இரீட்டா மகட்டோ (Rita Mahato) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். பெண்கள் மறுவாழ்வு மையத்தில் பணிபுரிகிறார். 2014 ஆம் ஆண்டு மனிதநேயப் பணிகளுக்காக சுவீடிய அரசு வழங்கும் பெர் ஆங்கர் பரிசைப் பெற்றார்.
இரீட்டா மகட்டோ 14 வயதில் கட்டாயத் திருமணத்திற்கு ஆளானார். ஒரு வருடம் கழித்து தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது கணவரிடம் குடும்ப வன்முறையை அனுபவித்தார்.[1]
சிராகா மாவட்டத்தில் உள்ள பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இரீட்டா மகட்டா பணிபுரிகிறார். பாலியல் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு இந்தக் குழு உதவுகிறது.[2] 2007 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிய இருவரை ஆதரித்த காரணத்தால் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மகட்டோவை மிரட்டினர்.[3]மகட்டோ பணிபுரிந்த அலுவலகம் தாக்கப்பட்டது. ஒரு ஆண்கள் குழுவினரால் இவர் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்.[4]மனித உரிமைகளுக்கான பன்னாட்டு கூட்டமைப்பு, சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு மற்றும் பன்னாட்டு அம்னெசுட்டி அமைப்பு ஆகியவை இரீட்டா மகட்டோவுக்கு ஆதரவளித்தனர்.[4][3]
2014 ஆம் ஆண்டில் பாலியல் வன்முறைக்கு எதிரான செயல்பாட்டிற்காக மகட்டோ பெர் ஆங்கர் பரிசைப் பெற்றார்.[5]பரிசாகக் கிடைத்த 15,000 யூரோக்களை கொண்டு முதியோர் இல்லத்தை நிறுவப் போவதாகக் கூறினார்.[1]