ஈரானில் சுற்றுலா (Tourism in Iran) 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி வெளிநாட்டிலிருந்து 8-9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஈரானுக்கு வருகை தருகின்றனர். ஈரானில் சுற்றுலா வேறுபட்டது, இது அல்போர்சு மற்றும் ஜாக்ரோசு மலைகளில் நடைபயணம் மற்றும் பனிச்சறுக்கு, பாரசீக வளைகுடா மற்றும் காசுப்பியன் கடலின் கடற்கரை விடுமுறைகள் வரை பல நடவடிக்கைகளை வழங்குகிறது. ஈரானிய அரசாங்கம் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் வருகை அதிகரித்துள்ளது.
கிஷ் தீவு மட்டும் 2012-3ல் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. பயனிகளில் பெரும்பாலோர் ஈரானியர்கள். ஆனால் இப்பகுதி பல ஈரானியரல்லாத முஸ்லிம்களையும் ஈர்க்கிறது. அவர்கள் இஸ்லாமிய பாணி கடற்கரைகளுடன் கடற்கரை விடுமுறை நாட்களை விரும்புகிறார்கள். அங்கு ஆண்களும் பெண்களும் தனித்தனி கடற்கரைகளைப் பயன்படுத்துகிறார்கள். [1] [2]
1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்கு முன்னர், சுற்றுலா அதன் குறிப்பிடத்தக்க ஈர்ப்புகளுக்காக ஈரானுக்குச் செல்லும் கணிசமான எண்ணிக்கையிலான பார்வையாளர்களால் வகைப்படுத்தப்பட்டது. இதில் கலாச்சார சிறப்பம்சங்கள் மற்றும் பலவிதமான மற்றும் அழகான நிலப்பரப்பு ஆகியவை பொருத்தமானவை. [1]
புரட்சிக்குப் பின்னர், ஈரானுக்கு வந்து செல்லும் வெளிநாட்டு பார்வையாளர்களில் பெரும்பாலோர் மத யாத்ரீகர்கள் மற்றும் வணிகர்கள் ஆவர். ஈரானில் பல சியா ஆலயங்கள் உள்ளன. மசுகதுவில் இமாம் ரெசா ஆலயம் மற்றும் கும்மில் உள்ள பாத்திமா அல் மசூமா ஆலயம் ஆகிய இரண்டும் முக்கிய இடங்களாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈரான் மற்றும் பிற சியா நாடுகளில் இருந்து இலட்சக் கணக்கான யாத்ரீகர்கள் இந்த புனித இடங்களுக்கு வருகிறார்கள். [1] [3] அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் ஈரானுக்கு வணிகத்திற்காக பயணிப்பவர்களுக்கும் மகிழ்ச்சிற்காக வருபவர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை, மேலும் பல புலம்பெயர்ந்த ஈரானியர்களும் ஈரானில் உள்ள தங்கள் குடும்பங்களை சந்திக்க திரும்பி வருவது அல்லது மசுகது, கோம் மற்றும் பிற இடங்களுக்கு அருகிலுள்ள புனித சியா தளங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதும் இதில் அடங்கும்.
1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது சுற்றுலா வியத்தகு முறையில் குறைந்தது.
2010 கணக்கின்படி ஈரானில் உள்நாட்டு சுற்றுலா உலகின் மிகப்பெரிய ஒன்றாகும். [4]
2013 ஆம் ஆண்டில், ஈரானில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.76 மில்லியனை எட்டியது, இது தேசிய பொருளாதாரத்திற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக பங்களித்தது. [3] [5] 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஈரானிய ரியாலின் வலுவான மதிப்புக் குறைப்பு ஈரானில் சுற்றுலாவுக்கு சாதகமான ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 2014-2015 நிதியாண்டில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஈரானுக்கு வந்துள்ளனர். இது ஆண்டுக்கு நான்கு சதவீதம் அதிகம். [6] உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா சபை 2015 இல் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, அதன் சுற்றுலாத் துறையின் அளவு 1,285,500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 1,913,000 வேலைகளுக்கு 4.1% உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின் அடிப்படையில், பயண மற்றும் சுற்றுலா 413,000 வேலைகளை நேரடியாக ஆதரித்தது (மொத்த வேலைவாய்ப்பில் 1.8%). இது 2015 ஆம் ஆண்டில் 4.4% ஆக உயரும் என்றும் 2025 ஆம் ஆண்டில் 656,000 வேலைகளுக்கு (மொத்த வேலைவாய்ப்பில் 2.2%) 4.3% உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. [7]