இரகுராஜ்பூர் (Raghurajpur) என்பது இந்தியாவின் பூரி மாவட்டத்திலுள்ள ஒரு பாரம்பரிய கைவினைக் கிராமமாகும். இது அதன் தலைசிறந்த பட்டாச் சித்ரா ஓவியர்களுக்கு பெயர் பெற்றது. இது இப்பிராந்தியத்தில் கி.மு. 5-க்கு முந்தைய கலை வடிவமாகும். மேலும், கோட்டிபுவா நடனக் குழுக்கள், இந்திய பாரம்பரிய நடன வடிவமான ஒடிசியின் முன்னோடியாகும். இது மிகச்சிறந்த மற்றும் பழம்பெரும் ஒடிசிக் கலைஞர்களில் ஒருவரான பத்ம விபூசண் குரு, கேளுச்சரண மகோபாத்திரா மற்றும் கோட்டிபுவா நடனக் கலைஞர் பத்மசிறீ குரு, மகுனி சரண் தாசு ஆகியோரின் பிறப்பிடமாகவும் அறியப்படுகிறது. பட்டாச் சித்ரா கலை மற்றும் இரகுராஜ்பூர் கிராமத்தின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பைக் கொண்ட ஒரு முக்கிய பட்டாச் சித்ரா கலைஞரான குரு முனைவர் ஜெகநாத் மகோபத்ராவின் பிறந்த இடமும் இதுவாகும். அதுமட்டுமின்றி, இந்த கிராமத்தில் துசார் ஓவியங்கள், பனை ஓலை வேலைப்பாடுகள், கல் வேலைப்பாடுகள், மர வேலைப்பாடுகள், கௌடுங் பொம்மைகள் மற்றும் காகித பொம்மைகள் மற்றும் முகமூடிகள் போன்ற கைவினைப்பொருட்கள் உள்ளன.[1][2]
2000 ஆம் ஆண்டில், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் திட்டத்திற்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டு தொடங்கி, இந்த கிராமம் மாநிலத்தின் முதல் பாரம்பரிய கிராமமாக மேம்படுத்தப்பட்டு, கைவினைக் கிராமமாக உருவாக்கப்பட்டது. பின்னர் விரைவில் கிராமத்தில் ஒரு விளக்க மையம் அமைக்கப்பட்டது. கலைஞர்களின் இல்லங்களிலும் ஓய்வு இல்லங்களின் சுவர்களில் கலைப்படைப்புகள் அமைக்கப்பட்டன.[3]
ஜெகநாதர் கோயிலுக்கு 14 கி.மீ. தொலைவில் உள்ள புண்ணிய நகரமான புரியில் நடைபெறும் வருடாந்திர தேரோட்டத்தின் போது ஜெகந்நாதரின் சிம்மாசனத்தின் கீழும் மூன்று தேர்களிலும் பயன்படுத்தப்படும் பட்டாஸ் என்ற பாரம்பரிய அலங்காரம் இக்கிராமத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.[4][5]
தென்னை, பனை, மா மற்றும் பலா பழங்களின் தோப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பிரதான கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட இரண்டு தெருக்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அங்கு ஓவியர்கள் தங்கியிருந்து பாரம்பரிய முகமூடிகள், கல் சிலைகள், காகித பொம்மைகள், சிற்பங்கள், மர பொம்மைகள் போன்றவற்றில் பட்டாச் சித்ரா கைவினைப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.[1][6] இந்த கிராமத்தில் உள்ளூர் தெய்வமான பூசுனிக்கு மட்டுமல்ல, இராதா மோகன், கோபிநாத், இரகுநாத், இலட்சுமி நாராயண் மற்றும் கௌரங்கா உள்ளிட்ட பல்வேறு இந்துக் கடவுள்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் உள்ளன.
சுமார் 2000 ஆம் ஆண்டில் இது கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ஒரு பாரம்பரிய கிராமமாக உருவாக்கப்பட்டது. மேலும் மாநிலத்தின் முக்கிய கிராமப்புற சுற்றுலாத் தலமாக மாறியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கிராமத்திற்கு ஈர்க்கிறது.[7] இந்த அமைப்பால் பார்வையாளர்களுக்கு பாரம்பரிய நடைகளை வழங்க கிராமவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அது இப்பகுதியில் பாரம்பரிய சுற்றுலாவுக்கான மாதிரி வடிவமாக மாறியுள்ளது.[8]
இன்று இது வருடாந்திர "வசந்த் உத்சவ் - பரம்பரா ரகுராஜ்பூர்" (வசந்த விழா) நடைபெறும் இடமாகவும் உள்ளது. இது 1993 ஆம் ஆண்டில் மாநில சுற்றுலாத் துறை, கொல்கத்தாவின் கிழக்கு மண்டல கலாச்சார மையம் ஆகியவற்றின் கீழ், பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடைபெறும் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பானது.[9]
பட்டாச் சித்ரா ஓவியங்கள் 'பட்டா' அல்லது காய்ந்த பனை ஓலை எனப்படும் துணியின் மேல் செய்யப்படுகின்றன. இது முதலில் சுண்ணாம்பு மற்றும் பசை கலவையால் வரையப்பட்டது. அதன் மேற்பரப்பில், பல்வேறு கடவுள்கள், தெய்வங்களின் வண்ணமயமான மற்றும் சிக்கலான படங்கள் மற்றும் பூக்கள், மரங்கள் மற்றும் விலங்குகளின் அலங்காரத்துடன் புராணக் காட்சிகள் வரையப்படுகின்றன. டசர் பட்டுப் புடவைகளில் உள்ள ஓவியங்கள், குறிப்பாக மதுரா விஜயம், இராசலீலா மற்றும் அயோத்தி விஜயம் ஆகியவற்றை சித்தரிக்கும் சம்பல்புரி புடவைகள் 'இரகுராஜ்பூர் பட்டாச் சித்ரா ஓவியங்கள்' மூலம் அவற்றின் தோற்றத்திற்கு கடன்பட்டுள்ளன.[10]
இது இந்து புனித யாத்திரை நகரமான புரியில் இருந்து 14 கிமீ தொலைவில், பார்கபி (பார்கவி) ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. புரியில் இருந்து வருபவர்கள் புவனேசுவரம் சாலையில், சந்தன்பூருக்கு அருகில், தேசிய நெடுஞ்சாலை 316-இல் சென்று, சந்தன்பூர் சந்தையை அடைந்ததும், இரகுராஜ்பூரை அடைய வலதுபுறம் திரும்பலாம். இந்த கிராமம் சந்தன்பூரிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது.[1][11] fr