இலியாசு காசுமீரி(Ilyas Kashmiri), சில நேரங்களில்மௌலானா இலியாசு காசுமீரி[1] மற்றும் மொகமது இலியாசு காசுமீரி[2] என்றும் அறியப்படுபவர் (10 பெப்ரவரி, 1964[3] – 3 சூன் 2011[4][5]) சோவியத்-ஆப்கன் போர், காசுமீர் சண்டை மற்றும் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல்களில்[6] தொடர்புடைய மூத்த அல் குவைதா உறுப்பினராவார். ஆகத்து 2010இல் ஐக்கிய அமெரிக்காவும்ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இவரை தீவிரவாதி என அறிவித்தன.[7][8] அல் குவைதாவின் தலைவராக உசாமா பின் லாதனிற்குப் பிறகு பொறுப்பேற்கக்கூடியவராக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக என்பிசி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.[9]
சூன் 3,2011 அன்று தாலிபான் செல்வாக்குமிக்க தெற்கு வசிரிஸ்தானில் குவாக்குவா பகுதியில் நடத்திய ஐக்கிய அமெரிக்க ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் காசுமீரி உட்பட ஒன்பது தீவிரவாதிகள் ஏவுகணையால் கொல்லப்பட்டனர்.[4][5][10] இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று தீவிரவாதிகள் பலத்தக் காயமடைந்தனர்.[5] தாக்குண்ட வீட்டில் இருந்தவர்கள் அனைவருமே பஞ்சாபி தாலிபான்கள் என உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.[5] பத்து நாட்கள் முன்னர்தான் காசுமீரி கைபர் பக்தூன்க்வாவிலிருந்து வானாவிற்கு இடம் பெயர்ந்தார்.[5] டெக்ரிக்-இ-தாலிபான் அமைப்பின் பேச்சாளர் காசுமீரி நலமுடன் இருப்பதாகவும் எறிகணைத் தாக்குதலின்போது அங்கு இல்லை என்றும் கூறினார்.[4] எனினும் காசுமீரியின் இறப்பை உறுதி செய்து அர்கத் உல் ஜிகாத் இசுலாமி மின்னஞ்சல் அனுப்பியதாக பெயரில்லா பாகிஸ்தானிய அலுவலர் கூறினார்.[11] மேலும் தாக்கப்பட்ட வீட்டின் சொந்தக்காரருடன் தொடர்புள்ள போராளித் தலைவர் முல்லா நசீரின் தொடர்பு அதிகாரி லாலா வசீர் இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.[12]