இரு கோடுகள் (Iru Kodugal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இரு பெண்களை மணந்த ஒரு மனிதனைச் சுற்றி இக்கதை நகர்கிறது.[2] இரு கோடுகள் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[3] இந்த விருதை பெற்ற பாலச்சந்தரின் முதல் படம் இதுவாகும்.[2] இதே பெயரிலான ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், கன்னடத்தில் எரடு றெக்கேகளு என்றும், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என்றும், இந்தியில் சன்ஜோக் என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
காசியில் ஜானகியை (சௌகார் ஜானகி) பார்க்கும் கோபிநாத் (ஜெமினி கணேசன்) அவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்தை கோபிநாத்தின் தாயார் ஏற்கவில்லை, இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. ஜானகி கர்ப்பமாக இருக்கிறார், ஜானகியை எந்த ஆணும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்பதை உணர்ந்த அவரது தந்தை (வி. எஸ். ராகவன்), ஜானகியை மேற்கொண்டு படிக்கவைக்க முடிவு செய்கிறார். தமிழ்நாடு திரும்பும் கோபிநாத், ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். தனது முந்தைய திருமணத்தை மறைத்து ஜெயாவை (ஜெயந்தி) திருமணம் செய்து கொள்கிறார். இந்த இணையர் மூன்று குழந்தைகளுடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றனர். கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்துக்கு ஒரு புதிய ஆட்சியர் வருகிறார், அது வேறு யாருமல்ல அவரின் முதல் மனைவி ஜானகிதான்.
இருவரும் ஓரே அலுவலகத்தில் வேலைப்பார்த்துவருகின்றனர். ஜானகியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவரான பாபு (நாகேஷ்) ஜானகிக்கும் கோபிநாத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு வதந்தியை பரப்புகிறார். இந்த வதந்தி ஜெயாவை எட்டுகிறது. இதனால் ஜெயா முற்றிலும் கலக்கமடைகிறார். ஜானகிக்கும் கோபிநாத்துக்குமான உறவின் இரகசியத்தை ஜெயா கண்டுபிடிக்கிறார். இதனிடையே, ஜானகி, ஜெயா ஆகிய இருவரின் மகன்களான ராமு, பிரபாகர் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ராமு மருத்துவமனையில் இறந்துவிட, பிரபாகர் உயிர் பிழைக்கிறான். ஜெயா தன் மகனை ஜானகிக்கு பரிசாக அளிக்கிறாள். ஜானகிக்கு வெளிநாட்டில் பணி கிடைத்ததால் அவர் வெளிநாடு செல்கிறார்.
இரு கோடுகள் ஜோசப் ஆனந்தன் எழுதிய அதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[4] பாலச்சந்தர் மற்றும் கணேசனின் முதல் கூட்டணி இதுவாகும்.[5] சௌகார் ஜானகி வேடங்களை விரும்புகிக் கேட்கும் பழக்கமற்றவர் என்றாலும், பாலச்சந்தரிடம் அப்பாத்திரத்தைக் பாத்திரம் கேட்டு பெற்றுக்கொண்டார்.[6][7] படத்தில் ஒரு காட்சியில் ஜானகியின் கதாபாத்திரம் முதலமைச்சரை சந்திக்கிறது. பாலச்சந்தர் முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரையை (அவர் 1969 இல் இறந்தார்) காட்சிக்காகக் கொண்டுவர விரும்பினார், ஆனால் காட்சியில் அவரைக் காண்பிக்கவில்லை. மாறாக அண்ணாதுரையின் குரலை சிவகங்கை சேதுராஜனைக் கொண்டு பேசவைத்து காட்சியாக்கினார்.[8] மேலும், மேசையில் ஒரு ஜோடி கண்ணாடியும், முன்புறத்தில் ஒரு பேனாவும் காணப்படுகின்றன, இது அண்ணாதுரையை சித்தரிக்கும் நோக்கம் கொண்ட பாத்திரம் என்பதைக் குறிக்கிறது.[9]