இறையனார் அகப்பொருள் என்பது ஒரு தமிழ் இலக்கணநூல். அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இந்த நூல் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரை எழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாகப் பாண்டிக்கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம்.
தொல்காப்பியம் அகப்பொருள் இலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் நான்கு இயல்களில் கூறுகிறது. இந்த 4 இயல்களில் 212 நூற்பாக்கள் உள்ளன. அந்த நூற்பாச் செய்திகளை இந்த நூல் 60 நூற்பாக்களில் சுருக்கமாகச் சொல்கிறது.
என்பன போன்ற செய்திகள் இந்த நூலில் காணப்படும் புதுமைகள்.
அப்போது பாண்டிநாடு 12 ஆண்டு மழையின்றி வறண்டுபோயிற்று. பாண்டியன் சங்கப்புலவர்களை அழைத்து, இப்போது உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான். பின் நாடு செழித்தபின் பாண்டியன் புலவர்களை அழைத்துவரச் செய்தான். வந்தவர்களில் எழுத்து, சொல், யாப்பு இலக்கணத் துறையினர் மட்டும் இருந்தனர். இந்த இலக்கணங்கள் பொருளை அறிவதற்குத்தானே! பொருள் இலக்கணம் அறிந்தவர் இல்லையே! என்று அரசன் கவலைப்பட்டான். இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார். துப்புரவு செய்வோர் அதனை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அதற்கு உரை எழுதச் செய்து பெற்றான்.
தொல்காப்பியருக்குப் பின்னர்ப் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் தொகுக்கக் கூடியவை. அகத்திணை இலக்கணம் கூறும் நூல்களின் பட்டியலில் இந்த இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், களவியல் காரிகை ஆகியவை இடம்பெறத் தக்கவை.
உரை தோன்றிய வரலாறாக இந்த நூலின் உரையில் ஒரு கதை உள்ளது. பாண்டியன் வேண்டுகோளுக்கு இணங்கி இந்நூலுக்குப் பலர் உரை கண்டனர். அவற்றை உருத்திரசன்மன் என்பவனிடம் ஒவ்வொருவராகச் சொன்னார்கள். முருகக் கடவுள் ஒரு சாபத்தால் உப்பூரிக்குடி கிழாருக்கு ஊமை-மகனாகப் பிறந்திருந்தானாம். உரை கேட்டபோது ஐந்து வயது உடையவனாக விளங்கினானாம். அவன் பலரது உரையைக் கேட்டபோது அசைவற்றுக் கிடந்தானாம். மதுரை மருதனிளநாகனார் உரையைக் கேட்கும்போது ஆங்காங்கே வியந்து மெய்சிலிர்த்தானாம். கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்த உரையைக் கேட்கும்போது எப்போதும் மெய்சிலிர்த்து வியந்தானாம்.
இந்த நக்கீரனார் சங்கப்பாடல்களைப் பாடிய நக்கீரர் அல்லர். இவரது உரையில் வடசொற்கள் மலிந்து காணப்படுகின்றன. எனினும், தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்க வரலாற்றைக் கூறும் முதல்-நூல் இந்த உரைநூலே. இவரது உரையில் அரிய பல விளக்கங்கள் காணப்படுகின்றன.