இரம்மான் என்பது இந்தியாவில் உள்ள கர்வால் பகுதியில் உள்ள ஒரு மத விழா மற்றும் சடங்கு நிகழ்வு ஆகும். இது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் பைன்கண்டா பள்ளத்தாக்கின் சலூர் துங்ரா கிராமத்தில் உள்ள கர்வாலி மக்களின் திருவிழாவாகும்.
இத்திருவிழாவும், பெயரிடப்பட்ட கலை வடிவமும் கிராமக் கோயில் முற்றத்தில் கிராம தெய்வமான பூமியாள் தேவதாவுக்கு காணிக்கையாக நடத்தப்படுகின்றன. இரம்மான் திருவிழாவானது கிராமத்திற்கே தனித்துவமானதாக உள்ளது. இது இமயமலைப் பகுதியில் வேறு எங்கும் பிரதிபலிக்கவோ அல்லது நிகழ்த்தப்படவோ இல்லை. [1] [2]
சாலூர் துங்ராவின் காவல் தெய்வம் பூமியாள் தேவ்தா என்றும் அழைக்கப்படும் பூமிசேத்ரபால் ஆவார். இந்து சூரிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் அறுவடைத் திருவிழாவான பைசாகிக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவாக இந்த விழா நடத்தப்படுகிறது. பைசாகி தினத்தன்று, கிராம பூசாரி இரம்மான் திருவிழாவின் தேதியை அறிவிக்கிறார், இது பைசாகிக்குப் பிறகு ஒன்பதாம் அல்லது பதினொன்றாம் நாளில் வருகிறது. [3] பைசாகி தினத்தன்று பூமியாள் தேவதா கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார். இரண்டாவது நாள், மக்கள் ஹரியாலியை (முளைத்த பார்லி செடிகளை) தெய்வத்திற்கு காணிக்கையாக்குகிறார்கள், அதற்கு பிரதிபலனாக, விவசாயம் மற்றும் தோட்டத்தில் நல்ல விளைச்சல் உட்பட அனைவருக்கும் செழிப்பான வாழ்விற்கு உறுதியளிக்கப்படுகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும், தேவதா கிராமத்தைச் சுற்றி வருவார். திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், அந்த நேரத்தில் இராமரின் உள்ளூர் காவியம் பாடப்படுகிறது அத்தோடு கூட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் முகமூடி அணிந்த நடனங்கள் பூமியால் தேவ்தாவின் கோவில் முற்றத்தில் நடைபெறுகின்றன [4]
தடைகளை நீக்குபரான விநாயகருக்கான ஆராதனையுடன் விநாயகர் மற்றும் பார்வதியின் நடனத்துடன் இரம்மான் திருவிழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து சூரிய கடவுளின் நடனம், புராணத்தில் கூறப்பட்டவாறு பிரம்மா மற்றும் விநாயகரின் பிறப்பு பற்றிய படைப்பு ஆகியவை தொடர்கின்றன. மற்ற சிறப்பு வாய்ந்த நடனங்களில் கோபி சந்த் ( கிருஷ்ணா ) மற்றும் ராதிகா ஆகியோருடன் நாரதரின் நடனம், எருமை மேய்ப்பவர்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் மவார்-மவாரின் நடனம் மற்றும் பனியா -பனியான் நிருத்யா (வர்த்தகர்-ஜோடி நடனம்) ஆகியவை அடங்கும். இந்த வகை நடனங்கள் சாமானிய மக்கள் சந்திக்கும் துன்பங்களைக் காட்சிப்படுத்துவனவாக உள்ளன. [5] இந்த ஆரம்ப நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கவனம் இப்போது உள்ளூர் இராமகதையின் இயற்றலுக்கு மாறுகிறது. இராமரின் வாழ்க்கையின் அத்தியாயங்கள், ஜனக்பூருக்கு அவர் விஜயம் செய்ததில் தொடங்கி, வனவாசத்திலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து அவரது முடிசூட்டு விழா வரை, மொத்தம் 324 அடிகளில் பாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் மற்றொரு முக்கிய அம்சம், உள்ளூர் புராணங்களின் இசைப் பாடலான ஜாகர் பாடப்படுவது ஆகும். [5]
இராமகதையைப் பின்பற்றும் மால் நிருத்யா, கூர்ஜோகி மற்றும் நரசிங் பட்டர் நிருத்யா போன்ற பிற நடனங்களும் அத்தியாயங்களும் உள்ளன. மால் நிருத்யாவில், நேபாளத்தின் கூர்க்காக்களுக்கும் உள்ளூர் கர்வாலிகளுக்கும் இடையிலான ஒரு வரலாற்றுப் போர், சிவப்பு மற்றும் வெள்ளை உடையணிந்த நான்கு நடனக் கலைஞர்களின் குழுவால் நகைச்சுவையாக இயற்றப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது. சலூர் கிராமத்தின் குன்வர் சமூகத்தைச் சேர்ந்த சிவப்பு மால் இந்நிகழ்வில் இடம் பெற்றிருப்பது கட்டாயமாகும், ஏனெனில் மற்ற மூவர் கிராம பஞ்சாயத்துகளின் பஞ்ச்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆகவே, இந்த குக்கிராமம் கூர்க்காக்களை ஆதரித்ததாக நம்பப்படுகிறது. [5]
கூர்ஜோகி விழாவில், கிராம வயல்களில் இருந்து களைகள் ( கூர் ) ஒரு கூர்ஜோகியால் பிடுங்கப்படுகின்றன, அவர் இந்த களைகளை ஒரு சாக்கு மூட்டையில் சுமந்து செல்கிறார். சமூக விளையாட்டின் உணர்வில் மக்கள் இந்த களைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவதில் மிகுந்த மகிழ்ச்சியை உணர முடிகிறது. [5]
சலூர்-துங்ரா கிராம மக்கள் இரம்மான் திருவிழாவின் வாரிசுகள், அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் நிதி வழங்குவார்கள். அனைத்து வீடுகளிலும், சாதி மற்றும் சமூக வேறுபாடுகள் இல்லாமல், இரம்மான் முக்கிய தெய்வங்களுக்கு பிரார்த்தனை மற்றும் சடங்குகள் செய்கின்றனர். திருவிழாவில் பல்வேறு சமூகத்தினரின் பாத்திரங்கள் நன்கு நிறுவப்பட்டுள்ளன. கிராமத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இரம்மானில் கலைஞர்களாகின்றனர். பிராமண பூசாரிகள் சடங்குகளை நடத்தி, தெய்வத்திற்கு பிரசாதம் தயாரித்து பரிமாறுகிறார்கள். பாரிசுகளின் நிறுவனம் மற்றும் நிதி சேகரிப்பில் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள், அதே சமயம் தாரிகள் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் பாரிகளுக்கு உதவும் குழுவாக உள்ளனர். பாரிகளுக்கும் தாரிகளுக்கும் கிராம பஞ்சாயத்துகளால் அவரவருக்கான கடமைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தரப்படுகின்றன. அடுத்த இரம்மான் பண்டிகை வரை பூமியாள் தேவதையின் வாசஸ்தலத்தைத் தேர்ந்தெடுப்பதும் இந்தப் பஞ்சர்கள்தான். ஆண்டு முழுவதும் பூமியாள் தேவ்தா வசிக்கும் குடும்பம் தினசரி வழக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், வீட்டில் ஒரு இடம் வரையறுக்கப்பட்டு தெய்வத்திற்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஜாகர் பாடப்படுவது ராஜ்புத் சாதியைச் சேர்ந்த ஜாகரிகள் அல்லது பல்லாக்களால் தொழில்முறை பாணர்களாக இருப்பர். பறைகள் வாசிப்பது விழாக்களில் மையமானது, இது தாஸ் சமூகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களால் செய்யப்படுகிறது, தாழ்வான நிலையிலுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்காக இருப்பினும் இந்நிகழ்ச்சியின் போது அவர்களின் நிலை உயர்த்தப்படுகிறது. [5]
தெய்வத்தின் பிரசாதம் சடங்காக விநியோகிக்கப்படும் விருந்துடன் திருவிழா முடிவடைகிறது.
2009 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ மனிதகுலத்தின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதி பட்டியலில் இரம்மானை இடம் பெறச்செய்தது. [6]