ஈத்தர் ஏ. நட்சன்(Heather A. Knutson) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக புவியியல், கோள் அறிவியல் பிரிவில் உள்ளார்.[1] இவர் புறக்கோள்களின் உருவாக்கம், இயைபுக் கூறுகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் தனது புறக்கோள் வளிமண்டலங்களின் ஆய்வுக்காக அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான நியூட்டன் இலேசி பியர்சு பரிசை வென்றுள்ளார்.[2]
மக்கள் அறிவியல் இவரை “ வளிமண்டலக் கள வெப்பநிலை, வானிலை, இயைபுக் கூறுகளைக் கண்டறியும் முதல் புறக்கோள் வானிலையியலாளர்” எனக் கூறுகிறது.[3]
இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளவல் பட்டம் படிக்கும்போது, பகுதி நேரமாக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் அகப்பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் 2004 இல் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டத்தைத் துறை, பல்கலைக்கழகத் தகைமையோடு பெற்றுள்ளார்.[4]
இவர் தன் ஆய்வுரையை 2009 இல் முனைவர் பட்டம் பெற வழங்கியுள்ளார்.[5] ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் 2009 இல் வானியலில் முனைவர் பட்டத்தை ஈட்டினார்.[4] இவரது மிக அண்மைக் கண்டுபிடிப்பு தோராயமாக அரைப்பகுதி வளிமப் பெருங்கோள்கள் தம்மில் இருந்து தொலைவில் வட்டணையில் சுற்றும் துணைக்கோள்களைப் பெற்றுள்ளன என்பதாகும்,[6] இந்த முடிவு, வெப்பமிகும் புற வியாழன்களின் உருவாக்கத்தின்போது ஏற்பட்ட கோள்நகர்வை உறுதிபடுத்துகிறது.