இராபெர்ட் தெ’சுகார்ட் அட்கின்சன் (Robert d'Escourt Atkinson, 11 ஏப்ரல் 1898 - 28 அக்டோபர் 1982) ஒரு பிரித்தானிய வானியலாளரும், இயற்பியலாளரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
அட்கின்சன் வேல்சிலுள்ள இராயாடர் என்ற நகரில் பிறந்தார். மான்செசுட்டர் இலக்கணப் பள்ளியில் படித்து ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 1922 இல் இயற்பியல் பட்டம் பெற்றார். பிறகு கிளாரண்டனாய்வகத்தில் பணிபுரிந்தார். பின்னர் கோட்டிங்டன் பல்கைக்கழகத்தில் சேர்ந்து 1928இல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். நியூ செர்சியில் உள்ள இரட்கர்சுப் பல்கலைக்கழகத்தில் 1929 முதல் 1937 வரை கல்வி பயிற்றுவித்தார். பிறகு அரசு கிரீன்விச் வான்காணகத்தில் தலைமை உதவியாளராகப் பணிபுரிந்தார். அவர் 1964இல் இரட்ஜெர்சில் பேராசிரியர் ஆனதும் கிரீன்விச்சில் பணிபுரிவதை நிறுத்தினார். 1979இல் பணி விடை பெற்றார்.[1]
அட்கின்சன் 1929இல் பிரிட்சு அவுட்டர்மேன்சுடன் ஒருங்கிணைந்து காமோவின் குவையத் துளைத்தல் கோட்பாட்டை விண்மீன்களின் அணுக்கரு இணைவு நிகழ்வுக்குப் பயன்படுத்தினார். இவ்விருவரும் ஐன்ஸ்டைனின் பொருண்மை-ஆற்றல் சமமை வாய்பாட்டின்படி இலேசான அணுக்கருக்கள் போதுமான ஆற்றலை உண்டாக்கும் என்றும் அதனால் தொடர்பிணைவு நிகழ்வுகள் வழியாக எடைமிகுந்த அணுக்கருக்கள் உண்டாகமுடியும் என்றும் எடுத்துக் காட்டினர். இவர்களது படிமங்கள் பின்னால் வந்த CNO சுழற்சியை ஒத்தன. என்றாலும் அப்போது அனைத்து விண்மீன்களும் நீரகத்தால் ஆகியவை எனக் கருதப்பட்டதால் இந்தக் கோட்பாடு உடனடியாக ஏற்கப்படவில்லை. அட்கின்சன் மீண்டும் 1930களில் இந்தக் கோட்பாட்டைப் பற்றி எழுதி, உயர்பொலிவு விண்மீன்கள் குறுகிய வாழ்நாள் உடையனவாக அமையவேண்டும் என்றார். மேலும் அவர் புடவியெங்கும் விரவியுள்ள தனிமங்கள் விண்மீன்களில் நிகழும் அணுக்கருப் பிணைவுவினையால் உருவாகியவையே என முன்மொழிந்ததோடு, வெண்குருளை விண்மீன்கள் மின்னிட அணுக்கரு வாயிலின் ஆற்றலேதும் தேவையில்லை என்றும் கூறினார்.[1]
அட்கின்சனின் எந்திரவியல் திறமை, யார்க் மினிஸ்டருக்கான வானியல் கடிகாரம் வடிவமைப்பதற்கான ஒரு ஆணையத்தை அமைக்கவும் மேலும் அதன்வழி யார்க் மினிஸ்டர் வானியல் கடிகாரம் செய்யப்படவும் வழிவகுத்தது.[2]