இந்த நிலையத்திற்கு பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பேராக் மாநிலத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் மற்றும் சரக்குத் தொடருந்துகளைக கையாளும் முனையமாகவும் செயல்படுகிறது.[1]
இந்த நிலையம் ஆர்தர் பெனிசன் அப்பேக் (Arthur Benison Hubback) என்பவரால் வடிவமைக்கப்பட்டது. தற்போதைய நிலையம் அதிகாரப்பூர்வமாக 1917-இல் திறக்கப்பட்டது. ஈப்போவின்தாஜ் மகால் (Taj Mahal of Ipoh) என்று அதன் உள்ளூர் மக்களால் அன்பாக அழைக்கப்படுகிறது.[2][1]
இந்த நிலையம், பாங்லிமா புக்கிட் காந்தங் வகாப் சாலையில் (Jalan Panglima Bukit Gantang Wahab) அமைந்துள்ளது. இந்த சாலை ஈப்போ பிரதான தபால் அலுவலகம் (Ipoh Main Post Office), ஈப்போ நீதிமன்ற வளாகம் (Ipoh Court Complex) மற்றும் ஈப்போ நகர மண்டபம் (Ipoh Town Hall) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அத்துடன் பர்ச் நினைவுக் கடிகார கோபுரம் (Birch Memorial Clock Tower), ஈப்போ திடல் (Padang Ipoh), துன் ரசாக் நூலகம் (Tun Razak Library) மற்றும் மாநில மசூதி (State Mosque) போன்ற பிற இடங்களும் அருகிலேயே அமைந்துள்ளன.
முதல் ஈப்போ தொடருந்து நிலையம் 1894-இல் கட்டப்பட்டது. பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது. அதன் பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவையில் (Federated Malay States Railways) ஒருங்கிணைக்கப்பட்டது.[3]
1914-ஆம் ஆண்டில், பழைய நிலையத்திற்குப் பதிலாக தங்கும் விடுதியுடன் இரண்டாவது நிலையம் கட்டுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. முதல் உலகப் போரின் போது பொருள் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் செலவுகள் காரணமாக, நிலையம் 1917-இல் தான் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய இரட்டை அடுக்கு நிலையக் கட்டிடம் அதிக இடவசதியுடன் கட்டப்பட்டது. அதில் தொடருந்து நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் மெஜஸ்டிக் (Majestic Hotel) தங்கும் விடுதியைக் கொண்டிருந்தது. இந்தத் தங்கும் விடுதி முதலில் 17 படுக்கையறைகளுடன் கட்டப்பட்டது. 1936-இல் இந்தத் தங்கும் விடுதி அதன் அறைகளின் எண்ணிக்கையை 21-ஆக உயர்த்தியது.[4]
கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலையத்தின் ஒட்டுமொத்த தளவமைப்பு பெரும்பாலும் மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது
டவுன் பாய் (1981) (Town Boy) எனும் திரைப்படத்தில் ஈப்போ நிலையத்தின் 1917-ஆம் ஆண்டு இறுதிக் கட்டுமானப் பணிகளை விவரிக்கும் வெளிப்புற மற்றும் அசல் நடைமேடை காட்சிகள்;
அன்னா அன்ட் த கிங் (1999) (Anna and the King) திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளமாக ஈப்போ நிலையம் பயன்படுத்தப்பட்டது.[5]