இந்திரா சென் (13 மே 1903 - 14 மார்ச் 1994) ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அம்மா ஆகியோரின் பக்தரும் உளவியலாளரும், எழுத்தாளரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். இவர் ஒருங்கிணைந்த உளவியலை நிறுவியவர் ஆவார்.
சென் பஞ்சாபின் ஜீலம் மாவட்டத்தில் (இப்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதி) பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். ஆனால், அவரது குடும்பம் டெல்லிக்குச் சென்றபோது அங்கு வளர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவர் ஆன்மீகத் தேடலில் ஆர்வம் காட்டினார். தில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் உளவியல் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
மேற்கொண்டு தனது படிப்பைத் தொடர்வதற்காக, ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும், தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மார்ட்டின் எய்டெக்கரின் சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்ட அவர் கோயின்கெஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இந்திய தத்துவம் மற்றும் சமஸ்கிருதம் கற்பித்தார். இந்த நேரத்தில், அவரது முக்கிய ஆர்வமானது எகலின் தத்துவம் மற்றும் கார்ல் யங்கின் உளவியல் ஆகியவற்றில் இருந்தது. பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு திரும்பினார். டிசம்பர் 1933 இல் அவர் இந்திய அறிவியல் காங்கிரஸிற்காக கல்கத்தாவுக்குச் சென்றபோது கார்ல் யங்கை சந்தித்தார்.[1] சென் இந்திய அறிவியல் காங்கிரசின் உளவியல் பிரிவின் தலைவரானார், மேலும் சுவாமி பிராணவந்தா உளவியல் அறக்கட்டளையின் கிழக்கு-மேற்கத்திய உளவியல் விரிவுரை விருதையும் பெற்றார் [2]
1945 ஆம் ஆண்டில், சென் தனது பல்கலைக்கழக பதவியை விட்டு வெளியேறி, ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்தார். அடுத்த ஆண்டுகளில், சொற்பொழிவுகள், வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் மூலம், ஸ்ரீ அரவிந்தரின் படைப்புகளை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கினார். இவ்வாறான இடங்களில் அரவிந்தரின் கல்வியியல் சிந்தனைகள் முதல் முறையாக நன்கு அறியப்பட்டது.
ஸ்ரீ அரவிந்தரின் யோக உளவியல் மற்றும் தத்துவத்தில் உள்ள உளவியல் அவதானிப்புகளை விவரிக்க, 1930 களின் நடுப்பகுதியில் இருந்து 1940 கள் மற்றும் 1950 கள் வரை வெளியிடப்பட்ட தொழில்முறை ஆய்வறிக்கைகளில், அவர் ஒருங்கிணைந்த உளவியல் என்ற வார்த்தையை உருவாக்கினார். [3] ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் போதனைகளில் வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்வியை உருவாக்குவதிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். [4]
வெளியீட்டிற்கு முன்னதாக ஸ்ரீ அரவிந்தருக்கும் பின்னர் அன்னைக்கும் அனுப்பப்பட்ட அவரது படைப்புகள் அறிவியல் மாநாடுகளில் வழங்கப்பட்டன அல்லது ஆசிரம பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. [5] இந்த படைப்புகளை அல்லது ஆவணங்களை ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையம் புத்தக வடிவில் ஒருங்கிணைந்த உளவியல்: ஸ்ரீ அரவிந்தரின் உளவியல் அமைப்பு என 1986 வரை வெளியிடவில்லை . இது இரண்டாவது பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 1970 களில் கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டெக்ரல் ஸ்டடீஸ் என்ற இடத்தில் ஒருங்கிணைந்த ஆலோசனை உளவியல் திட்டத்தை நிறுவியபோது, ஒருங்கிணைந்த உளவியல் துறை பின்னர் ஹரிதாஸ் சவுத்ரி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது.
அன்னையின் மேற்பார்வையின் கீழ் ஆசிரமத்திற்கான மூன்று மையங்களை உருவாக்குவது சென்னின் மற்றொரு பணியாகும். ஜ்வாலப்பூர் அருகே அரித்வாருக்கு அருகே ஜ்வாலப்பூர், குமாவுன் கோட்டத்தில் "மலைவாழ் சொர்க்கம்" என்ற பழத்தோட்டத்தையும், மற்றும் ஆன்மீக சாதனை செய்வதற்கு ஏதுவான "டேபோகிரி" என்ற இடத்தையும் உருவாக்குவதில் மிகவும் உறுதியுடனும் இருந்தார்.
சென்னின் அனைத்து படைப்புகளிலும், ஒருங்கிணைந்த மற்றும் முழுமையின் கருப்பொருள்கள் மிகவும் முக்கியமானவை, மேலும் அவர் "ஒருங்கிணைந்த கலாச்சாரம்" மற்றும் "ஒருங்கிணைந்த மனிதன்" போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தினார். [6] இந்திய உளவியலில் "வாழ்க்கையின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை நோக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன" [7] மேலும், உளப்பகுப்பாய்வை விமர்சனப் பார்வையுடன் மனவெழுச்சி சார்ந்த பிரச்சனையாகப் பார்க்காமல் உற்றுநோக்கினார். [8]