இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பகுதி |
இலங்கைத் தமிழர் வரலாறு |
---|
கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு தமிழீழ வலைவாசல் தமிழர் வலைவாசல் இலங்கை வலைவாசல் |
பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.[1]
கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராசேந்திர சோழன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.[2] இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.
ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது மகனும் இலங்கையின் இளவர்சனுமான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர் ருகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான்[3].
காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது [3]. இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது.
தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவையும் வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை.
விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான் [4].
கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருகுணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.
கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலாதிக்கப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி, மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது.[5]. கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.
17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது.
இந்தியாவில் இருந்து பிராமணர் வரவழைக்கப்பட்டு இந்து ஆலயக்கிரியைகள் நடை பெற்றது. இவர்கள் குடியிருந்த இடங்கள் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.
உதாரணம் : பொலநறுவையில் இராஜ இராஜன் சதுர்வேதி மங்கலம் பொலநறுவைக்கு வடக்கே ஐயம் கொண்டார் சதுர்வேதி மங்கலம் அமைக்கப்பட்டதை கூறலாம்.
இவர்களே சிவாலயங்களில் கிரியை செய்பவர்களாக காணப்பட்டனர். இவர்களுக்கு சிவப்பிராமணர் என்ற பட்டமும் மன்னனால் வழங்கப்பட்டது.
பட்டர் தேவகர்மியர் என்போர் ஆலயங்களில் திருமுறைகள் பாடும் தேவரடியார்களாக நியமிக்கப்பட்டனர்.
ஐந்நூற்றுவர் என்ற வணிக கனம் பூசைக்கு தேவையான அகில், கற்பூரம், சீலப்பட்டு, சந்தனம் என்பவற்றை தாரளமாக இறக்குமதி செய்து வழங்கினர்.
{{cite book}}
: Unknown parameter |coauthors=
ignored (help)
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)