இராஜா மற்றும் இராதா ரெட்டி Raja and Radha Reddy | |
---|---|
சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வாங்கும் இராஜா (மத்தியில்) மற்றும் இராதா (வலது) , (2010) | |
பிறப்பு | இராஜா ரெட்டி(அக்டோபர் 6,1943) நரசாபுரம், பிரித்தானிய இந்தியா இராதா ரெட்டி(1955 பிப்ரவரி 15) கோடல் கான், ஐதராபாத் மாநிலம், இந்தியா |
அறியப்படுவது | இந்தியப் பாரம்பரிய நடனங்கள் |
அரசியல் இயக்கம் | குச்சிப்புடி |
விருதுகள் | பத்மசிறீ பத்ம பூசண்(2000) |
வலைத்தளம் | |
rajaradhareddy |
இராஜா (Raja) (பிறப்பு; அக்டோபர் 6,1943) மற்றும் இராதா ரெட்டி (Radha Reddy) (பிறப்பு; பிப்ரவரி 15,1955) ஆகிய இருவரும் இந்தியாவைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் ஆவர். இவர்கள் குச்சிப்புடி என்ற தென்னிந்திய நடன வடிவத்தின் நிபுணர்களாக அறியப்படுகிறார்கள். புதுதில்லியில் குச்சிப்புடி நடன நாட்டிய தரங்கினி நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தனர். குச்சிப்புடிக்கு அதன் பாரம்பரிய நற்பண்புகளில் சமரசம் செய்யாமல் ஒரு புதிய பரிமாணத்தை வழங்கிய பெருமை இவர்களுக்கு உண்டு.[1][2] கலைத் துறையில் இவர்கள் செய்த சேவைகளுக்காக, இந்திய அரசு இவர்களுக்கு பத்மசிறீ மற்றும் பத்ம பூசண் விருதுகளை வழங்கியுள்ளது.[3][4]
இராஜா ரெட்டி 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி நரசபுரத்தில் பிறந்தார்.[3][5] இராதா ரெட்டி 1955 பிப்ரவரி 15 அன்று இன்றைய தெலங்காணாவின் ஆதிலாபாத் மாவட்டத்திலுள்ள கோடல்கானில் பிறந்தார்.[4][6]
இராஜா ரெட்டி நடனக் கலையில் சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இராதா ரெட்டியும் நடனக் கலையில் சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார். குச்சிப்புடிக்கு இவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக 2010 ஆம் ஆண்டில் இருவருக்கும் ஐதராபாத்து பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.[2] இராஜா ரெட்டி, இராதா மற்றும் அவரது சகோதரி கௌசல்யா ஆகிய இருவரையும் மணந்தார், கௌசல்யாவும் குச்சிப்புடி நடனக் கலைஞராவார்.[7][8]
இவர்களுக்கு யாமினி மற்றும் பாவனா ரெட்டி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[8] இவர்களும் குச்சிப்புடி நடனக் கலைஞர்களாக உள்ளனர்
இராஜா ரெட்டியின் குழந்தை பருவத்தில் பாகவத நிக்ழச்சிகளைக் காணத் தொடங்கியபோது குச்சிப்புடி மீது ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் வைஜெயந்திமாலாவின் நாகின் என்ற நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு ஒரு திருப்புமுனையை அடைந்தார்.[9] திருமணத்திற்குப் பிறகு இராதா இவரைப் பின்தொடர்ந்து குச்சிப்புடியைக் கற்றார். இருவரும் ஏலூரைச் சேர்ந்த வேதாந்தம் பிரகலாத சர்மாவின் கீழ் குச்சிப்புடியைக் கற்றுக் கொண்டனர். 1966 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசின் உதவித்தொகையில், இவர்கள் தில்லி சென்றனர். அங்கு இவர்கள் நாட்டிய பாலே மையத்தில் குரு மாயா ராவின் கீழ் நடன அமைப்பு மற்றும் பிற மேடைக் கலைகளைப் படித்தனர்.[10] இவர்களின் திறமையின் காரணமாக இந்திராணி ரகுமான் உட்பட அக்காலத்தின் முக்கிய நபர்களுடன் நடனமாட இவர்கள் அழைக்கப்பட்டனர். 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மேடைகளில் இவர்களின் நடன நிகழ்ச்சிகள் பரவலாக நடத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.[11] குழந்தைகள் நாள் கொண்டாட்டங்களின் போது இவர்களது நிகழ்ச்சியைக் கண்ட அபோதைய பிரதமர் ஜவகர்லால் நேரு தில்லியில் ஒரு வீட்டை ஒதுக்கினர்.<[9][10] இவர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர். ராஜா, செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு மாணவர்களுக்கும் பார்வையற்றோர் நிவாரண சங்கத்திலும் பயிற்சி அளித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அ. ப. ஜெ. அப்துல் கலாமின் மூன்று கவிதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலுக்கு நடனமாடவும் செய்தார்.[12]
இராஜாவும் இராதாவும் புதுதில்லியின் சாகேத் பகுதியில் குச்சிப்புடி நடனத்திற்காக நாட்டிய தரங்கினி என்ற நிறுவனத்தைத் தொடங்கினர்.[10] இந்த நிறுவனம் மாணவர்களுக்கு பாரம்பரிய நடனம், இசை, யோகா மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தில் ஒரு சிறிய கலையரங்கம், ஒரு கலைக்கூடம் மற்றும் விடுதி வசதி உள்ளது.[11] இந்த நிறுவனம் வருடாந்திர நடனம் மற்றும் இசை விழாக்களை நடத்துகிறது.[13] இதில் உலகம் முழுவதிலும் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். மாஸ்கோ கிளாசிக்கல் பாலே, பால் டெய்லர் டான்ஸ் கம்பெனி, பிளமேன்கோ நடனக் கலைஞர் ஜோஸ் போர்செல் மற்றும் வைரிங் டெர்விஷ் ஆகியோர் இந்த விழாவில் நிகழ்த்திய குழுக்களில் அடங்குவர்.[14]