மிரட்டலுக்கும் உள்ளாகின்றனர்.[3] சமூக அந்தஸ்தும் பெரியவர்களின் பாதுகாப்பும் இல்லாததால் பிறரது அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகித் துன்புறுவதாக அக்குழந்தைகள் கூறுகின்றனர்.[2][3] காவற்துறையினரும் பொதுமக்களும் அவர்களிடம் காட்டும் ஏளனமும் எதிர்நிலையுமே இதற்கு முக்கியக் காரணியாகும்[4]
காவற்துறையினரால் நிந்திக்கப்படுவதாக இக்குழந்தைகள் முறையிடுகின்றனர்.[2][3][8] சில இடங்களில் வேலைபார்ப்பதற்கு அனுமதியாக, காவற்துறையினர் மாமூல் கேட்டு வற்புறுத்துவதாகவும் இக்குழந்தைகள் முறையிடுகின்றனர்[2][3][8] இக்குழந்தைகளை ஓடுகாலிகளென காவற்துறையினர் கைது செய்கின்றனர். கைதாவதை முறையாக எதிர்கொள்ள முடியாத இவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு, காவற்துறையினருக்கு கையூட்டு அளிக்க வேண்டும் அல்லது அக்கடன் அடையும்வரை காவல்நிலையங்களில் வேலைசெய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது[6] மும்பையில் அரசு ஆதரவுடன் எடுக்கப்பட்ட “பிச்சைகாரர் நடவடிக்கை“யில் (“Operation Beggar”) தெருக்குழந்தைகள் அனைவரும் ஒன்றுதிரட்டப்பட்டு கடன்பட்ட அடிமைவேலையாட்களாக ஆக்கப்பட்டனர்[4]
இக்குழந்தைகள் குறித்த காவற்துறையினரின் பார்வை; எங்கும் பரவியுள்ள ஊழல்; காவற்துறையின் வன்முறை கலாச்சாரம்; முறையான சட்டப்பாதுகாப்பின்மை; காவற்துறையினருக்குக் கிடைத்துள்ள தண்டனையற்ற நிலை ஆகியவை காவற்துறையினர் தெருவோரக் குழந்தைகளை மோசமாக நடத்துவதற்கான காரணிகளாகும்.[8] இளங்குற்றவாளிகளைக் காவற்சிறையில் அல்லது சிறைச்சாலைகளில் அடைத்து வைப்பது சம்மு (நகர்) மற்றும் காஷ்மீர் தவிர்த்த பிற இந்திய மாநிலங்களில் இளவர் நீதிமுறைச் சட்டப்படி குற்றமாகுமென்றாலும் இது வெகுவாகப் பின்பற்றப்படுவதில்லை.[8]
தெருவோரக் குழந்தைகளுக்கு நேரும் பல்வேறு அவலங்களையும் அவை எவ்வாறு வேறு காரணிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் குறித்த புதிய நோக்கை, 2009 இல் செய்ப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வழங்குகிறது.[10] பொதுவான நிந்தித்தல் மற்றும் புறக்கணிப்பு, உடல்நலம்சார் நிந்தித்தல், வார்த்தைகளால் நிந்தித்தல், அடி, உதை போன்ற உடல்சார் நிந்தித்தல், உளரீதியாக நிந்தித்தல், பாலியல் நிந்தித்தல் எனத் தாங்கள் சந்திக்கும் ஐந்து வகையான அவலங்களை இக்குழந்தைகள் இந்த ஆய்வில் முறையிட்டுள்ளனர்.[10]
இந்தியாவில் தெருவோரக் குழந்தைகள் இருப்பதென்பது, சமூகப் பிழைச் செயற்பாடு மற்றும் சரியான சமயத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாத சமூகப் பொருதார வரிசையின் வெளிப்பாடாகும்.[3] இக்குழந்தைகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர்களின் நிலைமைக்கான காரணங்களை ஆய்ந்தறிவதே சரியான வழியாக இருக்குமென அறிஞர்கள் கருதுகின்றனர்.[1][3] மேலும் இக்காரணிகளைக் கண்டறிந்தததும் அவர்களின் நிலையை மேம்படுத்த உடனடி உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.[3]
இந்திய அரசால் தெருவோரக் குழந்தைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பல பொதுக்கொள்கைகள் பயனற்றவையாக இருப்பதற்குக் காரணம் அவை சமூக, மானிட, புவியியல்சார் ஆய்வுகளால் உருவாக்கப்பட்டு சரியான முறையில் அக்குழந்தைகளின் சிக்கல்களை அறிந்து மதிப்பீடு செய்யாததே ஆகும்.[1]
1997 க்கு முந்தைய விடுதலைக்குப் பின்னுள்ள இந்தியாவின் அதிகாரபூர்வ சொல்லகராதியில் “தெருவோரக் குழந்தை” என்ற சொல்லே கிடையாது. தெருவில் வேலைசெய்யும் குழந்தைகளுடன் அவர்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டதால் தெருவோரக் குழந்தைகளும் சிறிதளவு உதவி பெற்றனர்.[3] எடுத்துக்காட்டாக, காவற்துறையின் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்காகத் தெருவில் வேலைசெய்யும் குழந்தைகளுக்குத் தரப்பட்ட அடையாள அட்டைகள் இக்குழந்தைகளுக்கும் தரப்பட்டது.[3] 1990 களின் துவக்கத்தில் அரசுசாரா அமைப்புகளின் நெருக்கடியால் இந்திய அரசு “தெருவோரக் குழந்தைகளுக்கான உதவித் திட்டம்” ஒன்றை பிப்ரவரி 1993 இல் உருவாக்கியது.[5] பல அரசுசாரா அமைப்புகள் அரசுடன் சந்திப்புகளை நடத்தி இத்திட்டத்தின் பின்னூட்டங்களையும் மேம்படுத்தும் ஆலோசனைகளையும் வழங்கியும் இத்திட்டத்தின் இறுதி வரைவில் அவை இடம்பெறவில்லை. அதனால் அரசுசாரா அமைப்புகளால் இந்திட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.[5]
தெருவோரக் குழந்தைகளுக்கான அரசுத் திட்டம் துவக்கப்பட்டதன் தொடர்ச்சியாக வேறு சில கொள்கைகள் மற்றும் திட்டங்களிலும் அவர்கள் இடம்பெற்றனர். இந்திய குழந்தை நலக் கழகம் தனது திட்டங்களில் தெருவோரக் குழந்தைகளையும் இணைத்தது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆறு பெருநகரங்களிலுள்ள குழந்தைகளுக்கான திட்டம் இடம்பெற்றது.[2] இந்தியத் தொழிலாளர் அமைச்சகம் தனது வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிகழ்ச்சிகளில் தெருவோரக் குழந்தைகளையும் சேர்த்த்துக் கொண்டது அப்பயிற்சிகளுக்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதிகூட அக்குழந்தைகளுக்கு இல்லாததால் அம்முயற்சி அதிக வெற்றிபெறவில்லை.[11]
அறிஞர்களும் முகமைகளும் தெருவோரக் குழந்தைகளுக்கு உதவும் உத்திகளாகப் பரிந்திரைத்தவற்றில் முக்கியமானது அரசுசாரா அமைப்புகளைப் பயன்படுத்துவதாகும். யூனிசெப்பின் ஏ. பி. போசும், தெருவோரக் குழந்தைகள் கூட்டமைப்பின் சாரா தாமசு டி பெனிடெசும் இக்குழந்தைகளுக்கு உதவும் முக்கியப் பொறுப்பு அரசுசாரா அமைப்புகளிடம் தரப்படவேண்டும், அதற்கான செலவை அரசு ஏற்க வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றனர்.[1][3] அரசைவிட, அரசுசாரா அமைப்புகள் இளக்கமாக இயங்கமுடியும் என்பதால் அவர்களே பல்வேறு சூழ்நிலைகளிலும் தெருவோரக் குழந்தைகளின் தேவைகளுக்கு உதவும் திறனுடையவர்களாவர்.[2]
அரசுசாரா அமைப்புகள் தெருவோரக் குழந்தைகள் பற்றிய துல்லியமான தரவுகளைப் பெற்று தேவையான திட்டங்களை உருவாக்குவதற்கு பல்வேறு நகரங்களிலும் தெருவோரக் குழந்தைகளின் கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைக்கிறது.[8] இவ்வமைப்பு, தெருவோரக் குழந்தைகள் மீதான காவற்துறையின் நிந்தனை மற்றும் கொலைகள் குறித்த தனது ஆய்வில் இக்குழந்தைகளின் பாதுகாப்பிற்கானப் பல்வகையான சட்டப் பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரைகளில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுறுதி செய்யும்வகையில் ஒரு தெருவோரக் குழந்தையைக் காவலில் வைக்கப்படும்போது அக்குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 53 மற்றும் 54 இரண்டும் திருத்தப்பட வேண்டும்; நிந்தனைகளுக்கு எதிராக முறையீடு செய்யவும் வழக்குத் தொடரவும் வகையுள்ளவாறு இளவர் நீதிமுறைச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் அடங்கும்.[8]