இராசாளி | |
---|---|
Vulnerable[1]
| |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பால்கோனிடே
|
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | பா. பெ. பெரிகிரினேடார்
|
முச்சொற் பெயரீடு | |
பால்கோ பெரிகிரினசு பெரிகிரினேடார் சுந்தேவல், 1837[2] | |
வேறு பெயர்கள் | |
|
இராசாளி (shaheen falcon (Falco peregrinus peregrinator) என்பது இந்திய துணைக்கண்டத்தில் முக்கியமாகக் காணப்படும் பொரி வல்லூறின் வலசை போகாத துணையினம் ஆகும்.[3] இது வலசை செல்லும் துணையினமாகவும் விவரிக்கபட்டுள்ளது.[4]
இப்பறவையை ஆங்கிலம் போன்ற மொழிகளில் குறிக்க பயன்படுத்தும் சொல்லில் உள்ள ஷாஹீன் (Shaheen) அல்லது அதில் இருந்து சிற்சில மாறுபாடுள்ள பெயரானது நடு பாரசீக சொல்லான šāhēn (அதாவது "மகத்தான, அரசர்") என்பதிலிருந்து வந்தது. நடு ஆர்மேனியன் շահէն (šahēn) மற்றும் பழைய ஆர்மேனியன் Շահէն (Šahēn) ஆகியவற்றையும் ஒப்பிடலாம். பாரசீக/ஃபார்சி மொழியில் இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன: வல்லூறு, குறிப்பாக பார்பரி வல்ல்று. இரண்டாவது பொருள் தராசு முள்.[5][6]
இராசாளி ஒரு சிறிய வலு உள்ள பறவையாகும். இதன் தோள் அகன்று இருக்கும். இதன் அலகு வெளுத்த ஈய நிறத்திலும் அதன் முனை சற்றுக் கருத்தும் காணப்படும். இதன் விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் குரோம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் தலையும் கன்னத்தின் வழியாக செல்லும் கோடும் கருப்பாக இருக்கும். எஞ்சிய உடலின் மேல்பாகம் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். மேவாய், தொண்டை, மார்பு ஆகியன வெண்மையாகவும் இருக்கும். வயிறு, வாலடி இறக்கைக் கீழ் போர்வை இறகுகள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இவை குளிர் காலத்தில் இலங்கைக்கு வலசை போகின்றன.[1] இவற்றில் ஆண் பெண் பறவைகளுக்கு நிறம், இறகுகள் போன்றவற்றில் வேறுபாடு இல்லை. பால் ஈருருமை இல்லை.[7] இந்தப் பறவைகள் 380 முதல் 440 மிமீ வரை நீளம் கொண்டவை.[1] ஆண் பறவை அண்டங்காக்கையின் பருமன் இருக்கும். ஆணைவிட பெண் சற்று பெரியது.[7] இப்பறவைகள் பெரும்பாலும் மலைசார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது. மனிதன் ஏறமுடியாத மலை உச்சியில் தன் கூடுகளை கட்டுகிறது.
இராசாளி தெற்காசியாவில் பாக்கித்தானிலிருந்து இந்தியா[4] மற்றும் கிழக்கில் வங்காளதேசம் மற்றும் இலங்கை,[4] நடு மற்றும் தென்கிழக்கு சீனா,[4] மற்றும் வடக்கு மியான்மர் வரை காணப்படுகிறது.[4] இந்தியாவில், இது அனைத்து மாநிலங்களிலும் முக்கியமாக பாறை மற்றும் மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்தும் இராசாளிகள் பதிவாகியுள்ளன.[8]
இராசாளி இலங்கையில் காணப்படுவது பொரி வல்லூறின் உள்ளூர் இனமாகும்.[1] இது அரிதானது ஆனால் தீவு முழுவதும் தாழ்நிலங்களில் காணப்படுகிறது. மேலும் மலைநாட்டில் 1200 மீ உயரத்தில்,[7] மலைப் பாறைகளின் வெளிப்பகுதிகளில் காணப்படுகிறது. செங்குத்தான குன்றுகளில் அமைந்துள்ள ஓங்கிய பாறைகள் அதற்கு கூடுகட்டும் தளங்களாக இருப்பதுடன், உழவாரன் போன்ற வேகமாக பறக்கும் பறவைகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தக்கூடிய இடங்களாகவும் செயல்படுகின்றன.[9] சிகிரியா நன்கு அறியப்பட்ட ஒரு தளமாகும்.[1]
இராசாளி பொதுவாக தனிப் பறவையாகவோ அல்லது ஜோடியாகவோ மலைப் பகுதிகளின் பாறைகளின் உச்சிகளில் காணப்படுகிறது. இந்த ஜோடிகள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்கின்றன.[7] ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பருமன் அளவில் உள்ள வேறுபாடு காரணமாக, ஜோடிகள் ஒவ்வோன்றும் பொதுவாக வெவ்வேறு இரை இனங்களை வேட்டையாடுகின்றன. இவை பறந்தபடியே இரையை நன்கு வேட்டையாடக்கூடியது. மேலும் கீழ்நோக்கிப் பறக்கும்போது மணிக்கு 240 கிமீ வேகத்தை எட்டும். இரையைப் பிடிக்க கீழ்நோக்கிப் பறந்து பாயும்போதுக்கும்போது இது மணிக்கு 320 கிமீ வேகத்தை தாண்டும்.[10]
இராசாளிகள் பெரும்பாலும் சிறிய பறவைகளை வேட்டையாடுகின்றன, இருப்பினும் புறாக்கள், கிளிகள் போன்ற நடுத்தர அளவிலான பறவைகளும் வேட்டையாடப்படலாம்.[7] வலுவாகவும் விரைவாகவும், இவை உயரத்தில் இருந்து பாய்ந்துவந்து இரையைத் தாக்கும். இரையைத் தாக்கும்போது அதன் இறப்பை உறுதி செய்வதற்காக வல்லூறு வேட்டையாடப்படும் பறவையின் கழுத்தைக் கடிக்கும்.
இதன் இனப்பெருக்க காலம் திசம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும். உயரமான பாறை விளிம்புகள் அல்லது இடுக்குகள், சுரங்கங்கள் போன்ற இடங்களில் கூடுகட்டுகின்றன.[7] மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடும். முட்டைகள் வெளிர் சிவப்பு, ஆழ்ந்த செங்கள் சிவப்பு நிறக் கறைகளுடன் இருக்கும். பெண் பறவை அடைகாக்கும்.[11] ஒரு கூட்டில் சுமார் 1.32 குஞ்சுகள் பொரித்து 48 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும்.[8] இந்தியாவில் இராசாளிகள் உயரமான கட்டடங்கள் மற்றும் செல்பேசி கோபரங்கள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் கூடு கட்டுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[8]
இலங்கையில் இராசாளிகள் அழிவாய்ப்பு இனம் என்ற நிலையை அடைந்துள்ளது.[1] 1996 இல் நடத்தபட்ட ஒரு தொடக்கநிலை ஆய்வில் முதலில் 40 ஜோடிகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது.[12] இந்த மதிப்பீடு பின்னர் 100 ஜோடிகள் இருப்பதாக மறு மதிப்பீடு செய்யபட்டது.
பாக்கித்தானிய இலக்கியத்தில், நாட்டின் தேசியக் கவிஞரான அல்லாமா இக்பாலின் கவிதைகளுடன் இராசாளிக்கு சிறப்புத் தொடர்பு உண்டு.[13] இது பாக்கிதான் வான்படை சின்னத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையிலும் காணப்படுகிறது. மேலும் இது பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் புனைப்பெயராக பயன்படுத்தப்படுகிறது.[14]
"கொன்றுண்ணி பறவைகள்" வரிசையில் 1992 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் தலையில் பெண் இராசாளியைக் குறிப்பிடும் இந்திப் பெயரான பெயரான ஷாஹின் கோஹிலா என்ற பெரில் குறிப்பிட்டு விரால் அடிப்பானின் படத்தை தவறாக அச்சிடப்படப்பட்டது. இந்த அஞ்சல் தலைகளில் ஒன்று 2011 இலண்டனில் நடந்த ஏலத்தில் £11,500க்கு விற்கப்பட்டது.[15]