![]() இரசாக்கர் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. | |
வகை | காசிம் இரசுவியால் உருவாக்கப்பட்ட குடிப்படை |
---|---|
சட்ட நிலை | தற்போது அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் உடன் இணைக்கப்பட்டுள்ளது |
தலைமையகம் | ஐதராபாத்து |
தலைமையகம் | |
ஆள்கூறுகள் | ஐதராபாத் நிசாம் ,ஐத்ராபாத் மாநிலப் படை |
சேவை பகுதி | ஐதராபாத் மாநிலம் |
தலைவர் | காசிம் ரசிவி |
தாய் அமைப்பு | மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி |
இரசாக்கர்கள் (Razakars) ஐதராபாத் நிசாம் மிர் சர் உசுமான் அலிகான், ஏழாம் ஆசப் சாவின் ஆட்சியின் போது காசிம் இரசுவி என்பவரால் ஏற்பாடு செய்த ஒரு குடிப்படையாகும். ஐதராபாத் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதை இவர்கள் எதிர்த்தனர். நிசாமின் சுதேச அரசை இந்தியாவுக்கு பதிலாக பாக்கித்தானுடன் சேர்க்கும் திட்டமும் இவர்களிடம் இருந்தது.[1] இறுதியில், போலோ நடவடிக்கையின் போது இந்தியத் தரைப்படை இரசாக்கர்களை விரட்டியது. காசிம் ரசிவி ஆரம்பத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தான் விடுவிக்கப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் பாக்கித்தானுக்கு குடிபெயரவேண்டும் என்ற உறுதிமொழியின் பேரில் புகலிடம் தேடி பாக்கித்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.[2]
ஐதராபாத் மாநிலம் நிசாம் ஆட்சி செய்த ஒரு இராச்சியமாகும். 1947ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மற்ற எல்லா சுதேச மாநிலங்களையும் போலவே, ஐதராபாத் மாநிலத்திற்கும் இந்தியா அல்லது பாக்கித்தானுடன் சேர விருப்பம் வழங்கப்பட்டது. ஆனல், நிசாம் சுதந்திரமாக இருக்க விரும்பினார். 1947ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி நிசாம் அரசு இந்தியாவுடன் ஒரு நிலையான ஒப்பந்தத்தை மேற்கொண்டது.[3]
ஐதராபாத் மாநிலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து படிப்படியாக கடவுளின் பெயரால் ஆட்சி செய்யும் பகுதியாக மாறி வந்தது. 1926ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற ஐதராபாத் அதிகாரி நவாப் முகம்மது நவாஸ் கான் என்பவரால் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் நிறுவப்பட்டு, வரையறுக்கப்பட்டது. பகதூர் யார் ஜங் இதன் முதல் தலைவராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். மிதவாத முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை ஓரங்கட்டுவதில் முக்கிய கவனம் செலுத்திய இக்கட்சி ஒரு சக்திவாய்ந்த அமைப்பாக மாறியது.[4]
ஐதராபாத் மாநிலம் ஒரு முஸ்லிம் அரசு என்றும், முஸ்லிம் மேலாதிக்கம் வெற்றியின் உரிமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறிய அலிகார் பல்கலைக்கழகத்தில் படித்த முஸ்லிம் காசிம் இரசுவி தலைமையிலான இரசாக்கர்களிடையே மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி தனது ஆளுமையைக் கொண்டிருந்தது. [5] நிசாம் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிய சிறப்பு அதிகாரங்களை இரசாக்கர்கள் கோரினர். மேலும் நிசாம் இவர்களின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. ஐதராபாத் மாநில வழக்கை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் முறையிட நிசாம் ஐக்கிய நாடுகள் அவைக்கு ஒரு குழுவை அனுப்பியது.
பொதுவுடைமை அனுதாபிகளையும், விவசாயிகளின் ஆயுதக் கிளர்ச்சிகளையும் இரசாக்கர்கள் கொடூரமாக வீழ்த்தினர். மேலும் இந்தியாவுடன் இணைவதற்கு வாதிட்ட ஊடகவியலாளர் ஷோபுல்லா கான் போன்ற செயற்பாட்டாளர்களை கொலை செய்தனர்.[6][7]ஐதராபாத் மாநில காங்கிரசு தடைசெய்யப்பட்டது. மேலும், அதன் தலைவர்கள் விசயவாடா அல்லது மும்பைக்குத் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பொது மக்களை இவர்களிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டது.[8]
இறுதியாக, இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், ஐதராபாத் மாநிலத்தில் "இராணுவ நடவடிக்கையை" மேற்கொள்ள முடிவு செய்து, போலோ நடவடிக்கை தொடங்கப்பட்டது. படைத் தளபதி ஜே.என். சௌத்ரி தலைமையிலான இந்தியத் தரைப்படை ஐந்து திசைகளிலிருந்தும் மாநிலத்திற்குள் நுழைந்தது. செப்டம்பர் 18, 1948 அன்று சரணடைவதற்கு முன்னர் இந்தியப் படைகள் நடத்திய பெரும் தாக்குதலுக்கு எதிராக இரசாக்கர்கள் குறுகிய காலம் போராடினர். நிசாமின் தலைமை அமைச்சர் மிர் லைக் அலி, காசிம் இரிஸ்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் 22, 1948 அன்று, நிசாம் தனது புகாரை ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் இருந்து திரும்பப் பெற்றார். ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைப்பது அறிவிக்கப்பட்டது. தளபதி சௌத்ரி ஐதராபாத்தின் இராணுவ ஆளுநராக பொறுப்பேற்று 1949 இறுதி வரை அந்த பதவியில் இருந்தார். சனவரி 1950 இல், ஒரு மூத்த அரசு அதிகாரி எம்.கே.வெல்லோடி, மாநில முதல்வராக பதவியேற்றார். நிசாமுக்கு "ராஜ் பிரமுக்" அல்லது "ஆளுநர்" என்ற பதவி வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் 27,000 முதல் 40,000 வரை முஸ்லிம்கள் உயிர் இழந்ததாக பண்டிட் சுந்தர்லால் குழு அறிக்கை மதிப்பிட்டுள்ளது. [9]
ஐதராபாத், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர் இரசாக்கர்கள் படை கலைக்கப்பட்டது. மேலும், மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி தடை செய்யப்பட்டது. இருப்பினும் இது 1957 இல் காங்கிரசு அரசாங்கத்தின் கீழ் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (ஏஐஐஎம்) என மறுபெயரிடப்பட்டது. காசிம் இரிசுவி கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தான் விடுவிக்கப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் அவர் பாக்கித்தானுக்கு குடிபெயரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டார். [10] அவருக்கு பாக்கித்தானில் புகலிடம் வழங்கப்பட்டது.