உதயகிரிக் கோட்டை இந்தியாவின் தற்காலத் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இது நாகர்கோயில் நகரில் இருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.
90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.[1][2]
டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை (டி லனோய்ஸ் கோட்டை - De Lennoy's Fort) என அழைக்கப்பட்டு வந்தது.
இக்கோட்டை, திருவனந்தபுரம் - நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.
உதயகிரிக் கோட்டை தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே பல்லுயிர்மப் பூங்கா என்ற பெயரில் சில மான்கள் வேலியிடப்பட்ட சிறிய பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் காதற்பறவைகளும் கினி பன்றிகளும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. கினிக் கோழிகள் தன்னிச்சையாயத் திரிகின்றன. மீன் காட்சியத்தில் சில வகை மீன்கள் உள்ளன. அத்தோடு பர்மா பாலத்தில் நடத்தல், மரக் குடிலில் ஏறுதல் போன்றவற்றுக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப் பூங்காவில் குடும்பத்துடன் வருவோர், தனியாய் வரும் ஆடவர், தனியாய் வரும் பெண்டிர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. காதலர்களாய் அல்லது நண்பர்களாய் வரும் ஆண் - பெண்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.[சான்று தேவை]