இரேத்தா பீபி

இரேத்தா பீபி,1995

இரேத்தா எஃப். பீபி (Reta F. Beebe) (பிறப்பு: அக்தோபர் 10, 1936, பேக்க கவுண்டி, கொலராடோ) ஓர் அமெரிக்க வானியலாளரும் நூலாசிரியரும் வானியலில் மக்கள் அறிவியல் பரப்புரையாளரும் ஆவார். இவர் வியாழன், காரிக் கோளகள் ஆய்வில் வல்லுனர் ஆவார். வியாழன் எனும் பெருங்கோள் என்ற நூலின் ஆசிரியரும் ஆவார் .[1] இவர் நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறையின் தகைமைப் பேராசிரியராவார். இவர் 2010 இல் நாசாவின் சிரந்த பொதுமக்கள் சேவை பதக்கத்தை வென்றார்.[2][3]

இவர் பெருங்கோள்களுக்கான வாயேஜர் திட்டம் உள்ளடங்கிய பல நாசாவின் திட்டங்களின் திட்டமிடலிலும் மேலாண்மையிலும் பல்லாண்டுகள் செலவழித்துள்ளார். இவரது ஆய்வு ஆர்வம் வியாழன், காரிக்கோள், வருணன் (யுரேனசு), விண்மியம் (நெப்டியூன்) ஆகிய பெருங்கோள்களின் வளிமண்டலங்கள் பற்றி அமைந்தது. இவர் பெருங்கோள்களின் முகில்கள், காற்றுச் சுற்றோட்டம் ஆகியவற்றின் ஆய்விலும் அளத்தலிலும் ஈடுபட்டார்.[4] இவர் கலிலியோ, காசினி ஆகிய செயற்கைக்கோள் தரவுகளை விளக்க முயன்றார். மேலும், இவர் அபுள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வியாழன், காரிக்கோளின் வளிமண்டலங்களின் கூடுதல் தரவுகளைத் திரட்டினார். இவர் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்ற முதன்மை விண்வெளிக்குழுவாகிய கோள், நிலாத் தேட்டக் குழுவின் தலைவராவார். இவர் 1994 இல் சூமேக்கர்-இலெவி வியாழனைத் தாக்கியபோது, சூமேக்கர்-இலெவி வால்வெள்ளிப் பணிக்குழுவின் உறுப்பினராக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் இருந்தார்.[5] மிக அண்மையில் இவர் நாசாவின் பெருங்கோள்களுக்கான கோள்தரவு அமைப்பில் பணிபுரிந்து அவற்றின் தரவுகளைத் தொகுப்பதில் பங்கேற்றார். இவர் இத்திட்டத்தின் வளிமண்டலப் புலக்கணுவின் பொறுப்பாளரும் ஆவார்.[6] இவரது கோள்தரவு ஆவணமாக்கத் திறமையை ஐரோப்பிய விண்வெளி முகவாண்மையும் பயன்படுத்தியுள்ளது.[2] இவர் பன்னாட்டுக் கோள்தரவுக் கூட்டமைப்பின் முடுக்கல்குழுவிலும் பணிபுரிகிறார்.[2]

விருதுகள்

[தொகு]
  • இவர் 1989 இல் நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் பயிற்றல், ஆராய்ச்சி, படைப்புச் செயல்பாடு ஆகியவற்றுக்கான வெசுதாபர் விருதப் பெற்றார்[7]
  • இவர் 1998 இல் நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் டென்னிசு டபுள்யூ. தார்னல் புல உறுப்பினர் சாதனை விருதைப் பெற்றார்.[7]
  • இவர் 2003 இல் அமெரிக்க வானியல் கழக கோள் அறிவியல் புலங்கள் பிரிவின் அரோல்டு மாசுர்சுகி விருதப் பெற்றார்.[5]
  • இவர் 2010 இல் நாசாவின் சிரந்த பொதுமக்கள் சேவை பதக்கத்தைப் பெற்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]