இமான்சு ராய் | |
---|---|
இமான்சு ராய் | |
பிறப்பு | 1892 கட்டக், வங்காள மாகாணம், பிரிட்டிசு இந்தியா |
இறப்பு | மே 16, 1940 | (அகவை 47–48)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர், இயக்குநர் |
வாழ்க்கைத் துணை | மேரி ஐன்லின் (தி. 1924; divorce 1926) தேவிகா ராணி (தி. 1928; his death 1940) |
பிள்ளைகள் | நில்மா (1926-1997) |
இமான்சு ராய் (Himanshu Rai) (1892 -16 மே 1940) இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான இவர் நடிகை தேவிகா ராணியுடன் சேர்ந்து 1934 ஆம் ஆண்டில்பம்பாய் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு அரங்கத்தை நிறுவியவர் என அறியப்படுகிறார். காடஸ் (1922), தி லைட் ஆஃப் ஆசியா (1925), ஷிராஸ் (1928), எ த்ரோ ஆஃப் டைஸ் (1929) மற்றும் கர்மா (1933) உள்ளிட்ட பல திரைப்படங்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். தேவிகா ராணியை (1908-1994) திருமணம் செய்து கொண்டார்.
ஒரு பிரபுத்துவ பெங்காலி குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பிற்காக சாந்திநிகேதனில் பல ஆண்டுகள் கழித்தார். கொல்கத்தாவிலிருந்து சட்டப் பட்டம் பெற்ற பிறகு, இவர் ஒரு வழக்கறிஞராக இலண்டன் சென்றார். அங்கு நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நிரஞ்சன் பாலை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பு பிரான்ஸ் ஓஸ்டனுடன் இணைந்து தி லைட் ஆஃப் ஆசியா என்ற திரைப்படத்தை உருவாக்க வழிவகுத்தது. இந்த படத்தில் ராய் ஒரு முக்கிய நடிகராகவும் இருந்தார். பிரபஞ்ச பாஷ் என்ற தனது மூன்றாவது படத்தைத் தயாரிக்கும் போது, நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரின் பேத்தியான தேவிகா இராணியை காதலித்து மணந்து கொண்டார்.
பம்பாய் டாக்கீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு அரங்கத்தில், ராய் சசாதர் முகர்ஜியுடன் கூட்டுசேர்ந்தார். மேலும் முகர்ஜியின் மைத்துனர் அரங்கத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். ஒரு படத்தில் இவரது மனைவியுடன் நடித்த நஜம் உல் அசன் என்ற நடிகருக்கும் இடையிலான காதல் தொடர்புகள் இருப்பதாக சந்தேகித்து, அவரை அப்படத்திலிருந்து நீக்கிவிட்டு தன்னுடைய உறவினர் அசோக் குமாரை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதன் பிறகு அசோக் குமார் திரைப்படங்களில் வெற்றிகரமான ஒரு வாழ்க்கையைப் பெற்றார்.
ராய் இறந்த பிறகு, திரைப்பட அரங்கின் கட்டுப்பாட்டிற்கு ஒரு போராட்டம் ஏற்பட்டது. இவரது மனைவி தேவிகா ராணி சஷாதர் முகர்ஜியுடன் மோதலில் ஈடுபட்டார். இந்த கால கட்டத்தில் 1943 இல் அரங்கத்தின் மிகப்பெரிய வெற்றியான கிஸ்மெட் என்றப் படத்தை தயாரித்தார். பின்னர் முகர்ஜி தனியே பிரிந்து பிலிமிஸ்தான் ஸ்டுடியோ என்ற ஒரு திரைப் பட படபிடிப்பு அரங்கத்தை கூட்டாக உருவாக்கினார்.
1945ஆம் ஆண்டில், தேவிகா ராணி உருசியரும் மற்றும் இந்திய ஓவியருமான இசுவேதோசுலாவ் ரோரிக்கை என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வாழத் தொடங்கினார்.[2] இதன் பின்னர் பம்பாய் டாக்கீசின் புகழ் மெதுவாக மங்கத் துவங்கியது. அசோக் குமார் மற்றும் முகர்ஜி ஆகியோர் பம்பாய் டாக்கீஸை புதுப்பிக்க முயன்றனர். மஹால் என்ற ஒரு பெரிய வெற்றிப் படத்தைத் தயாரித்தனர். இறுதியில் அரங்கம் மூடப்பட்டது.