இலங்கையின் தாழ்நில மழைக் காடுகள் (lowland rain forests) இலங்கைத் தீவின் தென்மேற்குப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீற்றரிலும் குறைந்த உயரத்தில் அமைந்த அயன மண்டல பொழில்களைத் தம்மில் உள்ளடக்குகின்றன. ஆண்டு முழுவதும் நிலவும் இளஞ்சூட்டு, ஈரலிப்பான காலநிலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து தனிப்பட்டு இருப்பதும் அப்பகுதிகளில் இலங்கையின் பொழில்களில் மாத்திரமே காணக்கூடியதான பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் கூர்ப்படைவதற்கு வழியமைத்தன[1]. இவற்றின் அடர்ந்த காட்டுப் பகுதி 45 மீற்றரிலும் கூடிய உயரம் வளரக்கூடிய 150 இலும் கூடிய எண்ணிக்கையான மர இனங்களைக் கொண்டமைந்துள்ளன. இலங்கையின் தாழ்நில பொழில்கள் இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 2.14 வீதத்தை உள்ளடக்குகின்றன[2]. இச்சூழற் காட்டுப் பகுதியிலேயே சருகு மான் போன்ற இலங்கைக்கேயுரித்தான விலங்குகள் காணப்படுகின்றன[3]. உலகில் அதி கூடிய எண்ணிக்கையான ஈரூடகவாழி இனங்கள் இலங்கையிலேயே காணப்படுகின்றன[1]. அவ்வாறான ஈரூடகவாழிகளில் 250 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான தவளை இனங்கள் இம்பொழில்களிலேயே வாழ்கின்றன.
124,340.8 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள தாழ்நில பொழில்கள் இலங்கையின் மொத்தப் பரப்பளவில் 2.14 வீதத்தைக் கொண்டுள்ளன[2]. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீற்றர் உயரத்துக்குக் கீழாக அமைந்துள்ள இக்காடுகள் பருவப்பெயர்ச்சி மழை மூலம் ஆண்டுதோறும் 2500-1800 மில்லிமீற்றர் மழையைப் பெறுகின்றன. இச்சூழற் பகுதியில் உள்ளடங்கும் காடுகளில் கன்னெலிய, விகாரகெலே, நாக்கியாதெனிய மற்றும் சிங்கராஜ ஆகிய காடுகள் அடங்குகின்றன. அத்துடன் பம்பரபொட்டுவ, மொரபிட்டிய, ருனாகந்த, கிலிமலே மற்றும் எரத்தனே ஆகிய இடங்களிலுள்ள பாதுகாகக்ப்பட்ட வனங்களும் இலங்கையின் தாழ்நில பொழில்களில் அடங்குகின்றன[4]. ஆண்டு முழுவதும் கிடைக்கும் மழைவீழ்ச்சியும் மாறாத வெப்பநிலையும் வளமான உயிர்ப்பல்வகைமையைப் பேணுகின்றன. இம்பொழில்கள் இப்பகுதி ஆறுகளுக்கான முக்கிய நீர்தாங்கு பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
மாவட்டம் | தாழ்நில பொழில்கள் ஹெக்டேயர் |
ஈரவலயக் காடுகள் ஹெக்டேர் |
அம்பாந்தோட்டை | 207 | 570.3 |
அம்பாறை | — | 45,519.2 |
இரத்தினபுரி | 36,035.1 | 5,746.4 |
கண்டி | 14,065.5 | 3,543.9 |
கம்பகா | 240.8 | — |
களுத்துறை | 14,021.2 | — |
காலி | 18,849.4 | — |
குருநாகல் | — | 1,260.9 |
கேகாலை | 9,985.1 | 44.2 |
கொழும்பு | 1,359.7 | — |
திருகோணமலை | — | 4 |
நுவரெலியா | 3,639.3 | 121.4 |
பதுளை | 1,610.6 | 15,750.8 |
பொலன்னறுவை | — | 46,388 |
மட்டக்களப்பு | — | 13,378.2 |
மாத்தளை | 8,217 | 31,108.7 |
மாத்தறை | 15,717.6 | 1,772 |
மொனராகலை | 392.5 | 56,769 |
மொத்தம் | 124,340.8 | 221,977 |
இலங்கையானது ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பரப்பிலிருந்து மிக ஒடுங்கிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம் சார் தீவாகும்[3]. இலங்கை ஒரு காலத்தில் கோண்டுவானாவின் பகுதியாக இருந்து பின்னர் கிரீத்தேசியக் காலத்தில் அதிலிருந்து பிரிந்து வடக்காக நகர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து 55 மில்லியன் ஆண்டுகளின் பின்னர் இந்தியப் புவித்தட்டுடன் இணைந்து ஆசியாக் கண்டத்துடன் இணைந்தது. இதனாலேயே இலங்கையில் பல்வேறு புராதன கோண்டுவானா இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. பிற்காலத்தில் இலங்கை மீண்டும் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நிலவிய உலர் காலநிலை காரணமாக இலங்கையின் தென்மேற்கு பொழில்களுக்கும் இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள காடுகளுக்குமிடையில் வித்தியாசங்கள் உருவாகின[3]. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிரிந்த பின்னர் நிலத்தொடர்களால் இலங்கைத் தீவு இந்தியாவுடன் காலத்துக்குக் காலம் தொடர்பு பட்டிருந்த போதும், இலங்கையின் ஈரப்பதன் மிக்க காடுகளும் அவற்றின் உயிர்ப்பல்வகைமையும் சூழலியல் தொடர்பில் மிகவும் வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன.
இச்சூழற் பகுதி 2500 மீற்றரிலும் உயர்ந்த மத்திய மலைநாட்டைப் பகுதியளவில் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரால் வேறுபடுத்தப்படுகிறது[3]. அம்மலைத்தொடர்கள் தமக்கேயுரித்தான இலங்கையின் மலைசார் பொழில்கள் எனப்படும் சூழற் பகுதிகளைக் கொண்டுள்ளன. தாழ்நில பொழில்கள் சூழற் பகுதியின் மண் பொதுவாக சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்திலான களி மண்ணாகும்[2]. மே முதல் செப்டெம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை காரணமாக இச்சூழற் பகுதி ஆண்டுதோறும் 5000 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இப்பகுதியின் வெப்பநிலை எப்போதும் 27 °C-30 °C அளவிற்குள்ளேயே இருக்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கு மிக அண்மையில் உள்ளபடியால் இதன் நாளாந்த வெப்பவுயர்வு குறைக்கப்படுகிறது. இப்பகுதியின் சராசரி ஈரப்பதன் 75%-85% ஆகும்[2].
இப்பகுதியின் தாவர அமைவில் நில அமைவிடம் மண்ணின் தன்மை என்பவற்றுடன் சேர்த்து காலநிலை பெரும் பங்கு வகிக்கிறது.[3] இலங்கையின் தாழ்நில பொழில்களில் இரண்டு வகையான பூக்கும் தாவரங்கள் பெரும்பாலாகக் காணப்படுகின்றன. அவை சிங்கள மொழியில் ஹொர என அழைக்கப்படும் இருசிறகி தாவரங்களும் நெதுன் தாவரங்களுமாகும். இவ்விரு வகையும் பொருளாதார ரீதியிலும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இலங்கையின் தேசிய மரமான நாகமரம் மேற்படி நெதுன் வகை சார்ந்த மரமாகும். இச்சூழற் பகுதியின் காடுகள் நான்கு வகையான தாவரவியல் பகுதிகளைக் கொண்டுள்ளன: முக்கிய பகுதித் தாவரங்கள் 30-40 மீற்றர் உயரமாகவும், அடுத்த பகுதித் தாவரங்கள் 15-0 மீற்றர் உயரமாகவும், கீழ்ப் பகுதித் தாவரங்கள் 5-15 மீற்றர் உயரமாகவும் நான்காவது பகுதி புதராகவும் காணப்படுகின்றன.[3] மேல் நிலைத் தாவரங்கள் 45 மீற்றரிலும் கூடிய உயரமுள்ளனவாகும். இப்பகுதியில் பல்வேறு வகையான கண்டல் தாவரங்களும் காணப்படுகின்றன.
இலங்கைக்கேயுரித்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் கிட்டத்தட்ட அனைத்தும் இலங்கையின் தென்மேற்கு பொழில்களில் காணப்படுகின்றன.[3] இளஞ்சூட்டு மற்றும் ஈரப்பதன் மிக்க இம்பொழில்கள் பௌதிக ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகள் வேறுபட்டிருந்தமையினால் விசேடமான இனங்கள் ஏராளமாக உருவாவதற்கு வழியேற்பட்டுள்ளது. இலங்கைக்கேயுரித்தான 360 க்கும் மேற்பட்ட தாவர இனங்களில் 60 வீதத்துக்கும் மேற்பட்டவை இச்சூழற் பகுதியில் மாத்திரமே காணப்படுகின்றன. இவையன்றி, இலங்கைக்கேயுரித்தான தாவர இனங்களில் 61 இனங்கள் இந்தத் தாழ்நில பொழில்களிலும் இலங்கையின் மலைசார் பொழில்கள் மற்றும் இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள் என்பவற்றில் விரவிக் காணப்படுகின்றன. ஆசிய பொழில்களில் பெரும்பான்மையாகக் காணப்படும் இருசிறகி தாவரங்களில் தனித் தன்மையான பலவும் இலங்கையின் தாழ்நில பொழில்களில் காணப்படுகின்றன.[3] இலங்கைக்கேயுரித்தான இருசிறகித் தாவர இனங்கள் 58 இலும் ஒரேயொரு இனத்தைத் தவிர ஏனைய அனைத்தும் இம்பொழில்களில் மாத்திரமே காணப்படுகின்றன. இலங்கையின் தாழ்நில பொழில்களும் ஓரளவிலான மலைசார் பொழில்களும் தெற்காசியாவின் எந்தப் பகுதியையும் விட பூக்குமினங்களின் கூடுதலான வகைகளைக் கொண்டுள்ளன.
பெரிய விலங்குகள் வாழத் தக்க அளவு பெரியளவிலான நிலப் பரப்பு இலங்கையில் இல்லை. அவ்வாறிருந்த போதும் காண்டாமிருகம், நீர்யானை, சிங்கம் போன்றவற்றின் படிவுகள் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொஞ்சமேயானாலும் இச்சூழற் பகுதியில் சருகு மான் போன்ற இலங்கைக்கே உரித்தான முலையூட்டிகள் காணப்படுகின்றன. அவற்றில் பல மிக அரிய விலங்கினங்களாகும். இலங்கையில் வாழும் மிகப் பெரிய ஊனுண்ணியான இலங்கைச் சிறுத்தை தற்போது அழிவடைந்து வரும் நிலையில் உள்ளது. இம்பொழில்களில் சிறு சிறு கூட்டங்களாக வாழும் ஆசிய யானை அரிய உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகள் போலன்றி இச்சூழற் பகுதியில் வாழும் யானைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன. இச்சூழற் பகுதியில் காட்டு முயல், புள்ளிமான், மீன்பிடிக்கும் பூனை போன்ற பல முலையூட்டி இனங்கள் காணப்படுகின்றன.[4]
இச்சூழற் பகுதி இலங்கைக்கேயுரித்தான பறவைகள் வாழும் பிராந்தியத்தினுள்ளேயே முழுமையாக அமைந்திருக்கிறது. இங்கு வாழும் பறவையினங்களில் பதினாறு இனங்கள் இலங்கைக்கேயுரித்தானவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பசுஞ் சொண்டுச் செம்பகம், இலங்கை இரட்டை வாற் குருவி போன்றன அரிதாகி வருவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3]
இலங்கையில் காணப்படும் 204 ஊர்வன இனங்களில் 114 இலங்கைக்கு தனிச் சிறப்பானவையாகும். மேலும் 17 ஊர்வன இனங்கள் அவற்றின் துணை இன அடிப்படையில் இலங்கைக்கு தனிச் சிறப்பானவையாக உள்ளன.[5] இப்பகுதியில் காணப்படும் மீனினங்களில் எட்டு வகை இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையும் அரிதாகிவிட்டவையும் ஆகும். உலகில் ஆகக் கூடுதலான ஈரூடக வாழி இனங்கள் இலங்கையிலேயே காணப்படுகின்றன. இலங்கையின் தாழ்நில பொழில்களில் காணப்படும் இலங்கைக்கேயுரித்தான 250 க்கும் மேற்பட்ட தவளையினங்கள் மிகக் குறைந்தளவு பரப்பளவிலான பகுதிகளிலேயே விரவிக் காணப்படுகின்றன. அவற்றிற் பல அரை சதுர கிலோமீற்றர் போன்ற அளவுகளுக்குள்ளேயே தம் வாழிடத்தைக் குறுக்கிக் கொண்டுள்ளன. அவ்வினங்களும் தற்காலத்தில் வாழிடமிழத்தலால் அழிவுறும் நிலையை எதிர்நோக்குகின்றன.
இலங்கையின் பொழில்களில் பெரும்பாலானவை கோப்பி, சிங்கோனா, தேயிலை, இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைகளுக்காக அழிக்கப்பட்டுள்ளன[6]. இலங்கையில் எஞ்சியிருக்கும் மொத்த வனப் பகுதி இலங்கையின் நிலப் பரப்பில் வெறுமனே 4.6 வீதமாகும். 1990-2005 காலப்பகுதியில் உலகில் அதிகமான முதல் நிலைக் காடழிப்பு நடைபெற்ற இடங்களில் இலங்கையும் ஒன்றாகும்.[7][8] 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, இலங்கைக்கேயுரித்தான தவளை இனங்களில் பதினொன்று அதற்கு முந்திய பத்தாண்டுகளில் முற்றும் அழிந்து விட்டுள்ளன. அத்துடன், மேலும் 11 தவளை இனங்கள் அழிவுறும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. அவற்றின் வாழிடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினாலேயன்றி அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது மிகக் கடினம்.[8] மேலும் எஞ்சியுள்ள காட்டுப் பகுதிகள் செறிவற்ற நிலையில் ஆங்காங்காகக் காணப்படுகின்றன.[6] அவற்றில் பலவும் 10 சதுர கிலோமீற்றரிலும் குறைந்த பரப்பளவையே கொண்டுள்ளன. வன விலங்குகளை வேட்டையாடுவதும் காட்டு வளங்களை வெளியெடுப்பதும் இங்குள்ள காடுகள் எல்லாவற்றுக்கும் பாரிய பாதிப்புக்களைக் கொடுத்துள்ளன. எனினும், இலங்கையில் சில சூழற்காப்புப் பகுதிகள் தற்காலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன.
சூழற் பகுதியைப் பாதுகாப்பதற்கான பகுதிகள்:
பாதுகாக்கப்பட்ட பகுதி | பரப்பளவு |
IUCN வகைப்படுத்தல் |
---|---|---|
ஸ்ரீ ஜயவர்தனபுர பறவைகள் சரணாலயம் | 30 | |
சிங்கராஜக் காடு | 100 | |
தெல்வத்த | 20 | |
அத்திடிய சதுப்பு நிலம் | 10 | |
சிகரக் காட்டுவள சரணாலயம் | 100 | |
மொத்தம் | 260 |
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)
{{cite web}}
: Unknown parameter |coauthors=
ignored (help)