இந்துலால் யாக்னிக் | |
---|---|
![]() | |
பிறப்பு | நாடியாத், கேதா, குசராத்து | 22 பெப்ரவரி 1892
இறப்பு | 17 சூலை 1972 அகமதாபாத் | (அகவை 80)
மற்ற பெயர்கள் | இந்து சாச்சா |
கல்வி | இளங்கலை, சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | குசராத்து கல்லூரி, அகமதாபாத்; புனித சேவியர் கல்லூரி, மும்பை |
பணி | சுதந்திர ஆர்வலர், அரசியல்வாதி, பிரிவினைவாதி, எழுத்தாளர், ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1915–1972 |
பணியகம் | மாம்பே சமாச்சார் |
அமைப்பு(கள்) | குசராத் விவசாயிகள் சங்கம், மகாகுசராத் ஜனதா பரிசத், நூதன் மகாகுஜரத் ஜனதா பரிசத் |
அறியப்படுவது | மகாகுஜராத் இயக்கத்தை முன்னெடுத்தவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆத்மகதா ,சுயசரிதை (குசராத்தி: આત્મકથા) |
பெற்றோர் | கன்யாலால் யாக்னிக் (குசராத்தி: કનૈયાલાલ યાજ્ઞિક) |
இந்துலால் கன்யாலால் யாக்னிக் (Indulal Kanaiyalal Yagnik) (1892 பிப்ரவரி 22 - 1972 சூலை 17) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், அகில இந்திய விவசாயிகளின் சங்கத்தின் தலைவருமாவார். மேலும் 1956 ஆகத்து 8, அன்று குஜராத்துக்கு தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முன்னெடுத்த மகாகுசராத் இயக்கத்திற்கு தலைமை தாங்கியவருமாவார். [1] இவர் இந்து சாச்சா என்றும் அழைக்கப்படுகிறார். [2] இவர் ஒரு எழுத்தாளராகவும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தார்.
1957 ஆம் ஆண்டில் முன்னாள் பம்பாய் மாநிலத்தில் அகமதாபாத் தொகுதியிலிருந்து இரண்டாவது மக்களவைக்கு யாக்னிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962-1972 வரை அதே தொகுதியில் இருந்து மூன்றாவது, நான்காம் மற்றும் ஐந்தாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
யாக்னிக் இந்தியாவின், குசராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்திலுள்ள ஜகதைய்ய போல் என்ற ஊரில் பிறந்தார். [4] இவரது பள்ளி வயதிலேயே இவரது தந்தை இறந்து போனார். இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நாதியாத்தில் முடித்தார். மேலும் 1906-ல் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பின்னர், அகமதாபாத், குசராத் கல்லூயில் சேர்ந்தார். இடைநிலைக் கல்வியில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், மும்பையின் புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1912 இல், இவர் சட்டத்தில் பட்டம் பெற்றார். [3]
யாக்னிக் தனது கல்லூரி நாட்களில் அன்னி பெசண்ட் மீது ஆழ்ந்த தாக்கத்தை கொண்டிருந்தார். 1915 ஆம் ஆண்டில், ஜம்னாதாசு துவாரகதாசு மற்றும் சங்கர்லால் பேங்கர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு, மும்பையிலிருந்து யங் இந்தியா என்ற ஆங்கில மொழி இதழை வெளியிட்டார். [3] [5] அதே ஆண்டில், நவஜீவன் அனே சத்யா என்ற குசராத்தி மாத இதழ் தொடங்கப்பட்டது. யாக்னிக் அதன் ஆசிரியராக 1919 வரை பணியாற்றிய பின்னர், அப்பத்திரிக்கையை மகாத்மா காந்தியிடம் ஒப்படைத்தார். காந்தி தனது சுயசரிதையின் முதல் 30 அத்தியாயங்களை ஏர்வாடா மத்திய சிறையில் இருக்கும் போது எழுதினார். [6]
இந்துலால் யாக்னிக் அதே ஆண்டில் இந்திய சேவகர்கள் சங்கத்தில் சேர்ந்தார். ஆனால் 1917 இல் அங்கிருந்து வெளியேறி தன்னாட்சி இயக்கத்தில் சேர்ந்தார். [3] 1918 இல், காந்தி தலைமையிலான கேதா சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்றார். [7] 1921 இல் இவர் குசராத் காங்கிரசு கட்சியின் செயலாளரானார்.1922 அக்டோபரில் யுகதர்மம் என்ற மற்றொரு குசராத்தி மாத இதழைத் தொடங்கினார். இவர் 1923 ஏப்ரல் முதல் மார்ச் 1924 வரை ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். 1924–28 வரை, மும்பையிலிருந்து வெளிவந்த இந்துஸ்தான் என்ற குசராத்தி நாளேட்டின் ஆசிரியராக இருந்தார். 1926-27 காலக்கட்டத்தில், இவர் தி பாம்பே குரோனிக்கிளின் உதவி ஆசிரியராகவும் இருந்தார். இவர் 1930-35 வரை ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் சென்று வந்தார்.
1936 ஆம் ஆண்டில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை அமைப்பதில் தீவிர முயற்சி எடுத்து அதன் முதல் அமர்வில் பங்கேற்றார். [8] 1939 இல் குசராத் விவசாயிகள் சங்கத்தை நிறுவினார். 1940-41 காலப்பகுதியில் இவர் தனது போர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஆண்டமர்வுக்கு இவர் தலைமை தாங்கினார். இவர் நூதன் குசராத் என்ற குஜராத்தி நாளேட்டினை 1943 இல் தொடங்கினார். [3]
1956 ஆம் ஆண்டில், யாக்னிக் ஒரு தனி குசராத் மாநிலத்திற்காக மகாகுசராத் இயக்கத்தை வழிநடத்திய மகாகுசராத் ஜனதா பரிசத்தின் நிறுவனர் தலைவரானார். [3] 1957 ஆம் ஆண்டில், அகமதாபாத் தொகுதியில் இருந்து 2 வது மக்களவைக்கு மகாகுசராத் ஜனதா பரிசத்தின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 மே 1, அன்று குசராத் மாநிலம் உருவான பிறகு, மகாகுசராத் ஜனதா பரிசத் கலைக்கப்பட்டது. [9] 1960 சூனில் நூதன் மகா குசராத் ஜனதா பரிசத்தை நிறுவினார். மேலும் 1962 இல் 3 வது மக்களவைக்கு அதன் வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1972 சூலை 17 அன்று அகமதாபாத்தில் காலமானார்.