இரசியா சுல்தானா (Razia Sultana) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பஞ்சாப் அரசாங்கத்தின் அமைச்சராக உள்ளார்.[1] இவர் பஞ்சாப் சட்டமன்றத்தில் மலேர்கோட்லாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பஞ்சாப் சட்டமன்றத்தில் சுல்தான மட்டுமே முஸ்லிம் உறுப்பினராக உள்ளார்.[2][3] பஞ்சாப் சட்டசபைக்கு 2002, 2007 மற்றும் 2017 என மூன்று முறை நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுல்தானா மலேர்கோட்லாவில் நடுத்தர குஜ்ஜர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவர் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறையின் தலைமை இயக்குநர் இந்தியக் காவல் பணி அதிகாரி முகமது முஸ்தபாவை மணந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1]
2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுல்தானா பஞ்சாபில் தீவிர அரசியலில் சேர்ந்தார். இவர் 2002-ல் இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மலேர்கோட்லாவிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சுல்தானா 2007-ல் இரண்டாவது முறையாக மீண்டும் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் எப். நெசரா கட்டூனிடம் (ஃபர்சானா ஆலம்) தோற்றார்.[4] சுல்தானா 2017 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தனது சொந்த சகோதரர் முகம்மது அர்சத்தைத் தோற்கடித்து மீண்டும் சட்டமன்றத்தில் இடம் பெற்றார். சுல்தானா இந்தியத் தேசிய காங்கிரசு அரசின் அமைச்சரானார்.
சுல்தானா 28 செப்டம்பர் 2021 அன்று நவ்ஜோத் சிங் சித்துடன் இணைந்து பஞ்சாப் அரசாங்கத்தில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[5]