இரட்டை ஏரி | |
---|---|
அமைவிடம் | தமிழ்நாடு, சென்னை, கொளத்தூர் |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 700 ஏக்கர் |
குடியேற்றங்கள் | சென்னை |
இரட்டை ஏரி அல்லது ரெட்டேரி (Rettai Eri, பேச்சுவழக்கில் Retteri) என்பது தமிழ்நாட்டின், தலைநகரான சென்னையில் கொளத்தூரில் உள்ள ஓர் ஏரியாகும். இந்த ஏரி (100 அடி சாலையில் இருந்து தெரியக்கூடியது) செங்குன்றம் சாலை சந்திப்பு ரெட்டேரி சந்திப்பு என அழைக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் ஒரு மேம்பாலம் அமைக்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டு,[1] கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.[2][3][4]
இரட்டை ஏரியின் குறுக்கே ஜி.என்.டி சாலை செல்கிறது. 5.42 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டது இந்த ஏரி. இது ஒரு சூழல் சுற்றுலா மையமாக மாற்றப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் அக்கம்பக்கத்தின் குடிநீர் ஆதாரமாக இருந்த ஏரி, இப்போது ஆண்டின் பெரும்பாலான காலத்தில் நீர் அற்று உள்ளது. இருந்தாலும் இந்த ஏரி பறவைகளின் புகலிடமாக உள்ளது. பூவி பாதுகாப்பு அறக்கட்டளை என்னும் நகரம் சார்ந்த பல்லுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பறவைகளில் சுமார் 40 வெவ்வேறு இனங்கள் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளுக்கு இடையில் வருகின்றன. அவைகளின் மத்தியில் மிகவும் பொதுவாக தையல்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு, நத்தை குத்தி நாரை போன்ற இடம் பெயரும் பறவைகள் உள்ளன என்று அறியப்படுகிறது.[5]
பல தசாப்தங்களாக புறக்கணிப்பு நிலையில் இருந்த இந்த ஏரி செங்குன்றம் நீர்த்தேக்கம் கொரட்டூர் ஏரி ஆகியவற்றில் இருந்து உபரி நீரைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்வள ஆதாரத்துறை (WRD) ₹ 850 மில்லியன் செலவில் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரி ஆகியவற்றை இணைத்து ஏரியை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. வளர்ச்சிப் பணிகளாக, தேவையற்ற தாவரங்களை நீக்குதல், தூர் வாருதல், படகு சேவை, ஏரியோரம் மூன்று கி.மீ. வரை பூங்கா அமைத்தல் ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. மேலும் பிற வேலைகளாக, பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகள் ஈர்க்கும் விதமாக மருத்துவ குணமுள்ள மற்றும் பூக்கும் மரக்கன்றுகள் போன்ற பல்வேறு தாவர இனங்களை நடுதல், ஒரு நடைபாதை மற்றும் ஏரியின் நடுவில் மண்ணைக் குவித்து செயற்கை தீவை உருவாக்குதல் போன்ற மேம்பாட்டு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.[5]