‘வீணை காயத்ரி’ என்றழைக்கப்படும் ஈச்சம்பட்டி காயத்ரி (பிறப்பு: நவம்பர் 9, 1959) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞர் ஆவார்.
பெற்றோர்: ஜி. அசுவத்தாமா (தெலுங்குத் திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்), கமலா அஸ்வத்தாமா (வீணைக் கலைஞர்). காயத்ரியின் இயற்பெயர்: காயத்ரி வசந்த ஷோபா. தனது ஆரம்பகால இசைப் பயிற்சியை பெற்றோரிடம் கற்றார். பிறகு டி. எம். தியாகராஜனிடம் (சங்கீத கலாநிதி விருது பெற்ற பாடகர் மற்றும் வாக்கேயக்காரர்) மாணவராக பயிற்சி பெற்றார்.
இவரின் முதல் மேடைக் கச்சேரி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தியாகராஜா விழாவில்’ நடந்தது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவினால் நடத்தப்பட்ட இந்த விழாவில், தனது 9ஆவது வயதில் காயத்ரி, வீணை இசை நிகழ்ச்சியை வழங்கினார். இதன்பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார். இசைத் தொகுப்புகள் பலவற்றை ஒலிதத் துறையில் வெளியிட்டுள்ளார்.