ஈ. இராமதாஸ் | |
---|---|
பிறப்பு | விழுப்புரம் |
இறப்பு | 23 சனவரி 2023 |
பணி | இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1979–2023 |
ஈ. இராமதாஸ் (E. Ramdoss) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே பணியாற்றியுள்ளார்.[1]
இராமதாஸ் தமிழ்நாட்டின், விழுப்புரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் எதிராஜுலு பிள்ளை மற்றும் பூங்கவனம் ஆகிய இணையருக்கு மகனாக பிறந்தார். தன் இளம் வயதில், இவர் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்தார். கல்லூரியில் படித்த காலத்தில், திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டார். பின்னர் இவர் 1979 இன் பிற்பகுதியில் சென்னை, மைலாப்பூருக்கு குடிபெயர்ந்தார். தமிழ் திரையுலகில் பணியாற்ற முயன்றார், அங்கு இவரது அண்டை வீட்டுக்காரராக இருந்த திரைப்பட தயாரிப்பாளரான மனோபாலாவுடன் பழகினார். மனோபாலா இவரை டி.கே.மோகன் உள்ளிட்ட திரைப்பட பிரமுகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்காக இராமதாஸ் முதன்முதலில் வெளிவராத "கரடி" (1980) என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதினார்.[2] இராமதாஸ் தனது முதல் திரைக்கதை பணியாக பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா ஆகியோர் நடித்த "எனக்காக காத்திரு"(1981) படத்திற்காக எழுதினார். நிவாசுடன் பணிபுரிந்த பிறகு, இராமதாஸ் ஆறு படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியிடம் பணிபுரிந்தார். கோவைத்தம்பியின் பல படங்களின் வெற்றிக்குப் பிறகு மோகன், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" (1986) படத்தின் மூலம் இராமதாசை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். தயாரிப்பாளருக்கும் படத்தின் அசல் இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. ஆனாலும் படத்திற்கு இது ஒரு இலவச விளம்பரமானதால், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இவரது அடுத்த படமான "ராஜா ராஜாதான்" (1989) படத்தில் ராமராஜன், கௌதமி ஆகியோர் முன்னணி வேடங்களில் தடித்தனர். அப்படமானது வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரியும் வாய்ப்புகளைப் பெறுவதில் தோல்வியுற்ற இராமதாஸ் அடுத்து மன்சூர் அலி கானுடன் "இராவணன்" (1994) என்ற அதிரடி நாடகப்படத்தையும் "வாழ்க ஜனநாயகம்" (1996) என்ற அரசியல் நையாண்டி படம் என்று இரண்டு படங்களை உருவாக்கினார். பின்னாளில் இராமதாஸ் ஒன்பது இயக்குநர்களுடன் இணைந்து பல நாயகர்கள் நடிக்க 24 மணிநேரத்தில் எடுக்கபட்ட சுயம்வரம் (1999) படத்தில் பணியாற்றினார். அப்படத்தில் பாண்டியராஜன், கஸ்தூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.[2] இயக்குநராக இவர் பணியாற்றியதைத் தவிர பெரும்பாலும் எழுத்தாளராக மற்ற திரைப்பட இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தார், "மக்கள் ஆட்சி" (1995), "சங்கம் ", "கண்ட நாள் முதல்" (2005) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். பின்னர் இவர் "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்" (2004) படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார். பின்னர் இவர் "யுத்தம் செய்" (2011) படத்தில் காவலராக நடித்தார். அதைத் தொட்ந்து "காக்கிசட்டை" (2015), "விசாரணை"(2016), "தர்மதுரை" (2016), "விக்ரம் வேதா" (2017) ஆகிய படங்களில் நடித்தார்.[3][4][5][6]
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1986 | ஆயிரம் பூக்கள் மலரட்டும் | தமிழ் | |
1989 | ராஜா ராஜாதான் | தமிழ் | |
1991 | நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு | தமிழ் | |
1994 | இராவணன் | தமிழ் | |
1996 | வாழ்க ஜனநாயகம் | தமிழ் | |
1999 | சுயம்வரம் | தமிழ் |