இலி தொல்லியல் பூங்கா ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரங்களில் ஒன்றான அல் எயினுக்கு வெளியே அல் எயின் - துபாய் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஒரு தொல்லியல் களமும், ஒரு பொதுப் பூங்காவும் ஒருங்கே அமைந்துள்ளன. கிமு 2000 - 2500 காலப்பகுதியைச் சேர்ந்த வெண்கலக்காலக் குடியேற்றம் ஒன்றின் எச்சங்களைக் கொண்டுள்ள இத் தொல்லியல் களத்தில் 1995 ஆம் ஆண்டில் அகழ்வாய்வுகள் செய்யப்பட்டன. பெறுமதி வாய்ந்த பல தொல்பொருட்கள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பல 4000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தவை. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் பல அல் எயின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொன்மை வாய்ந்த சில அமைப்புக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.[1][2][3]
இத் தொல்லியல் களத்தையும் உள்ளடக்கி ஒரு பொதுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கே பல வகையான தாவரங்களும், நீரூற்றுக்களும், சிறுவர் விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன. இதனால் தொல்லியல் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமன்றி உள்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த பொழுது போக்குச் சுற்றுலாப் பயணிகளும் இவ்விடத்துக்கு அதிக அளவில் வருகிறார்கள்.
இவ்விடத்துக்கு அருகிலே புதைபடிவப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இப்பள்ளத்தாக்கில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியைக் கடல் மூடியிருந்தபோது வாழ்ந்த உயிர்களின் புதைபடிவங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.