இரசிதா அக்கு சவுத்ரி (Rashida Haque Choudhury; பிறப்பு 24 ஏப்ரல் 1926, இறப்பு தேதி தெரியவில்லை) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1979 முதல் 1980 வரை சரண் சிங் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார்.
இரசிதா அக்கு 24 ஏப்ரல் 1926 அன்று அசாமின் தேஜ்பூரில் அல்காஜ் நசீப் அலி மசூம்தார் மற்றும் அவரது மனைவிக்கு மகளாகப் பிறந்தார். சில்சாரில் உள்ள மறைப்பணிப் பள்ளியில் கல்வி பயின்ற பின், இரசிதா கொல்கத்தாவின் பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரியில் இளங்கலை கலை பட்டம் பெற்றார்.[1]
சவுத்ரி 1950-இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[2] 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் சில்சார் மக்களவைத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் சவுத்ரி 1,38,638 வாக்குகளைப் பெற்று இந்திய பொதுவுடமை கட்சியின் நூருல் ஹுடா 28,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4] இவர் வங்காளதேச அகதிகளுக்கான சமூகப் பணிக் குழுவில் பணியாற்றினார். பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசு (அர்சு) சேர்ந்தார். 1979ஆம் ஆண்டில், சரண் சிங் அமைச்சரவையில் கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5][6]
சவுத்ரி 1980-இல் சில்சார் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், இந்த முறை, இவர் 46.98% வாக்குகளைப் பெற்று, இந்திய தேசிய காங்கிரசின் சந்தோஷ் மோகன் தேவ் (52% வாக்குகள்)க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்துத் தோல்வியடைந்தார்.[7]
இரசிதா அக்கு இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியான மொயினுல் அக்கு சவுத்ரியினை 28 திசம்பர் 1948 அன்று மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர்.[2][8]