நாள் | மே 27, 2014 |
---|---|
அமைவிடம் | கத்ரா சகதத்கஞ்ச், பதாவுன், உத்தரப் பிரதேசம், இந்தியா |
காரணம் | குழு பாலியல் வல்லுறவு |
பங்கேற்றோர் | சிற்றூர்வாசிகள் |
விளைவு | தூக்கிலிட்டு மரணம் |
இறப்புகள் | இரு ஒன்றுவிட்ட சகோதரிகள் |
சந்தேகநபர்கள் | ஏழுபேர் வரை |
குற்றம் சாட்டப்பட்டோர் | பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் ஊர்வேஷ் யாதவ் (உடன்பிறப்புகள்), சத்திரபால் யாதவ், சர்வேஷ் யாதவ் (காவலர்கள்)[1] |
2014 உத்தரப் பிரதேச குழு வன்புணர்வு உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதாவுன் மாவட்டத்தில் மே 27, 2014 அன்று இரு பதின்ம அகவைச் சிறுமிகள் குழுவால் வன்புணரப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. வீடுகளில் கழிவறை இல்லாத அந்தச் சிற்றூரில் மாலைநேரத்தில் சிற்றூரில் அதற்கென ஒதுக்கப்பட்டிருந்த வெளியிடத்திற்கு சென்ற இருவரும் பின்னர் திரும்பவில்லை. உள்ளூர் காவல்நிலையத்திற்கு புகாரளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [2]இரவு முழுவதும் சிறுமியரைத் தேடிய சிற்றூர்வாசிகள் அடுத்த நாள் காலையில் இருவரும் மரமொன்றிலிருந்து தொங்குவதைக் கண்டனர். [3][4]
14 மற்றும் 15 அகவை கொண்ட இரு தலித்[5] சிறுமிகளும் ஒன்றுவிட்ட சகோதரிகள் ஆவர். தங்கள் வீட்டிலிருந்து மே 27 அன்று மாலை கழிவறை இல்லாத காரணத்தால் வெளியே சென்ற இருவரும் காணாமல் போயினர். அவர்கள் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் குழுவாக வன்புணரப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது.[2]
தங்கள் மகள்களைக் காணவில்லை என்று இருவரின் பெற்றோரும் காவல்நிலையத்தில் புகாரளித்தும் நிலைய அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதியவில்லை. காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதநிலையில் உள்ளூர்வாசிகள் பலமணி நேரம் இருச் சிறுமியரையும் தேடினர்; மிகுந்த தேடலுக்குப் பிறகு இருவரும் மரமொன்றிலிருந்து தொங்குவதைக் கண்டனர்.[3][6][7][8][9] குற்றமிழைத்தவர்களும் காவல் அதிகாரிகளும் உயர்சாதி யாதவர்களானதால் தங்கள் புகாரை புறக்கணித்ததாக பலியானவர்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டினர்.[5]
மே 29 அன்று சிறுமியர் இருவரும் வன்புணரப்பட்டிருக்கின்றனர் என்பதும் பின்னர் தூக்கில் இடப்பட்டதால் மரணம் நேர்ந்தது என்றும் பிணக்கூறு ஆய்வு மூலம் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் மான்சிங் சௌகான் கூறினார். அவர்களை வன்புணர்ந்தவர்களை அடையாளம் காண டி. என். ஏ. துகள்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.[2]
சூன் 1 அன்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்கள் தாங்களிழைத்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்றும் கூறிய காவல்துறை மேலும் இருவரைத் தேடி வருவதாகக் கூறியது.[10]