இரண்டாம் உதயன்

இரண்டாம் உதயன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவன். இவன், அரசனாக இருந்த ஐந்தாம் தப்புலனின் மறைவுக்குப் பின் அரசனானான். கி.பி. 935 இல் அரியணை ஏறிய இரண்டாம் உதயன், கி.பி 938 வரை ஆட்சி நடத்தினான்.

இவன் சேனன் என்பவனைத் துணை அரசன் ஆக்கினான். அரசனது அதிருப்திக்கு உள்ளாகி அரசனால் தமக்குத் தீங்கு விளையக்கூடும் என்று எண்ணிய சில அமைச்சர்கள், புத்தமதச் சாதுக்கள் தமது தவவாழ்வை மேற்கொள்ளும் தபோவனங்களுக்குச் சென்று மறைந்து வாழ்ந்தனர். இதை அறிந்த அரசனும், துணையரசனும் அங்கு சென்று அவர்களைப் பிடித்து அவர்களது தலைகளைச் சீவிக் கொலை செய்தனர். இது அங்கு வாழ்ந்த சாதுக்களைக் கோபமுறச் செய்தது. அதனால் அவர்கள் அவ்விடத்தை விட்டு நீங்கி ரோகணத்துக்குச் சென்றுவிட்டனர். இதனால் கோபமுற்ற நாட்டு மக்களும், போர் வீரர்களும் கிளர்ந்து எழுந்தனர். அவர்கள் அரசனின் நடவடிக்கைக்கு உதவிய அமைச்சர்களைப் பிடித்துக் கொண்டு அபயகிரி விகாரையில் இருந்த "இரத்தினப்பாசாதம்" என்னும் உயரமான கட்டிடத்தில் ஏறி, அவர்களது தலைகளைச் சீவிச் சாளரம் வழியாக வெளியில் எறிந்தனர். இதைக் கேள்வியுற்ற துணையரசனும், அவனது நண்பனும் ரோரணத்துக்குத் தப்பியோடினர். அங்கே சாதுக்களைச் சந்தித்துத் தமது பிழைக்கு மன்னிப்புப் பெற்றுக்கொண்டதுடன் நாட்டிலிருந்த மூன்று புத்த பீடங்களின் துணையுடன் அவர்களை மீண்டும் அனுராதபுரத்துக்கு அழைத்து வந்தனர். அரசனும் அவர்களை நேரில் வரவேற்று மன்னிப்புப் பெற்றுக்கொண்டான்.[1]

அதன் பின்னர் அரசன் தனது முன்னோர்களைப் பின்பற்றி நற்பணிகளைச் செய்து நாட்டை ஆண்டுவந்தான். மூன்றாவது ஆட்சியாண்டில் இரண்டாம் உதயன் இறக்கவே, துணை அரசன் சேனன் ஆட்சிபீடம் ஏறினான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Mahavansa, translated in to Eglish by L. G. Wijesinha, Part II, Asian Educational Services, New Delhi, 1996 (First Published 1889), p. 82, 83

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]