இந்தியாவில் வங்கித்தொழில்

இந்தியாவில் ஒழுங்குசீரான வங்கி துறையின் கட்டமைப்பு - வங்கிகளின் எண்ணிக்கை அடைப்பு குறியீட்டில் உள்ளன.

இந்தியாவில் வங்கித்தொழில் முதன்முதலாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் துவங்கியது. இந்தியாவின் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும், அது 1806 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இந்திய ஸ்டேட் வங்கி ஓர் அரசுடைமை வங்கியும், நாட்டின் மிகப்பெரும் வணிக வங்கியுமாகும். மைய வங்கித்தொழிலின் பொறுப்புகளை மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது , 1935 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய இம்பீரியல் வங்கியிடமிருந்து இந்த பொறுப்புகளை முறைப்படி பெற்றுக்கொண்டதும், அதனை வணிகவங்கியாகச் செயல்படும் நிலைக்கு மாற்றியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபின், ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டு, அதற்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம், 14 மிகப்பெரும் வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது; அதேபோல் 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு அடுத்த மிகப்பெரும் வங்கிகளை அரசுடைமையாக்கியது.

தற்சமயம், இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் (ஷெட்டியூல்ட் வணிக வங்கிகள்) (எஸ்சிபிகள்) உள்ளன. 27 பொதுத்துறை வங்கிகள் (அதாவது, இந்திய அரசாங்கம் தன்வசமே பணயப்பிணைப்பு வைத்துள்ளது), 31 தனியார் வங்கிகள் (அவை அரசாங்க பணயப்பிணைப்பு பெறாதவை; பொதுப்படையாக பட்டியலில் உள்ளவை மற்றும் பங்குச் சந்தையில் வணிகம் புரிய அதிகாரம் பெற்றவை ஆகும்) மற்றும் 38 அயல் நாட்டு வங்கிகளும் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த ஒரு வலையமைப்பாக ஆக மொத்தம் 53,000 கிளைகள் மற்றும் 17,000 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) கொண்டு செயல்படுகின்றன. ஐசிஆர்ஏ லிமிடெட் என்னும் ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொதுத்துறை வங்கிகள் வங்கித்தொழிலின் மொத்த சொத்துக்களில் 75% பங்கையும், தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் முறையே 18.2% மற்றும் 6.5% பங்குகளையும் வைத்துக்கொண்டுள்ளன.

தொடக்ககால வரலாறு

[தொகு]

இந்தியாவில் வங்கித்தொழில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் முதன்முதலாகத் துவங்கியது. 1786 ஆம் ஆண்டில் தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான், ஆகியவை முதலில் துவங்கப் பெற்றாலும், தற்பொழுது அவ்வங்கிகள் செயல்பாட்டிலில்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும. அது முதன்முதலில் ஜூன் 1806 ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் கொல்கத்தா என்ற வங்கியிலிருந்து உருவானது. பின் உடனடியாக பேங்க் ஆஃப் பெங்கால் ஆக மாறியது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ் நிறுவப்பெற்ற மூன்று தலைமை மாநிலத்துக்குரிய வங்கிகளில் இந்த வங்கியும் ஒன்றாகும். இதர இரண்டு வங்கிகள் பேங்க் ஆஃப் பாம்பே மற்றும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகும். இந்த மூன்றுமே பல வருடங்களாகவே தலைமை வங்கிகளாகவும் பகுதிமத்திய வங்கிகளாகவும் இயங்கி வந்தன. அதற்குப் பிறகு வந்த வங்கிகளும் அவ்வாறே இயங்கின. 1921 ஆம் ஆண்டில் அந்த மூன்று வங்கிகளும் ஒருங்கிணைந்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவாக உருவெடுத்தன. பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றதும், இவை மூன்றும் இந்திய ஸ்டேட் வங்கியாக மாறியது.

கொல்கத்தாவில் உள்ள இந்திய வியாபாரிகள் 1839 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியை நிறுவினார்கள். ஆனால் 1848-49 ஆண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியால் அவ்வங்கி 1848 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்தது. 1865 ஆம் ஆண்டில் துவங்கி இன்றுவரை இயங்கி வரும் தி அலகபாத் வங்கி, இந்தியாவில் மிகப்பழமையான கூட்டு மூலநிதி வங்கியாகும். இருப்பினும் அது முதல் வங்கி அல்ல. அப்பெருமை பேங்க் ஆஃப் அப்பர் இந்தியாவிற்கே உரியது. அது, 1863 ஆம் ஆண்டில் தோன்றி, 1913 வரை நீடித்து, தோல்வி கண்டதும், அதன் சில சொத்துகளும் மற்றும் கடன்களும் அல்லியான்ஸ் பேங்க் ஆஃப் சிம்லாவிற்கு மாற்றப்பெற்றது.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் காரணமாக கூட்டமைப்பு மாகாணங்களில் இருந்து லங்காஷையருக்கு பஞ்சு ஏற்றுமதி தடைப்பட்டதும், இந்திய பஞ்சு வியாபாரத்திற்கு நிதி கடனாக வழங்க நிதி மேம்பாட்டாளர்கள் வங்கிகளைத் தொடங்கினர். ஊகபேரம் செய்யும் துணிகர முயற்சிகளுக்கு பெருமளவு இடம் கொடுத்தமையால், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் துவங்கிய பெரும்பாலான வங்கிகள் தொழிலில் தோல்வியைத் தழுவின. இதனால் நிதிவைப்பாளர்கள் பணமிழந்தனர். மேலும் வங்கிகளில் உள்ள வைப்புகளில் இருந்து பெறும் வட்டித்தொகையையும் இழந்தனர். அதன் விளைவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பல ஆண்டுகளுக்கு இந்தியாவில் வங்கித்தொழில் ஐரோப்பியர்களின் தனிப்பட்ட தளமாகவே இருந்தது.

1860 ஆண்டுகளில் குறிப்பாக கொல்கத்தாவில், அந்நிய வங்கிகள் கிளைகளைத் துவங்கின. 1860 ஆம் ஆண்டில் தி கம்போடிரே டி'எஸ்கம்ப்டே டி பாரிஸ் கொல்கத்தாவில் ஒரு கிளையையும், 1862 ஆம் ஆண்டில் பாம்பேயில் மற்றொரு கிளையையும் திறந்தது. அதைத் தொடர்ந்து மெட்ராசிலும், அந்நாளைய பிரெஞ்சு குடியிருப்பான பாண்டிச்சேரியிலும் கிளைகள் துவங்கப்பட்டன. 1869 ஆம் ஆண்டில் எச்எஸ்பிசி வங்கி தன்னை வங்காளத்தில் நிலை நிறுத்திக் கொண்டது. பிரித்தானிய பேரரசின் வர்த்தகத்தின் காரணமாக, இந்தியாவில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகமாக கொல்கத்தா விளங்கியதால், அந்நகரம் ஒரு வங்கித்தொழில் மையமாகவே மாறியது.

1881 ஆம் ஆண்டில் பைசாபாதில் துவங்கிய தி அவுத் வணிக வங்கிதான் முதல் முழுமையான இந்தியன் கூட்டு மூலநிதி வங்கியாகும். அது 1958 ஆம் ஆண்டில் தோல்வியைக் கண்டது. அடுத்து 1895 ஆம் ஆண்டில் லாகூரில் துவங்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, இன்றளவும் நிலைத்திருந்து, தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டு முடியும் தறுவாயில், இந்தியப் பொருளாதாரம் நிலைப்புத்தன்மை அடையும் காலகட்டத்தில் இருந்தது. இந்தியக் கலகம் நிகழ்ந்ததன்பின் ஐந்து பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, சமூகம், தொழில் துறை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் நன்கு வளர்ச்சி கண்டது. பெரும்பாலும் குறிப்பிட்ட இனத்தையும் மற்றும் சமயத்தையும் சார்ந்த சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் இந்தியர்கள் சிறு வங்கிகளை அமைத்தனர்.

ராஜதானி வங்கிகள் வங்கித் தொழிலில் மேலாதிக்கம் செய்து வந்தனவென்றாலும் ஒரு சில நாணய மாற்று வங்கிகளும், ஏராளமான இந்தியக் கூட்டு மூலநிதி வங்கிகளும் அமைந்தன. அனைத்து வகையான வங்கிகளும் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் இயங்கின. பெரும்பாலும் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமான நாணய மாற்று வங்கிகள், வெளிநாட்டு வணிகத்திற்கு நிதியளிப்பதில் முழுக்கவனம் செலுத்தின. பொதுவாக இந்தியக் கூட்டு மூலநிதி வங்கிகள் குறைவான மூலதனத்துடனிருந்ததால், ராஜதானி மற்றும் நாணய மாற்று வங்கிகளோடு போட்டியிடும் அளவுக்குப் போதுமான அனுபவமோ முதிர்ச்சியோ பெற்றிருக்கவில்லை. இந்த பிரிவினை கர்சன் பிரபுவை "வங்கித்தொழிலைப் பொறுத்த மட்டில் நாம் காலங்களில் மிகவும் பின் தங்கி இருக்கின்றோம். கனத்த மரத்தடுப்புகளால் தனித்தனியான இடைஞ்சல் மிகுந்த அறைகளாகப் பிரித்த பழைய பாணி பயணக்கப்பல்கள் போல் நாம் இருக்கிறோம்" என்று கூறவைத்தது.

1906 முதல் 1911 வரை, இடைப்பட்ட காலத்தில் சுதேசி இயக்கத்தால் ஊக்கமடைந்த வங்கிகள் தோன்றின. உள்ளூர் வணிகர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள், இந்திய சமுதாயத்தினருடையதும் இந்திய சமுதாயத்தினருக்காகவுமான வங்கிகளை நிறுவுவதற்கு சுதேசி இயக்கம் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது துவங்கப் பெற்ற பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல வங்கிகள் இன்றும் இயங்கி வருகின்றன.

சுதேசி இயக்கம் அளித்த ஊக்கத்தால், தெற்கு கனரா மாவட்டம் (தெற்கு கனரா) என்ற பெயரில் ஒருங்கிணைந்த தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்தில் பல வங்கிகள் தோன்றின. நான்கு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இந்த மாவட்டத்தில் தான் தொடங்கப் பெற்றன. மற்றும் ஒரு முன்னணி தனியார் துறை வங்கியும் இங்குள்ளது. எனவே பிரிவுபடாத தக்ஷிண கன்னட மாவட்டம் "இந்திய வங்கித்தொழிலுக்குத் தொட்டில்" எனப்பட்டது.

முதல்உலகப் போரில் இருந்து சுதந்திரம் பெறும்வரையில்

[தொகு]

முதல் உலகப்போர் நடைபெற்ற காலம் (1914-1918) தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த காலம் (1939-1945), அதன்பின் இந்தியா சுதந்திரம்பெறுவதற்கு முந்தைய இரண்டு வருட காலம் இந்திய வங்கித்தொழிலுக்குச் சவாலாகவே இருந்தன. கொந்தளிப்பாக இருந்த முதல் உலகப்போர் நடந்த வருடங்களில், போர் சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்திற்கு மறைமுகமான உந்துதல் இருந்தாலும், வீழ்ச்சியடைந்த வங்கிகள் போருக்குப் பலியாயின. 1913 முதல் 1918 வரையில், இந்தியாவில் குறைந்த பட்சம் 94 வங்கிகள், பின்வரும் அட்டவணையில் எடுத்துக்காட்டியது போல் தோல்வி கண்டன:

தோல்வியுற்ற வங்கிகள் எண்ணிக்கை
அங்கீகரிக்கப்பட்ட மூலதனம்
ரூ. லட்சங்கள்)
செலுத்தப்பட்ட மூலதனம்
ரூ. லட்சங்கள்)
1913 12 274 35
1914 42 710 109
1915 11 56 5.
1916 13 231 4.
1917 9 76 25
1918 7 209 1

சுதந்திரம் பெற்றபிறகு

[தொகு]

1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் பிரிவினை பஞ்சாப், மேற்கு வங்காள மாகாணங்களில், பல மாதங்களுக்கு வங்கி நடவடிக்கைகள் முடங்கும் அளவிற்கு, பொருளாதாரத்தில் எதிரிடையான விளைவுகளை உருவாக்கியது. இந்தியாவின் சுதந்திரம், வங்கித்தொழிலில் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாட்டு சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்திய அரசாங்கம் நாட்டின் பொருளியல் வாழ்க்கையில் தீவிரமாகப் பங்காற்றும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மேலும் 1948 ஆம் ஆண்டில் அரசு மேற்கொண்ட தொழில்துறைக் கொள்கைத் தீர்மானம், ஒரு கலப்புப் பொருளாதாரத்தை எதிர்நோக்கியது. இது வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பொருளியலின் பல்வேறுபட்ட பிரிவுகளில் மாநிலம் அதிகமாக ஈடுபடும்படியான விளைவுகளை உருவாக்கியது. வங்கித்தொழிலைக் கட்டுப்படுத்தும் முக்கியமான வழிமுறை நடவடிக்கைகள் பின்வருமாறு மேற்கொள்ளப் பெற்றன:

  • 1948 ஆம் ஆண்டில், இந்தியாவின் மைய வங்கி ஆணையமாகத் திகழ்ந்த இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக நாட்டுடைமை ஆக்கப் பெற்றது.
  • 1949 ஆம் ஆண்டில், வங்கித்தொழில் கட்டுப்பாட்டுச் சட்டம் நிறைவேறியதுடன் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) "இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த, மற்றும் கண்காணிப்பு ஆய்வு நடத்த" தேவைப்படும் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பெற்றது.
  • வங்கித்தொழில் கட்டுப்பாட்டுச் சட்டப்படி, ஒரு புதிய வங்கியோ, அல்லது ஏற்கனவே உள்ள வங்கியின் கிளையோ துவங்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டிய தாயிற்று. மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிகளில் பொதுவான இயக்குனர்கள் இருப்பது தடை செய்யப் பெற்றது.

எனினும், இந்த உடன்படிக்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருந்தும், இந்தியாவில் ஸ்டேட் வங்கி தவிர்த்த பிற வங்கிகள் தொடர்ந்து தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமாக இயங்கி வந்தன. 19 ஜூலை 1969 அன்று அரசாங்கம் முக்கிய வங்கிகளை தேசீய மயமாக்கிய பொழுது இந்த நிலைமை அடியோடு மாறியது.

தேசியமயமாக்கல்

[தொகு]

1960 களில், இந்திய வங்கித்தொழில்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய கருவியாகத் திகழ்ந்தது. அதே நேரத்தில், மிகவும் அதிக அளவில் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு துறையாக வங்கித் துறை உருவெடுக்க, வங்கித்துறையை நாட்டின் முன்னேற்றம் கருதி நாட்டுடமையாக்குவது பற்றி பேச்சுக்கள் எழுந்தன. அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் " வங்கிகளை தேசிய மயமாக்குதல் பற்றிய சிதறிய சிந்தனைகள்" எனும் தலைப்பிலான கருத்துருவில் இந்திய அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். அந்தக் கருத்துருவானது நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு, அவரது நடவடிக்கை துரிதமாகவும் மற்றும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இந்திய அரசாங்கம் ஜூலை 19, 1969 நள்ளிரவு முதல் பதினான்கு பெரிய வணிக வங்கிகளை நாட்டுடைமையாக்கும் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்தியது. இந்தியாவின் ஒரு தேசியத் தலைவரான ஜெயப்ரகாஷ் நாராயண், அந்த நடவடிக்கையை " அரசியல் விவேகத்தின் திறமையான வீரச்செயல்" என்று வர்ணித்தார். அவசரச் சட்டம் வெளியிட்ட இரண்டு வாரத்திற்குள் பாராளுமன்றம் வங்கித்தொழில் நிறுவனங்கள் (கைப்பற்றுதல் மற்றும் பொறுப்பு மாற்றுதல்) மசோதாவை நிறைவேற்றி, 9 ஆகஸ்ட் 1969 அன்று ஜனாதிபதின் ஒப்புதலையும் பெற்றது.

1980 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக மேலும் ஆறு வணிக வங்கிகளைத் தேசியமயம் ஆக்குவது தொடர்ந்தது. கடன் வழங்குவதில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவே இவ்வாறு செய்ததாக காரணம் கூறியது. இரண்டாவது முறையாக தேசியமயமாக்கப் பட்டபின், நாட்டின் வங்கித்தொழில் வணிகத்தில் 91% அளவை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்தியது. பின்னர் 1993 ஆம் ஆண்டில், அரசாங்கம் நியூ பேங்க் ஆஃப் இண்டியா வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்தது. அது தேசியமயமாக்கிய வங்கிகளுக்குள் நடந்த ஒரே இணைப்பாகும். இதனால், தேசியமயமாக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 20 லிருந்து, 19க்குக் குறைந்தது. இதன் பிறகு, 1990 ஆண்டுகள் வரையில், தேசியமயமாக்கிய வங்கிகள் 4% வளர்ச்சி வீதம் கண்டு இந்தியப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வீதத்திற்கு ஈடு கொடுத்தது.

2007-2009 ஆண்டுகளில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது இந்தியப் பொருளாதாரம் தாக்குப்பிடிப்பதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உதவின என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலரும் போற்றியுள்ளனர்.[1][2]

தாராளமயமாக்குதல்

[தொகு]

1990 ஆண்டுகளின் தொடக்கத்தில், அப்போதைய நரசிம்மராவ் அரசாங்கம் தாராளமயம் ஆக்கும் கொள்கையை செயல்படுத்தியது. அதன்படி சிறு எண்ணிக்கையில் தனியார் வங்கிகள் அமைக்க உரிமம் வழங்கியது. இவை புதிய தலைமுறை தொழில்-நுட்ப வங்கிகள் என்று வழங்கின. அந்த வரிசையில், குளோபல் டிரஸ்ட் வங்கி (முதன் முதலாக தோன்றிய புதிய தலைமுறை வங்கி) மேலும் பின்னர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உடன் இணைந்தது, ஆக்சிஸ் வங்கி (துவக்கத்தில் யுடிஐ பேங்க்), ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகிய வங்கிகள் அடங்கும். இத்தகைய புதிய நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியுடன் சேர்ந்து, அரசாங்க வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அந்நிய வங்கிகள் ஆகிய மூன்று பிரிவு வங்கிகளின் வலுவான பங்களிப்புடன் துரித வளர்ச்சியடைந்து வந்த இந்திய வங்கித்துறைக்கு மறு வலுவூட்டியது.

அயல் நாட்டினரின் நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான திட்டத்துடன் இந்திய வங்கித்தொழிலின் அடுத்த கட்ட நடவடிக்கை அமைந்தது. இதன் மூலம் அயல் நாட்டு முதலீட்டாளர்கள் தற்போதைய 10%ஐ விட அதிகமாக வாக்குரிமை வழங்கலாம். இது, தற்சமயம் சில வரம்புகளுடன் 74% வரை எட்டியுள்ளது.

இந்த புதிய கொள்கை இந்தியாவில் வங்கித்துறையை முற்றிலுமாகக் குலுக்கியது. வங்கியாளர்கள், இதுநாள் வரை 4-6-4 (கடன் வாங்குதல் 4%; கடன் கொடுத்தல் 6%; 4 மணிக்கு வீடு திரும்புதல்) என்ற செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்தனர். இந்த புதிய அலை பாரம்பரிய வங்கிகளின் பணியில் நவீன தோற்றத்தையும், தொழில்-நுட்ப அறிவுமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இவையெல்லாம் இந்தியாவில் சில்லறை வணிகம் பெருக வைத்தது. மக்கள் அவர்களின் வங்கிகளிடமிருந்து அதிகமாகக் எதிர்பார்ப்பது மட்டுமன்றி அவற்றிடமிருந்து அதிகமாக பெற்றுக் கொள்ளவும் செய்தனர்.

2007-களில் தனியார் வங்கிகளுக்கும் அயல் நாட்டு வங்கிகளுக்கும் இந்திய கிராமங்களைச் சென்றடைவது ஒருபெரும் சவாலாகவே இருந்தது. பொதுவாக வழங்கல், பொருள் வரிசை, மற்றும் இலக்கை அடைதல் ஆகியவற்றில் இந்திய வங்கித்தொழில் நன்கு முதிர்ச்சி பெற்றுள்ளது. சொத்துகள் தரம் மற்றும் போதிய மூலதன வசதி ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் வட்டாரத்த்தில் உள்ள மற்ற வங்கிகளைக் காட்டிலும் இந்திய வங்கிகள் தூய்மையான, வலிமையான, மற்றும் வெளிப்படையான கையிருப்புநிலை ஏடுகளை வைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி குறைந்த பட்ச அரசுத் தலையீடு கொண்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்திய ரூபாயை பொறுத்த மட்டில் இந்தியாவின் கொள்கையானது, எந்த குறிப்பிட்ட நாணய மாற்று விகிதமுமின்றி அதன் நிலையற்ற தன்மையைக் கையாள்வதாகும் - பெரும்பாலும் இதுவே உண்மையுமாகும்.

இந்தியப் பொருளாதாரம், குறிப்பாக சேவைப் பிரிவு, சில காலத்திற்கு வளர்ச்ச்சியடைந்து வலிமையாக இருப்பதை எதிர்பார்க்கும் தருவாயில், வங்கிச் சேவைகளுக்கு, குறிப்பாக சில்லறை வங்கி சேவை, அடமானம், மற்றும் முதலீட்டு சேவைகளுக்கான தேவைகளும் வலுவாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களிடையே சேர்க்கை, மற்றும் கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றன.

மார்ச் 2006 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி வார்பர்க் பின்க்கசுக்கு கோடக் மகிந்திரா வங்கியில் (ஒரு தனியார் துறை வங்கி) தனது பணயப் பிணைப்பை 10% அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. ஒரு முதலீட்டாளர் தனியார் துறை வங்கியில் பணயப் பிணைப்பை 5% மேலாக அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதுவே முதல்முறையாகும். ஏனெனில், எந்த ஒரு தனியார்துறை வங்கியிலும், 5% மேற்பட்ட பணயப் பிணைப்புகள் தம்மால் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்று 2005 ஆம் ஆண்டில் ஆர்பிஐ சில நெறிமுறைகளை அறிவித்தது.

வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனியார் கடன்களை வசூலிக்கும் முயற்சியில் அரசு-சார்பில்லாத வங்கிகள் வன்முறையாகச் செயல்படுவதாக சமீப ஆண்டுகளாக விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்தனர். வங்கிக்கடன் வசூல் முயற்சிகளால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த சக்தியற்றவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர் என்று செய்திப்பத்திரிகை அறிக்கைகள் வெளியிட்டன.[3][4][5]

கூடுதல் வாசிப்பு

[தொகு]
  • "பாரத ஸ்டேட் பேங்க் வளர்ச்சி" ( இந்திய இம்பீரியல் பேங்க் காலகட்டம்,1921-1955) (வால்யூம் III)
  • "வங்கித்தொழில் எல்லைகள்" - ஒரு மாதாந்திர சஞ்சிகை, மும்பையில் இருந்து வெளிவரும் க்லோகால் இன்போர்மட் பிரசுரிப்பது. பதிப்பாசிரியர்- மனோஜ் அகர்வால்

குறிப்புகள்

[தொகு]
  1. நிதித்துறைக் குறைபாடுகளிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பிஎஸ்யு வங்கிகளின் கொள்கைகள்: சிதம்பரம்.
  2. "பொதுத்துறை வங்கியின் முக்கியத்துவம்". Archived from the original on 2010-08-25. Retrieved 2010-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-03. Retrieved 2010-03-10.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-07-04. Retrieved 2010-03-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. http://www.indiatime.com/2007/11/07/icicis-third-eye/

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]