இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (~1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீர் அற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.
இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று.[1] இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர்.[2]
இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் ஒரு பார்வையில் சீர்திருத்த செயலாக்கங்கள் ஆகும். அதாவது காலனித்துவ சட்டங்களால் பின்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டதாக சிலர் வாதிடுவர். இருப்பினும் இதை அரசு நிறைவேற்றிய முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. தனிச் சிங்கள சட்டம், இனக் கலவரங்கள் பின்புலத்தில் பார்க்கையில் இது தமிழ் மாணவர்களின் கல்வி வளங்களை வழிமாற்றும் செயற்பாடு என்றும் தோன்றுகின்றது.