இலீ ஆன்னி வில்சன் (Lee Anne Willson) (பிறப்பு: 1947) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது உட்பட, பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2008 இல் அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தின் தகைமை விருதையும் பெற்றார். இவர் வலிவாக, பெண்கள் அறிவியல் துறையில் முன்னேறுவதற்கு அரும்பாடுபட்டுவருகிறார்.[1][2]
மோர்தி என்ற முன்மணப்பெயரைக் கொண்ட இலீ ஆன்னி வில்சன் அவாய், ஓனலுலுவில் 1947 மார்ச்சு 14 இல் பிறந்தார். வில்சன் இளமை முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஓர் அறிவியலாரின் மகளாகிய இவர், இளமையில் அறிவியல் புனைவு நூல்களைப் படிப்பதில் தன் நேரத்தைச் செலவிட்டார். பள்ளித் தொடக்க வகுப்பில் இருந்தபோது இவர் விண்வெளி வலவராக வேண்டும் எனும் அவாவைக் கொண்டிருந்தார். ஆனால் இந்தக் கனவு அவரது பார்வைக் குறைவும் முடங்கிய முட்டியும் பெண் என்பதாலும் இயலாதென அறிந்தார். இருந்தாலும் இவர் விண்வெளி பற்றி அறிய விரும்பினார். எனவே வானியலாளராக முடிவெடுத்தார்.
வில்சன் 1968 இல் இயற்பியலில் தன் இளங்கலைப் பட்டத்தை ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். இங்கே இவர் அறிவைப் போலவே பொறுமையும் முதன்மையானது என்பதை உணர்ந்தார். இவர் உயர்நிலை இயற்பியல் கற்க விரும்பினர். இவர் பெண் என்பதால் இதை இவரது பேராசிரியர் ஒப்பி ஏற்கவில்லை. இவர் அதற்குப் பேராசிரியரிடம், "திங்கள் கிழமை வகுப்பில் உங்களைப் பார்க்கிறேன்" எனத் துணிவோடு மறுமொழி அளித்துள்ளார். இவர் 1968 முதல் 1969 வரை சுட்டாக்கோல்மில் புல்பிரைட் அறிஞராகவும் அமெரிக்கச் சுகாண்டிநேவிய அறக்கட்டளை அறிஞராகவும் கல்வி கற்றுள்ளார்.
இவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு படித்து வானியலில் 1970 இல் தன் முதுவர் பட்டத்தைப் பெற்றார். மேலும் 1973 இல் தன் முனைவர் பட்டத்தை வானியலில் பெற்றார். இவர் பட்டமேற்படிப்பு படிக்கும்போதே மீராவின் இயல்புகள் எனும் கருத்தரங்க உரையை ஆற்றியுள்ளார். இவர் அயோவா அரசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும் இத்தலைப்பில் மேலும் ஆழமாக ஆய்வு மேற்கொள்ளலானார்.[1][2]
இவர் அயோவா அரசு பல்கலைக்கழகத்தில் 1973 இல் பணியில் சேர்ந்தார். வானியல் துறையைத் தவிர, பிற துறையினர் இவரது பணி முன்னேற்றத்தை ஏற்க மறுத்தனர். ஏனெனில், இவர் தனது கணவரைப் பின்பற்றி கல்வி கற்பித்தலிலேயே நேரம் செலவிடுவதாகக் கருதினர். இவர் பல்கலைக்கழக வானியல் நிகழ்ச்சியை செழுமைப்படுத்த முடிவெடுத்தார். வில்சன் மற்றோர் அறிவியலாரான சுட்டீவன் கில்லுடன் இணைந்து மீரா விண்மீன் தனிவழியில் அலைவுறுவதான கோட்பாட்டை அறிவித்தனர். அப்போது இக்கோட்பாடு பிறரால் மறுக்கப்பட்டாலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது இவர் முதன்மைத் தொடர் விண்மீன்கள், தாம் அலைவுறும்போது பொருண்மையை இழக்கின்றனவா எனும் ஆய்வில் ஈடுபட்டுள்லார்.
இவர் பல கல்வியியல் பதவிகளில் இருந்துள்ளார். இவர் கனடியக் கோட்பாட்டு வானியற்பியல் நிறுவனத்தில் 1985 இல் வருகைதரு ஆய்வுறுப்பினராகப் பணிபுரிந்தார்; 2007 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு வானியலாளராக இருந்துள்ளார். இவர் 1991 இலும் 2003-2004 இலும் உப்சாலா பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளார்; இவர் அதே கால இடைவெளிகளில் மின்னசோட்டா பலகலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராக இருந்துள்ளார்; இவர் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மையத்தில் 2003-2004 இல் இருந்துபணிபுரிந்து வருகிறார்.[1][2]
இவர் 20 ஆண்டுகளாக அமெரிக்க வானியல் கழகத்தில் தன் நேரத்தைச் செலவிட்டுள்ளார்; இவர் 1993 முதல் 1996 வரை அதன் மன்ற உறுப்பினராக இருந்தார்; இவர் 2006 முதல் 2010 வரை அதன் பதிப்புக்குழுவில் இருந்தார்; 2009 முதல் 2012 வரை அதன் துணைத்தலைவராக இருந்துள்ளார். இவர் 2004 அக்தோபரில் இருந்து நான்குமுறை அமெரிக்க மாறும் விண்மீன் கழகத்தின் மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்; முதுநிலை துணைத்தலைவராக இருமுறையும் தலைவராக இரண்டு ஆண்டுகளும் இருந்தார்; மேலும், முன்னாள் துணைத்தலைவராக இரண்டாண்டுகள் இருந்துள்ளார். இவர் அதன் இயக்குநர்குழும உறுப்பினராக 1989 முதல் 2002 வரை இருந்தார்.
இவர் அயோவா மாநிலக் கணிதவியல் பேராசிரியரான ஜே. வில்சனை 1969 ஜூலை 19 இல் மணந்தார். இவர்களுக்கு கேந்திரா, ஜெப்ரி என இரு குழந்தைகள் உண்டு. இவர் அயல்மொழிகள் படிப்பதிலும் சறுக்கு விளையாட்டிலும் ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் ஐந்தண்டுகளுக்கு அயோவாவில் அமேசு சறுக்கு விளையாட்டுக் குழுமத்தில் தலைவராக இருந்துள்ளார். இவர் 1995 இல் இருந்து ஒரிகாமித் தாள்படிமக் கலையில் ஈடுபட்டு வருகிறார். இவர் மற்றவகைப் பெட்டக ஒரிகாமிக் கலையிலும் ஆர்வம் காட்டிவருகிறார்.[2]