உத்தவ கீதை

உத்தவகீதை பதினெண் புராணங்களில் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பதினோராவது ஸ்கந்தமாக அமைந்துள்ளது. இந்தப் பதினோராவது ஸ்கந்தத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்தரும், அமைச்சரும், சிற்றப்பா மகனுமாகிய உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசம்தான் உத்தவ கீதை என அறியக்படுகிறது. உத்தவ கீதை, 1367 சுலோகங்களுடன், முப்பத்தி ஒன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஏழாவது அத்தியாயம், சுலோகம் 19 முதல் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் தொடங்குகிறது. உத்தவ கீதை மூலம், ஸ்ரீகிருஷ்ணர் 125 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என அத்தியாயம் ஆறு, சுலோகம் 25 மூலம் தெரியவருகிறது.[1][2][3]

உத்தவ கீதையின் சாரம்

[தொகு]

1வது அத்தியாயம்: யதுகுலத்தினருக்கு முனிவர்களின் சாபம்

[தொகு]

யது குலத்தவர்களுக்கு முனிவர்கள் சாபம் இட்டதைப் பற்றி விளக்கப்படுகிறது. பூமியின் சுமையைக் குறைக்க வேண்டி பகவான் ஸ்ரீகிருஷ்ணர், விசுவாமித்திரர், கண்வர், துர்வாசர், பிருகு, ஆங்கிரசர், கசிபர், வாமதேவர், அத்ரி முதலிய முனிவர்களைக் கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற பிரபாச நகருக்கு அனுப்பி வைத்தார்.

பிரபாச நகரில் இருந்த யாதவகுல இளைஞர்கள் சிலர், ஸ்ரீகிருஷ்ணர் - ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பனை, கர்ப்பம் தரித்த பெண் வேடமிட்டு முனிவர்களிடம் அழைத்துச் சென்று, இந்தப் பெண்னுக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாகக் கேட்டனர்.

இளைஞர்களின் கபட நாடகத்தை அறிந்த முனிவர்கள், இவள் உங்கள் யாதவ குலத்தையே அழிக்கப்போகும் உலக்கையை பெற்றெடுக்கப் போகிறாள் என சாபம் இட்டனர். இதை அறிந்த யாதவ அரசன் உக்ரசேனர், அந்த உலக்கையைத் தூளாக்கி கடலில் வீசி எறிந்தார்.

சில நாட்களுக்குப் பின் உலக்கையின் இரும்புத் தூள்கள் கடற்கரையை அடைந்து நீண்ட மிக உறுதியான கோரைப் புற்களாக மாறின. கடலில் கரைத்த இரும்புத் துகள்களில் ஒன்றை மீன் உண்டது. அந்த மீன், ஒரு மீனவன் வலையில் சிக்கியது. மீன் வயிற்றில் இருந்த இரும்புத் துண்டை மீனவனிடமிருந்து ஒரு வேடுவன் வாங்கிக் கொண்டு, அதைத் தன் அம்பு நுனியில் பொருத்திக் கொண்டான்.

2வது அத்தியாயம்: நாரதர், மிதிலை மன்னர் மற்றும் ஒன்பது யோகிகளுக்கு இடையே நடந்த உரையாடல்

[தொகு]

நாரதருக்கும், மிதிலை மன்னர், நிமி மன்னர் மற்றும் ஒன்பது யோகிகளும் வசுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடம், எதை அறிந்தால் எல்லாவித பயங்களிலிருந்தும் மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடித்தாலும், அந்த விநாடியிலேயே மனிதன் புனிதமாகி விடுகிறான் என்று நாரதர் கூறுகிறார். பின்பு ஒன்பது யோகிகள் கூறும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.

  • கவி என்ற முதல் யோகி, அடியார்களைக் கைவிடாத பகவானுடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு பகவானிடம் ”பூரண சரணாகதி” செய்து விடுவதே பகவானை அடையும் ஒரே வழி என்று அறிவுரை செய்கிறார்.
  • ஹரி என்ற இரண்டாவது யோகி, எவர் அனைத்து சீவராசிகளிடத்தில் பகவானை காண்கிறாரோ, அவ்விதமே, பகவானிடம் அனைத்து சீவராசிகளையும் எவர் காண்கிறாரோ அவரே முதன்மையான பக்தன் ஆவர் என்று அறிவுரை செய்கிறார்.

3வது அத்தியாயம்: மாயையை கடப்பதற்கான வழி, பிரம்மம் மற்றும் கர்ம யோக விளக்கம்

[தொகு]
  • அந்தரிட்சர் என்ற மூன்றாவது யோகி, பகவானால் படைக்கப்பட்ட உலகப் பொருட்களில் நான், என்னுடைய, எனது என்று பற்றுக் கொள்பவர்கள், மாயை எனும் துயரக் கடலிருந்து விடுபடுவதில்லை என்று அறிவுரை செய்கிறார்.
  • பிரபு தத்தர் என்ற நான்காவது யோகி, மனத்தூய்மை, சகிப்புத்தன்மை, மௌனம், படித்த தர்ம சாத்திர நூல்களை மனதில் சிந்தித்தல்; நேர்மை; பிரம்மச்சரியம்; அகிம்சை; மற்றும் சுக-துக்கம், மான-அவமானம், குளிர்-வெப்பம் முதலிய இருமைகளை சமமாக அனுபவிக்க வேண்டும். அனைத்து சீவராசிகளை பகவானாகப் பார்ப்பது, நிலையான இருப்பிடத்தில் வசிக்காமை, எளிய ஆடைகள் அணிதல், கிடைத்த உணவை உண்டு திருப்தி அடைவது, சாத்திரங்களில் நம்பிக்கை வைத்தல், மனவடக்கம், புலனடக்கம், வாய்மை, பொறுமை, தியானம், தானம் மற்றும் தவம் முதலிய நற்பண்புகளின் பெருமையை விளக்குகிறார்.
  • பிப்பலாயனர்என்ற ஐந்தாவது யோகி, அண்ட கோளங்கள் மற்றும் அனைத்து சீவராசிகளின் படைப்பிற்கும், படைத்தவைகளை நிலை நிறுத்துவதற்கும், பின் நிலை நிறுத்திய படைப்புகளை பிரளய காலத்தில் தன்னில் ஒடுக்குவதற்கும் (படைத்தல், காத்தல், அழித்தல்) ஆகியவற்றுக்குக் காரணமான எவரோ; எவர் சீவராசிகளின், விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் உறக்க நிலைகளுக்குச் சாட்சியாக இருக்கிறாரோ; அதே போல் இந்த மூன்று நிலைகளுக்கு அப்பாலும் இருந்து கொண்டு எவரால் உடல்-புலன்கள்-உயிர்-மனம் இயக்கப்படுகிறதோ, எவருடைய இருப்பினால் (எவர் ஆத்ம வடிவாக, உடலுக்குள் இருந்து வருகிறாரோ அவர்) தத்தம் கடமைகளைச் செய்து வருகிறார்களோ, அந்தப் பரம்பொருள்தான் ’பரப்பிரம்மம்’ என்று அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை செய்கிறார்..
  • ஆவிர்ஹோத்ரர் என்ற ஆறாவது யோகி, அறநூல் நெறிப்படி ஆற்ற வேண்டிய செயல்கள் (கர்ம யோகம்; பக்தி யோகம்); செய்யக்கூடாத செயல்கள் (விகர்மம்), மற்றும் செய்யவேண்டிய செயல்களைச் செய்யாமல் இருப்பது (அகர்மம்) பற்றி விளக்குகிறார். பலனில் பற்றில்லாமலும், ஈசுவர அர்ப்பணமாக செய்யப்படும் செயல்களால் சீவ முக்தியை அடைந்து, பின் உடலை துறந்த பின் பிறப்பில்லா விதேக முக்தியைஅடையலாம் என்று கூறி முடிக்கிறார்.

4வது அத்தியாயம்: பகவானுடைய அவதாரங்களின் வருணனைகள்

[தொகு]

5வது அத்தியாயம்: பகவானை வழிபடுவதற்கான முறைகள்

[தொகு]
  • சமஸர் என்ற எட்டாவது யோகி பக்தி இல்லாத மனிதர்களின் நிலை மற்றும் பகவானை வழிபடும் முறைகளை விரிவாக எடுத்துக் கூறுகிறார்: காம்ய கர்ம (பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்) பலனில் நாட்டமுள்ளவர்கள் தர்ம-அர்த்த-காம-மோட்சம் (அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு) என்ற நான்கு இலட்சியங்களில், முதல் மூன்று கர்மங்களை மட்டுமே தர்மமாக எண்ணிக் கடைப்பிடித்து அதிலேயே சிக்கி, தம் ஆத்மாவைக் கொல்கிறார்கள். பகவானிடம் பக்தி கொள்ளாதவர்கள், பயங்கரமான இருள் சூழ்ந்த நரகத்தை அடைகிறார்கள்.
  • கரபாஜனர் என்ற ஒன்பதாவது யோகி கூறுகிறார். பகவான், ஹம்ஸர், சுபர்ணர், வைகுண்டர், தர்மர், யோகேசுவரர், ஈசுவரன், புருஷர், அவ்யக்தர், பரமாத்மா, விஷ்ணு, யக்ஞர், ஹரி, ப்ருச்னிகர்பர், சர்வதேவர், ஜெயந்தர், உருகாயர், வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், நர-நாராயணர், விசுவேசுவரர், விசுவரூபர், சர்வபூதாத்மா போன்ற பல நாமங்களால் அழைக்கப்படுகிறார். அடைக்கலம் அடையத்தக்கவரான பகவான் முகுந்தனை சரண் அடைந்தவர்கள் பஞ்ச மகாயக்ஞம் எனும் தேவ-ரிஷி-பித்ரு-பூத கடன்களிருந்தும், அதிதி பூஜை - பூத பலி முதலிய சடங்குகளிலிருந்தும் விடுதலை பெற்று விடுகிறார்கள். இவர் (பகவானைத் தவிர, வேறு எவருக்கும்) அடிமை அல்லர், கர்ம வாசனையிலிருந்தும், கர்மத்தளையிலிருந்தும் விடுதலை பெற்று விடுகின்றனர்.
  • மிதிலை மன்னரான நிமி, ஒன்பது யோகீசுவரர்களிடமிருந்து இவ்வாறு பாகவத தர்மங்களைக் (பக்தர்களின் ஒழுக்கம்) கேட்டு மகிழ்ச்சி அடைந்து அவர்களை கௌரவித்தார்.

6வது அத்தியாயம்: தேவர்கள் பகவானை வைகுண்டம் எழுந்தருள வேண்டுதல் - உத்தவருக்கு ஆத்ம உபதேசம் செய்ய ஆரம்பித்தல்

[தொகு]

கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்டதால், பரமேசுவரன், நான்முக பிரம்மனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும், ஸ்ரீகிருஷ்ணரை வைகுந்தத்திற்கு எழுந்தருள வேண்டிக்கொள்கிறார்கள். முனிவர்களின் சாபத்தால் இன்னும் ஏழு நாட்களில், யாதவ குலத்தினரின் அழிவையும், துவாரகை கடல் சீற்றத்தால் அழிவதைக் கண்டபின் வைகுண்டத்திற்கு எழுந்தருளுவேன் என்று கிருஷ்ணர் பதில் அளித்தார்.

யாதவகுல ஆண்கள் சோமநாதபுரம் கடற்கரையில் உள்ள பிரபாச நகருக்கு புறப்படுவதை அறிந்த உத்தவர் கிருஷ்ணரை தனியே பார்த்து வணங்கி, யது குலத்தவருக்கு முனிவர்களின் சாபத்தை நீக்கும் ஆற்றல் தங்களுக்கு இருந்தாலும், அவ்வாறு செய்யாமல், யது குலத்தினரை மாய்த்து விட்டு இவ்வுலகத்தை விட்டு வைகுணடத்திற்கு செல்வது உறுதியாகி விட்ட்து. ஆகவே என்னையும் தங்களுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று உத்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினார்.

ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரை தனியே அழைத்துச் சென்று ஆத்ம உபதேசம் செய்தார். பிரம்மாவின் வேண்டுகோளின்படி, (பூர்ணாவதாரம் எடுத்த) நான், என்னுடைய அம்சாவதாரமான பலராமனுடன் இங்கே எதற்காக அவதாரம் எடுத்தேனோ, அதன்படி தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்கள் குறையின்றி முடிக்கப்பட்டது. நான் இவ்வுலகை விட்டுச் சென்றபின் கலி புருஷனால் இப்பூமி வசப்படும். மனம், வாக்கு, கண்கள், செவி, முதலிய புலன்கள் மூலம் அனுபவிக்கப்படும் பொருள்கள் எல்லாம் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்.

தெளிவற்ற மனநிலை உடையவர்களுக்கு மன மயக்கம், குண-தோசம் (விருப்பு-வெறுப்பு) உண்டாகிறது. செய்யவேண்டிய செயலை செய்தல், செய்யக்கூடாத செயலை செய்தல், செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருந்த தவறு (கர்மம்-அகர்மம்-விகர்மம்) என்ற வரையறைகள் இவர்களுக்காக வகுக்கப்பட்டது.

ஆகவே புலன்களையும், மனதையும் வசப்படுத்தி, இவ்வுலகம் முழுவதையும் உன்னில் காண்பாய். தலைவனான என்னிடம் உன் ஆத்மாவைப் பார்.(நான் இவ்வுலகமாக விளங்குவதை உணர்ந்து கொள்). அனைத்து உடலிலும் நான் ஆத்மாவாக இருப்பது நானே என்று உணர்ந்து கொள். நன்மை-தீமை என்ற இருமைக்கு அப்பால் சென்று விடு. மேலும் குணம்-தோசம் (விருப்பு-வெறுப்பு) என்பதை கடந்து விடு. பரமார்த்த தத்துவத்தில் உறுதியாக இருப்பவன், பிறப்பு-இறப்பு என்ற சூழலில் மீண்டும் சிக்குவதில்லை.

மனிதனால் மட்டுமே, நான்கு வகையான பிரமாணங்களின் (கருவிகள்) மூலம் (சாத்திரம்), சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் மனிதனின் புத்தியில் உள்ளவை, ஆனால் அது ஆத்மாவின் குணங்கள் அல்ல. சத்வ குணத்தின் மூலமாக மற்ற இரண்டு குணங்களையும் நீக்கி விட்டால், அதர்மம் அழிந்து விடும். சாத்திரம், தண்ணீர், சந்ததி, நாடு, காலம், கர்மம், பிறப்பு, தியானம், மந்திரம், வினைப் பதிவு (சம்ஸ்காரம்), என்ற பத்தும் முக்குணங்களாக அமைவதற்கு காரணங்கள் ஆகும்.

சத்வகுண வளர்ச்சிக்காக மனிதன் சாத்வீகமானவற்றில் மனதை செலுத்துவதால், அறத்தின் பால் நாட்டம் உண்டாகி, ஆத்ம வடிவான ஆத்ம ஞானம் எனும் மெய்யறிவு ஏற்படும்.

மெய்யறிவாளர்கள் கூட சில நேரங்களில், ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களால் புத்தி தடுமாறுகிறார்கள். செயல்களின் விளைவு துயரமே என்று உணர்கிறார்கள். எனவே அவர்கள் பெருமுயற்சி செய்து மனதை திருப்பி, செயல்களில் பற்று கொள்வதில்லை. மனதை எல்லா விசயங்களிலிருந்தும் திருப்பி, பகவானிடத்தில் மட்டும் மனதை நிலை பெறச் செய்கிறார்கள்.

7வது அத்தியாயம்: அவதூதர், பூமி முதல் புறா வரை எட்டு ஆச்சாரியர்களிடமிருந்து ஞானம் அடைந்த ஞானம்

[தொகு]

சந்திர வம்சத்து மன்னன் நகுசனின்பேரனும், யயாதியின் மகனும் ஆன மன்னர் யது, ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூதரான தத்தாத்ரேயரை சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு எப்படி கிடைத்தது, எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவதூத சந்நியாசி தான், யார் யார் மூலம் அறிவு (ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார்.

  • பூமியிடமிருந்து, பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என்ற குணத்தையும்;
  • வாயுவிடமிருந்து, உயிர் நிலைப்பதற்கு போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற அறிவும்;
  • ஆகாயத்திடமிருந்து, ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ஞானத்தையும்; நீரிடமிருந்து தூய்மையும்; அக்கினியிடமிருந்து குற்றமுடையது என்று எததையும் ஒதுக்கித் தள்ளாத மனநிலையும்;
  • சந்திரனிடமிருந்து சட உடல் தோன்றி மறைந்தாலும், ஆத்மா மறைவது இல்லை என்ற ஞானத்தையும்;
  • சூரியனிடமிருந்து, ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதிலும், அதை வழங்குவதிலும் ஒட்டுதல் இல்லாமல் யோகி இருக்க வேண்டும் என்ற ஞானத்தையும்;
  • புறாவிடமிருந்து, முக்தியை அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்தும், புறாவைப் போல் உலகப்பற்றில் (பந்தபாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியை அடைய முடியாது என்ற ஞானத்தையும் அடைந்ததாக அவதூதர், யது மன்னரிடம் கூறினார்.

8வது அத்தியாயம்: அவதூதர், மலைப்பாம்பு முதல் பிங்களா என்ற வேசி வரையிலான ஒன்பது கதை

[தொகு]
  • மலைபாம்பு மூலம், யோகி தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற ஞானமும்;
  • கடலிடமிருந்து, ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், நிறைவேறாதபோது தளர்ந்து போய் கலக்கம் அடையக்கூடாது என்ற ஞானமும்;
  • விட்டில்பூச்சி மூலம், மாயையால் படைக்கப்பட்ட பொருட்களில் மயங்கி தன் அறிவை இழந்து, விளக்கில் வீழ்ந்து விட்டில் பூச்சி அழிந்து விடுகிறது. எனவே மாயையில் மயக்கம் கொள்ளக்கூடாது என்ற ஞானமும்;
  • தேனீ இடமிருந்து, வயிற்றுத் தேவைக்கு மேல் பிச்சை எடுக்கக் கூடாது என்றும் மற்றும் சாத்திர நூல்களிலிருந்து சாரமான தத்துவங்களை மட்டும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;
  • ஆண் யாணை மூலம், ஞானிகள் பெண்களிடம் மயங்கக் கூடாது என்ற ஞானத்தையும்;
  • தேன் எடுப்பவன் மூலம், இல்லறத்தானின் செல்வத்துக்கு முதன்மை உரிமையாளர் துறவிதான் என்ற ஞானத்தையும்;
  • மான் மூலம், காட்டில் வாழம் துறவி ஒருபோதும் உலக இன்பங்கள் தொடர்பான பாடல்கள் கேட்கக் கூடாது என்ற ஞானத்தையும்;
  • மீன் மூலம், நாக்கை (உணவின் மீது ஆசை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;
  • பிங்களா என்ற வேசி மூலம், பகவான் எனக்கு அருளிய நல்லறிவை ஏற்றுக்கொண்டு, உலக காமபோகங்களைத் துறந்து, பகவானை சரணடைய வேண்டும் என்ற ஞானத்தையும் அடைந்தாக கூறினார் அவதூதர்.

9வது அத்தியாயம்: அவதூதர் குரர பறவை முதல் வண்டு வரையிலான ஏழு குருமார்களிடமிருந்து ஞானம் அடைந்த கதை

[தொகு]
  • குரர பறவையிடமிருந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது என்ற ஞானம்.
  • பச்சிளம் குழந்தையிடமிருந்து பெற்ற ஞானம்: மான-அவமானம் என்ற வேறுபாடு காணக்கூடாது, பச்சிளம் குழந்தையைப்போல், தன்னிலேயே ஆனந்தப்பட வேண்டும் என்ற ஞானம். உலகத்தில் கவலைகள் இல்லாமல் எப்போதும் பரமானந்தத்தில் மூழ்கி இருப்பவர் இருவர். ஒருவர், சூது வாது இல்லாத, வேற்றுமை உணர்வற்ற, காரணமின்றி மகிழ்ச்சியில் இருக்கின்ற பச்சிளம் குழந்தை. மற்றவர், குணங்களையெல்லாம் கடந்த ஞானி.
  • கன்னிப்பெண்னிடமிருந்து பெற்ற ஞானம்: பல பேர்களுடன் வசித்தால் சண்டை-சச்சரவு ஏற்படும், இரண்டு பெண்கள் இருந்தால் வீண் பேச்சு வளரும். ஆகவே, ஞானி பெண்னின் கைக் கங்கணத்தைப் போல தனியாக இருக்க வேண்டும். யோகியானவன், ஆசனத்தையும் மூச்சுக்காற்றையும் வென்று, வைராக்கியத்தை இடைவிடாத பயிற்சி செய்து, சலனமில்லாத மனதை ஒரே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும்.
  • வில்லாளியிடம் கற்ற ஞானம்: வில்லாளி அம்பு செலுத்தும் போது தன் பார்வை சிதறாதவாறு இலக்கை குறி பார்த்து அம்பு எய்வது போன்று ஞானியும் தன் மனதை பரப்பிரமம்த்திடம் வைத்திருக்க வேண்டும். முனிவன் தனித்து இருக்க வேண்டும். கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமான இருப்பிடம் கூடாது. எதிலும் கவனமாக இருக்க வேண்டும். மலைக்குகைக்குள் வசிக்க வேண்டும். தனது ஆசார அனுஷ்டானங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருக்க் வேண்டும். குறைந்த அளவே பேச வேண்டும்.
  • பாம்பிடம் ஞானி கற்ற பாடம்: உடலோ சிறிது காலமே இருப்பது; அது தங்குவதற்கு திட்டமிட்டு பெரிய வீடு கட்டுவது, துக்கத்தின் தொடக்கம். பிற உயிர்களால் கட்டிய வீட்டில் (கரையான் புற்று அல்லது எலி வலை) பாம்பு குடிகொண்டு சுகமாக வாழ்கிறது. அது போன்று ஞானியும் தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழாமல் மரத்தடி, குகைகள் போன்ற இடங்களில் தங்க வேண்டும்.
  • சிலந்திப்பூச்சியிடமிருந்து கற்ற ஞானம்: சிலந்திப்பூச்சி, தன் வாய் வழியாக நூலைக் கொண்டு வந்து வலையைப் பின்னுகிறது. பின்பு தானே அதை தன் வாய்க்குள் இழத்துக் கொள்கிறது. பகவானும் தான் படைத்த உலகங்களையும், சீவராசிகளையும் ஊழிக் காலத்தில் தன்னில் இழத்துக் கொள்கிறான் என்ற ஞானம்.
  • குளவி (வண்டு) இடமிருந்து கற்ற ஞானம்: கூட்டில் புழு நிலையில் இருக்கும் (வண்டு) (இங்கே வந்து மாட்டிக்கொண்டோமே என்று பயந்து பயந்து) அதையே நினைத்துக் கொண்டிருந்தது. அதன் விளைவாக தன் உடலை விடாமலே, தானும் வண்டாக மாறிவிடுகிறது. இந்த குளவிப் போன்றே பகவானையே நினைத்துக் கொண்டு இருக்கும் பக்தன், பகவத் சொரூபமாக- சீவன் முக்தனாக ஆகிவிடுகிறான்.
  • பின் தன்னுடைய உடல் மூலம் கற்றுக் கொண்ட ஞானத்தை கூறுகிறார்: இந்த உடலுக்கு பிறப்பு-இறப்பு தன்மை உடையது. மிகவும் துன்பம் தரக்கூடியது. விவேகம்-வைராக்கியத்தால் “இந்த உடல் பிறர்க்கு உரியது”(இந்த உடல் ‘நான்’ அல்ல) என்ற உறுதியான அறிவு உண்டாகிறது. அதனால் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன் என்றார் அவதூதர்.

10வது அத்தியாயம்: பூலோக, சொர்க்கலோக இன்பத்தின் நிலையாமையை நிரூபித்தல்

[தொகு]

பரம்பொருளை அறிய வேண்டும் என்ற விருப்பமுடையவன் பலன்களை அளிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்த்து வைக்காதிருத்தல் என்ற நியமங்கள் கைக்கொள்ளவேண்டும். குருவை அணுகி சேவை செய்ய வேண்டும். குருவிற்கு பணிவிடை செய்பவன் அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு, மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் இல்லாதவனாகவும், அன்பு, வினைத்திட்பம், அனைவரின் நலனில் சம நோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும்.

ஆத்மா சுயம் ஜோதி வடிவானது; அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது; சட-சூக்கும உடலிருந்து வேறானது; இந்த உடலை விளக்கமுறச் செய்யும் ஆத்மா, இந்த உடலிருந்து வேறானது. இந்த மனித உடல், மாயையின் முக்குணங்களின் சேர்க்கையால் ஆனது. அதனால் தான், மனிதன் உலகவாழ்க்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறான். அதாவது, தோற்றமும் அழிவற்ற ஆத்மாவின் மேல் பிறப்பு-இறப்பு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆத்மக்ஞானம் ஏற்பட்டுவிட்டால், இந்த மயக்கம் வேருடன் கிள்ளி ஏறியப்பட்டுவிடும்.

எனவே ஆத்மவிற்கு எதிரான அனாத்மாவான பொருட்கள் நிலையானது என்ற நினைப்பை விட்டொழித்து, மிக உயர்ந்ததும், தனிப்பெரும் பொருளானதும், தனக்குள் விளங்குவதுமான ஆத்மாவைக் கண்டறிய வேண்டும்.

புண்ணிய இருப்பு உள்ள வரையில் சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கிறான். புண்ணியம் தீர்ந்ததும், அவன் விரும்பா விட்டாலும் கூட, காலம் அவனைக் கீழே தள்ளி விடுகிறது.

அதர்மத்தில் நாட்டமுடையவன், தீயவர்களின் சேர்க்கையுடயவன், புலன்களை வசப்படுத்தாதவன், விருப்பப்படி வாழ்பவன், கஞ்சன், பேராசைக்காரன், பெண்ணாசை பிடித்தவன், பூதப் பிரேத கணங்களை திருப்தி செய்ய முறை தவறி வேள்வி செய்து, விலங்குகளைப் பலி கொடுப்பவன் – இப்படிப்பட்ட சீவன், தீய சக்திகளின் பிடியில் அகப்பட்டு, கோரமான இருள் சூழ்ந்த நரகங்களை அடைகிறான்.

பிறகு, அவர்கள் துன்பங்களுக்குக் காரணமான உடலைக் கொண்டு, செயல்கள் செய்து, அழிந்து போகும் தன்மையை உடைய உடல்களையே மீண்டும் மீண்டும் அடைகிறார்கள். முக்குணங்கள் கர்மாக்களைச் செய்யத் தூண்டுகிறது; கர்மபலன், செயல் செய்பவனின் விருப்பத்திற்கேற்றபடி அமைகிறது. இந்த சீவன் முக்குணங்களுடன் கூடியிருப்பதால், கர்மபலன்களை அனுபவிக்கிறது. குணங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே ஒரே பரமாத்மாவான என்னை, காலம், ஆத்மா, உலகம், இயற்கை, தர்மம், என்று பலவிதமாகக் கூறுகிறார்கள்.

இவைகளில் எல்லாம் பகவானே இருக்கிறான் எனபதால், இவைகளில் பகவானையே பார்க்க வேண்டுமேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல.

11வது அத்தியாயம்: கட்டுப்பட்டவன், விடுதலை பெற்றவன், பக்தன் ஆகியோரின் இலக்கணங்கள்

[தொகு]

கட்டுப்படுதல், விடுபடுதல் என்ற தன்மை ஆத்மாவிடம் இல்லை. ஆத்ம ஞானம் மற்றும் அக்ஞானம் இரண்டுமே அனாதி காலத்தில் பிரம்மத்தின் மாயா சக்தியால் தோற்றுவிக்கப் பட்டவை. உடல் எடுத்தவர் முக்தி (விடுபடுதல்) அடைவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் (கட்டுப்படுவதற்கும்) முறையே ஞானத்தால் விதேக முக்தியும், அக்ஞானத்தால் பந்தமும் (கட்டுப்படல்) ஏற்படுகிறது.

ஜீவாத்மா, பகவானின் அம்சமாதலால் என்னைப் போன்றவனே. ஒரே உடலில் உறைகின்ற சீவாத்மா, பரமாத்மா வேறு பட்ட துன்பம், இன்பம் என்ற வேறுபட்ட குணங்கள் உடையவர்கள். (பரமாத்மா, நித்யானந்த வடிவினர்; ஆள்பவர். சீவாத்மா சோக – மோகங்களில் சிக்கி துன்பமடைகிறவர், ஈசுவர ஆணைக்கு அடங்கிப் போகிறவர். ஞானமடைந்தவன் உலக விவகாரங்கள் எல்லாம் பொய் என்பதை உணர்கிறான். தெள்ளறிவு இல்லாதவன் (ஆத்மாவுக்கு உடல் – உருவம் இல்லை என்ற உண்மையை அறியாதவனாய்) கனவுகளில் தோன்றும் சுக – துக்கங்களை, உண்மையில் தானே அனுபவிப்பதாக நினைக்கிறான்.

பிரம்மத்தில் நிலைபெற்ற ஆத்ம ஞானி, ஆத்மா செயல்கள் அற்றது என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவன். ஆதலால் ’நான் எதுவும் செய்யவில்லை’ என்று நினைக்கிறான். இந்த உடல் பிரார்ரப்த கர்மவினைக்கேற்ப கிடைக்கப்பெற்றது. குணங்களின் தூண்டுதலினால் செயல்கள் நடக்கிறது. ஆனால் அறிவு மயங்கியவன், `நானே எல்லாச் செயல்களையும் செய்கிறேன் என்று அகங்காரம் கொள்கிறான். அதனால் வாழ்க்கை எனும் பெருங்கடலில் சிக்கி உழல்கிறான்.

ஞானி, செயல்கள் அனைத்தும் குண விகாரங்களின் வெளிப்பாடுகள் என்பதை உணர்ந்து கொண்டதால், அவன் இவ்வுலக விதிகளின்படி நடந்தாலும் அவைகளுடன் ஒட்டிக்கொள்வதில்லை. ஆகாயம், சூரியன், காற்றைப் போல. (இம்மூன்றும் நடைபெறும் செயல்களுக்கு சாட்சி மாத்திரமே அன்றி, கர்த்தா (செயல் செய்பவன்) அல்ல என்பதைப் போல

எவனுடைய பிராணன், புலன்கள், மனம், புத்தி ஆகியவை சங்கல்பத்திலிருந்து விடுபட்டும், உலகாயத கருமங்களிலிருந்து தடைப்பட்டும் இருக்கின்றதோ, அந்த பிராணன் ஓர் உடலைத் தாங்கியிருந்தாலும், குணங்களிலிருந்து விடுபட்ட ஆத்மா ஆகிறார். குணங்களை கடந்தவன் குணாதீதன் ஆகிறார். ஞானிகள், பிறர் தரும் துன்பங்களையும், கௌரவங்களையும் பொருட்படுத்துவதில்லை.

வேதங்களை நன்கு கற்றவனுக்கு, பிரம்ம ஞானம் ஏற்படவில்லை எனில் அந்த வேதப்படிப்பு பயனற்றதே ஆகும். பகவத் விசயமாக இல்லாமல் வெறும் உலகாயதப் பேச்சுகளால் துன்பத்தின் மேல் துன்பம் அடைகிறார்கள்.

மனதை உறுதியாக பிரம்மத்தில் நிலைநிறுத்த இயலவில்லை எனில், எல்லாச் செயல்களையும், பலனை எதிர்பார்க்காமல் இறைவன் பெயரால் செய்து வர வேண்டும். இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு அறம், பொருள், இன்பத்திற்கான செயல்களைச் செய்து வருபவர், தொடக்கமில்லாத பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரிடம் அசைக்க முடியாத பக்தியைப் பெறுகிறார்.

சான்றோர்களின் கூட்டுறவால் இறைவனிடம் பக்தி உண்டாகிறது. சான்றோர்களால் காட்டப்பட்ட வழியில் சென்று, விரைவில் உன்னத நிலையை அடைகிறார்.

உத்தவர், சாதுக்களின் இலக்கணம் என்ன என்று கேட்டதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்க்கண்டவாறு விடையளிக்கிறார். சாது எனும் ஞானி, அனைத்து சீவராசிகளிடம் தயை (கருணை) உடையவன்; நன்றி மறவாதவன்; உடல் துன்பங்களைப் பொறுத்துக் கொள்பவன்; மாசு படாத மனம் உடையவன்: அனைவரிடமும் சமமாக இருப்பவன்; எல்லோருக்கும் உதவி செய்பவன்; வெறுப்பு - விருப்பங்கள் அற்றவன்; தூய்மை உடையவன்; நிலையான மதி கொண்டவன்; அளவாக உண்பவன்; புலன்களை கட்டுப்படுத்தியவன்; அமைதியுடன் இருப்பவன்; மனத் தடுமாற்றம் அடையாதவன்; கம்பீரமும், தைரியமும் உடையவன்; காமம், குரோதம், லோபம், மோகம், மதம், ஆச்சரியங்களை பொருட்படுத்தாதவன். பிறரை வாழ்த்துபவன்; திறமை, நட்பு, கருணை, தெள்ளிய ஞானம் உடையவன்.

எல்லாவிதமான தருமங்களை முற்றிலும் துறந்து, பகவானையே வழிபடுகிற பக்தன் மிகவும் உத்தமமானவன். என்னிடம் முழுமனதுடன், உறுதியாகப் பக்தி செலுத்துபவர்கள் மிக உயர்ந்த பக்தர்கள்.

கர்வம் கொள்ளலாகாது; பிறறை ஏமாற்றக்கூடாது; செய்த நற்செயல்களைப் பறைசாற்றிக் கொள்ளல் ஆகாது. சாதுக்களுக்கு பணிவிடை செய்வதால், பகவானின் நினைவு ஏற்படும். உத்தவரே, பக்தி யோகம், சத்சங்கம் ஆகிய வழிகளைத் தவிர, சம்சாரக்கடலைக் கடப்பதற்கான வேறு வழிகள் இல்லை என்பது என் முடிவான கருத்து.

12வது அத்தியாயம்: சத்சங்கத்தின் (சான்றோர்களின் கூட்டுறவு) பெருமை மற்றும் கர்மத் தியாகங்களின் விதிமுறைகள்

[தொகு]

யோகம், சாங்கியம், தர்மம், சுவாத்யாயம், தவம், தியாகம், ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல், தட்சிணை, வேள்விகள், விரதங்கள், வேத மந்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புலனடக்கம் – மனவடக்கம் முதலியவைகள், சத்சங்கத்தைப் போல என்னை வசப்படுத்த முடியாதவைகள். ஏன் எனில் சத்சங்கத்தால் எல்லாவிதப் பற்றுகளும் மனிதனிடமிருந்து நீங்கி விடுகின்றன.

அசுர – இராக்கதர்கள், கந்தர்வஅப்சரசுகள்,நாகர்கள், சித்தர்கள், கிம்புருசர்கள், கிண்ணரர்கள், வித்தியாதரர்கள் மற்றும் மனிதர்களில் இராட்சத குணம்தாமச குணம் நிரம்பியவர்களும், பெண்டிரும் சத்சங்கத்தினால் பகவானை அடைந்திருக்கிறார்கள்.

இவர்களில் பலர் வேத, வேதாந்த சாத்திரங்களைப் படித்ததில்லை, மகான்களுக்குப் பணிவிடை செய்ததில்லை மற்றும் எந்த விரதமும், தவமும் செய்ததில்லை. சத்சங்கம் என்ற சான்றோர் கூட்டுறவு என்ற ஒரு சாதனையினால் மட்டுமே பக்வானை அடைந்துள்ளனர்.

மிகவும் முயற்சி செய்தாலும், யோகம்-சாங்கியம்-தானம்-விரதம்-தவம்-வேள்வி-வேதாத்யாயனம்-சுவாத்யாயம்-துறவு முதலிய சாதனைகளால் அடையப்பட முடியாது போனாலும், பகவானைச் சான்றோர்களின் சத்சங்கத்தால் எளிதல் அடைந்துவிட முடியும்.

பரமாத்மாதான், படைக்கப்பட்ட அண்டம் முழுவதுமாக விளங்குகிறார். சீவராசிகளின் மூலாதாரத்தில் நாதப்பிரம்மமாக, பரா என்ற பெயரில் நுழைகிறார். மனோமய மணிபூரக சக்கரத்தில் பஸ்யந்தி என்ற பெயரில் தோன்றுகிறார். கழுத்துப் பகுதியில் உள்ள விசுத்தி என்ற சக்கரத்தில் மத்யமா என்ற பெயருடன் விளங்குகிறார். பின்னர் வாய் வழியாக வெளிப்படும் போது, மாத்ரை, சுவரம், வர்ணம், முதலிய தூல வடிவங்களை ஏற்று வைகரீ என்ற பெயரைப் பெறுகிறார். இவ்விதம் பரமாத்மா வாய் வழியாக சப்த பிரம்மமாக வெளிப்படுகிறார்.

உலக வாழ்க்கை எனும் மரத்துக்கு பாவம் – புண்ணியம் என இரு விதைகள்; மனப்பதிவுகள் – வாசனைகள் எனும் ஆயிரக்கணக்கான வேர்கள்; முக்குணங்களான சத்வம் – இராஜசம் – தாமசம் எனும் மூன்று தண்டுகள்; பஞ்சபூதங்கள் எனும் ஐந்து பெருங்கிளைகள், ஒலி, ஒளி, சுவை, தொடுவுணர்வு, நாற்றம் எனும் ஐவகை சாறுகள்; பத்து புலன்களுடன் மனம் என்பதும் சேர்த்து பதினொரு சிறு கிளைகள்; சீவன் – ஈசுவரன் என்ற இரு பறவைகளின் கூடுகள்; வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று பட்டைகள்; சுகம் – துக்கம் என்ற இரண்டு பழங்கள ஆகிய புலன்களின் கூட்டமான இந்த உடலுக்கு இன்பத்தை அளிக்கும் பொருள்களில் ஈடுபடும் பாமரர்கள், துக்கம் எனும் பழத்தை புசிக்கிறார்கள். பற்றில்லாத வாழ்க்கை நடத்துபவர்கள் சுகம் எனும் பழத்தை புசிக்கிறார்கள். ஆனால், பரமஹம்சர்களான சிலர் மட்டுமே, பற்பல வடிவங்களாகத் தோண்றும் பரமாத்மா ஒன்றுதான் என்று அறிகிறார்கள். இவ்வுலகம் நிலையற்றது - மாயை என்ற தத்துவத்தை அறிந்தவர்களே, வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ஆவர்.

உத்தவரே! இவ்விதம் குருவிடம் உபதேசம் பெற்று, மெய்ஞானம் என்ற கத்தியை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஓர் சீவன் என்ற எண்ணத்தை தைரியமாக வெட்டி எறிந்து விட வேண்டும். பிரம்மத்தை அறிந்து கொண்டவுடன், ஞான வடிவான கத்தியை எறிந்து விட வேண்டும். பின்னர் எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து விடலாம்.

13வது அத்தியாயம்: அன்னப்பறவை வடிவத்தில் சனகர் முதலான முனிவர்களுக்கு உபதேசித்தல்

[தொகு]

ஹிரண்யகர்பரான நான்முக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகாதி முனிவர்களுக்கும் மற்றும் சனகருக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து, ஸ்ரீகிருஷ்ணர், (அன்னப் பறவை) வடிவத்தில் ஆத்ம உபதேசம் செய்தார். இதையே ஹம்ச கீதை என்பர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் பின்வருமாறு:

  • அனைத்து சீவராசிகளின் உடலில், பஞ்சபூதங்கள் ஒன்றுக்கொன்று சமமானவை. எனவே “நாங்கள் யார்” என்ற கேள்வி வெற்றுச் சொற்களே.
  • மனம், சொல், பார்வை மற்றும் பிற பொறிகளால் எவை பார்க்கப்படுகின்றனவோ, சிந்திக்கப்படுகின்றனவோ, சொல்லப்படுகின்றனவோ அவைகள் எல்லாம் நானே தான்! என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
  • குணமயம், சித்தமயம் சீவனுக்குரியது. ஐம்புலன்கள் வழியாக பொருட்களை நுகர்வதால், மனம் அதில் ஆழமாக ஈடுபடுகிறது. சித்தத்தின் சங்கல்ப - விகல்பத்தால் பொருட்கள் தோன்றுகிறது. எனவே சீவன், பரமாத்மா வடிவானதால், மனம் அலைந்து திரிவதையும், பொருட்களின் மீதான பற்றையும் துறந்து விட வேண்டும்.
  • விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் உறக்க நிலை என்ற மூன்றும் புத்தியின் செயல்களே. சீவன் இந்த மூன்று நிலைகளுக்கு சாட்சி சைதன்யமாக மட்டும் உள்ளது.
  • சங்கல்ப-விகல்பங்களால் மனம் செயல்களை செய்து, ஆத்மாவை, சாத்வீகம்-ராஜசம்-தாமசம் என்ற முக்குணங்களில் சிக்க வைக்கிறது. எனவே நான்காம் நிலையான ”துரியம்” என்ற பிரம்ம நிலையில் உறுதியாக நின்று பொருட்பற்று - மனம் என்ற இரண்டையும் நீக்கி விட வேண்டும்.
  • ஆத்மா வைத் தவிர வேறு எதுவும் இல்லை. விழிப்புநிலையில் ஆன்மா, பிரபஞ்சத்தோடு(உலகோடு) கலந்து நிற்கும், கனவு நிலையில் ஆன்மா தான் அனுபவித்ததை கழுத்துக்கு மேலே ஒளிமயமாகக் காணும், ஆழ்ந்த உறக்க நிலையில் (சுசுப்தி) அகந்தையை விட்டு, தன் வசமற்று இருக்கும், ஆன்மா மூலப் பிரகிருதியுடன் பொருந்தி இருக்கும் நிலையே துரியம் , சீவனும், சிவனும் இரண்டறக் கலந்து சிவம் மட்டும் விளங்கி நிற்பது துரியாதீதம் இவ்விதம் ஐந்து நிலைகளிலும் சாட்சியாக இருக்கும் ஜீவாத்மா ஒன்றே தான்.
  • மனதின் விழிப்புநிலை முதலிய ஐந்து அவஸ்தைகளும் (பஞ்ச கோசம்), சாத்வீகம் முதலிய முக்குணங்கள் மூலமாக என்னுடைய மாயையால் சீவனிடம் கற்பிக்கப்படுகிறது. என்பதை உணர்ந்து, அனுமானம், சான்றோர்களின் கூற்று, சாத்திரங்கள் மற்றும் கூர்மையான கத்தி போன்ற ஞானத்தாலும் அனைத்து துயரங்களுக்கும் ஆதாரமான அகங்காரத்தை வெட்டித் தள்ளிவிட்டு, இதயத்தில் விளங்கும் பரமாத்மாவை வழிபட வேண்டும்.
  • இவ்வுலகம் என் மனதால் தோற்றுவிக்கப்பட்டது; இது நிலையானது போல் காணப்பட்டாலும் இல்லாததற்கு ஒப்பானது. இதற்கு மித்யா என்பர். இவ்வுலகம் சுழலும் நெருப்பு வளையம் போல் சஞ்சலமானது. அறிபவன், அறியப்படும் பொருள் (திருக்-திருஷ்யம்) என்ற போதமில்லாத ஞான வடிவான ஆத்மாதான் பல்வேறு பொருட்களாக தோற்றமளிக்கிறது. இந்த மனித உடல் மூன்று வகையான குணங்களின் செயல், கனவுபோல், மாயையின் லீலை, அறியாமையால் கற்பிக்கப்பட்ட்து.
  • எனவே ஆசைகளிலிருந்து விடுபட்டு புலன்களை அடக்கி, மெளனமாக, ஆத்மானந்த சுகத்தில் மூழ்க வேண்டும். சித்தர்கள் எந்த உடலைக் கொண்டு ஆத்மாவை அறிந்தார்களோ, அந்த உடல், பிராரப்த கர்மவினைப்படி, இந்த உடலைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
  • ஆத்மாவில் நிலைபெற்ற ஞானிகள், சமாதி நிலை வரையில் யோகத்தில் முன்னேறியுள்ளவர்கள், உலகத்தில் இருக்கும் தம் உடலில் ஆசை வைக்க மாட்டார்கள். கனவில் காணப்படும் பொருட்களைப் போல, இதுவும் பொய்யானது என்ற உண்மையை அவர்கள் உண்ர்ந்து விட்டார்கள்.
  • ஆத்மா-அனாத்மா விவேகமான சாங்கிய யோகத்திற்கும், அட்டாங்க யோகத்திற்கும் சத்தியம், ரிதம் (தர்ம சிந்தனை), பிரபாவம், செழுமை, புகழ், புலனடக்கம் மற்றும் மனவடக்கம் இவைகளுக்கு பரப்பிரம்ம்மாகிய நான் தான் காரணம்.
  • இவ்வாறாக பகவான், பிரம்மாவின் மனதில் தோன்றிய சனகர் மற்றும் சனகாதி முனிவர்களின் ஆத்மா தொடர்பான ஐயங்களை பகவான் கிருஷ்ணர் நீக்கினார்.

14வது அத்தியாயம்: பக்தி யோகத்தின் சிறப்பு மற்றும் தியான விதிமுறைகள்

[தொகு]

பக்தி யோக மேம்பாட்டிற்கு எது சிறந்த முறை எனும் உத்தவரின் கேள்விக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருள்கிறார். முதலில் பிரம்மா வேதத்தை முதலில் தன் மகன் சுவாயம்பு மநுவுக்கு கூறினார். மனு மூலம் ஏழு ரிஷிகள் அதனை அறிந்தனர். அந்த ரிஷி குமாரர்களான தேவர்கள், தானவர்கள், குஹ்யர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கிந்தேவர்கள் (உடல் தளர்ச்சி, வியர்வை, இல்லாத்தால்,தேவர்களா இவர்கள் எனும் ஐயுறத்தக்க நிலையில் உள்ள மனிதர்கள்), கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள், கிம்புருடர்கள் ஆகிய சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் குணாங்களால் உண்டானவர்கள் வேதத்தைப் பிரம்ம ரிஷிகளிடமிருந்து அறிந்து கொண்டார்கள்.

சான்றோரே! என்னிடத்தில் மனதைச் செலுத்தி, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் ஆத்மாவான என்னிடமே மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது.

எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும், சமபுத்தியும் வாய்யக்கப் பெற்ற்வன்; என்னிடத்திலேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனுக்கு எல்லாம் சுகமாகவே இருக்கும்.

என்னிடத்தில் மனதை செலுத்தியிருப்பவன், பிரம்ம பதவியோ, சுவர்க்கத்தின் இந்திர பதவியோ, பூமண்டல பதவியோ, அல்லது பாதாளம் உள்ளிட்ட கீழ் லோகங்களையும் கூட விரும்பாது, அவன் என்னை சரண் அடைந்து விட்டதால் என்னைத் தவிர வேறு எதனையும் விரும்ப மாட்டான்.

உத்தவரே, யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், தவம், தியாகம், ஆகியவைகள், என்னிடத்தில் பக்தி செலுத்துவதால் கிடைக்கும் சுகத்தை விட ஈடானது அல்ல.

நம்பிக்கையுடன் கூடிய பக்தியால் மட்டும் என்னை அடைய முடியும். நான் சான்றோர்களுக்குப் பிரியமானவன்; அவர்களின் ஆத்மாவாக இருப்பவன்; பிறப்பினால் சண்டாளனாக இருப்பினும் என்னிடத்தில் செலுத்தப்படும் உறுதியான பக்தியினால் புனிதமடைகிறான்.

சத்தியம், தயை, தவம், நற்கல்வி இவைகள் உடையவனாக இருப்பினும், என்னிடம் பக்தியற்றவன் மேற்கூறியவைகள் அவனை பரிசுத்தப்படுத்துவது இல்லை.

என்னில் நிறைவான பக்தி சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. மனம் கசிந்து உருகுகிறது. சில நேரங்களில் அழுகிறான், சிரிக்கிறான், வெட்கத்தை விட்டு உரக்க பாடுகிறான். ஆடுகிற என் பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான்.

என்னிடம் பக்தி செலுத்துதல் என்ற பக்தியோகத்தால் கர்மவாசனையிலிருந்து நீங்கி, தன் இயல்பு வடிவான என்னை (பரமாத்மா) அடைகிறான்.

பொய்யான பொருள்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதை என்னிடத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஆத்மசாதனை செய்கிறவன் பெண்ணாசை துறக்க வேண்டும்.

நல்ல சமமான ஆசனத்தில் அமர்ந்து, உடலை நேராக வைத்துக் கொண்டு, முதலில் பிராணாயாமம் செய்ய வேண்டும். இதயத்தில் தாமரைத் தண்டின் நூல் போல் நுட்பமான தொடர்ந்து வருவதுமான ஓங்காரத்தை சிந்தித்து, பிராணன் மூலமாக அதை மேலே ஏற்றி, அதில் பெரிய மணியின் ஒலி போன்ற நாதத்தை நிலை நிறுத்த வேண்டும். அந்த நாதத்தின் ஒலித் தொடர் அறுந்து போகாமல் இருக்க வேண்டும்.

இவ்விதம், நாள்தோறும் மூன்று முறை, ஓங்காரத்துடன் கூடிய பிராணாயாமத்தை பத்து முறை பயிற்சி செய்யவேண்டும்.

15வது அத்தியாயம்: பல்வகையான ’ஸித்தி’ களின் பெயர்களும், பலன்களும்

[தொகு]

உத்தவர் கேட்டதற்கு இணங்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யோக சித்திகளின் வகைப்பாடுகளையும் அதன் பலன்களையும் விளக்குகிறார்.

யோக சித்திகள் 20 வகைப்படும் என்று தாரணம் (மனதை நிலை நிறுத்துதல்) யோகத்தில், முழுமையாக நிலைபெற்ற யோகிகள் சொல்கின்றனர். இதில் பகவானிடத்தில் இயற்கையாக உள்ள சித்திகளை அஷ்ட மாசித்திகள் என்பர். மீதமுள்ள சித்திகளை, மனவடக்கம், புலனடக்கம், பொறுமை, அகிம்சை முதலிய குணங்களால் அடையத் தக்கது. சித்திகளை எக்காரணம் கொண்டும் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது.

  • பஞ்சபூதங்களின் வடிவத்தை ”தன்மாத்திரை” என்பர். இதையே சூக்கும வடிவாகக் கொண்டு பிரம்மத்தில், மனதை நிலை நிறுத்தி தியானிக்கும் யோகிக்கு ‘அணிமா’ என்ற சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை அணுவைபோல் மிகமிகச் சிறிய வடிவத்தை எடுக்கலாம்.
  • மஹத் எனும் தத்துவரூபமாக விளங்கும் பகவானிடத்தில் மனதை நிலைநிறுத்தி தியானிக்கும் யோகிக்கு மஹிமா எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தி மூலம் தன் உடலை பெரியமலை போல் மிக மிகப் பெரிதாக்கிக் கொள்ள முடியும்.
  • ஈஸ்வரனை பரமாணுவாக தியானிக்கும் யோகிக்கு லகிமா எனும் சித்தி கிட்டுகிறது. இந்த சித்தி மூலம் உடலை காற்றைப் போல் இலேசான எடையுடன் மாற்றிக் கொள்ள முடியும்.
  • பரப்பிரம்மத்தின் அஹங்கார தத்துவத்தில் தன் மனதை நிலைநிறுத்தும் யோகிக்கு, பிராப்தி எனும் சித்தியால் ஐம்புலன்களைத் தன் ஆளுகைக்கீழ் கொண்டு வரும் ஆற்றல் பெறுகிறார்.
  • பிறப்பு இறப்பு இல்லாத பகவானின் மஹத் தத்துவமே சூத்ராத்மா (பிரம்ம தேவர்). சூத்ராத்மாவில் மனதை நிலைபெறச் செய்பவர்கள் பிராகாம்யம் எனும் சித்தி பெற்ற யோகியாகி பிரம்மாண்டம் முழுமைக்கும் தலைமை தாங்குகிறார்.
  • முக்குணமயமான மாயைக்கு அதிபதியும், படைத்தல், காத்தல், அழித்தல் சக்தியும் கொண்ட பகவானிடத்தில் மனதை இலயிக்கும் யோகிக்கு ஈசித்வம் எனும் சித்தி கிடைக்கிறது. இந்த சித்தியினால் நான்முகன் முதலான தேவர்களை ஆணையிடும் தகுதி பெறுகிறார்.
  • பகவான் எனும் சொல்லிற்கு பொருளாக இருக்கும், விராட், ஹிரண்யகர்பன், அந்தக்கரணம் (உள்மனம்) எனும் மூன்று நிலைகளை கடந்து, நாலாவது நிலையில் உள்ள பிரம்மத்தில் மனதை செலுத்தும் யோகிக்கு வசித்துவம் எனும் சித்தி கிட்டுகிறது. இதன் மூலம் யோகிக்கு அனைத்தையும் வசப்படுத்தும் ஆற்றல் உண்டாகிறது.
  • நிர்குண (அழிவற்ற, பூரணமான, வடிவற்ற) பிரம்மத்த்தில் மனதை நிலை நிறுத்தும் யோகிகள் மிக உயர்ந்த பேரானந்தத்துடன் விருப்பங்களின் இறுதி எல்லையை அடைந்து காமா வஸாயிதா என்ற சித்தி அடைந்த யோகி, இதனையே தன் விருப்பங்களின் இறுதி எல்லை (காமா வஸாயிதா - ஆசையை வசப்படுத்தியவன்) என்ற சித்தியாக கூறுகிறார்கள்.

இதர சித்திகள்

[தொகு]
  • ஆகாயத்தை பிரம்மமாக தியானிப்பவனுக்கு, பறவைகளின் பேசும் சக்தி கிடைக்கும்.
  • தன் கண்களில் சூரியனையும், சூரியனில் தன் கண்களையும் இணைத்து மனதில் பகவானை தியானம் செய்பவனுக்கு, உலகம் முழவதையும் கண்ணால் பார்க்கும் சக்தி அடைகிறான்.
  • மனதை உபாதான காரணமாகக் கொண்டு, எந்தெந்த வடிவத்தை அடைய விரும்பி பகவானை தியானிக்கும் யோகிக்கு, தான் விரும்பும் வடிவத்தை அடைகிறான்.
  • தான் விரும்பும் காலத்தில் மரணமடைய விரும்பும் யோகி, குதிங்காலை, மலத்துவாரத்தை அடைத்துக்கொண்டு, பிராணசக்தியை, இருதயம்-மார்பு-கழத்து-தலை என்ற வரிசைப்படி மேல் நோக்கி கொண்டு வந்து, பின்னர் ’பிரம்மரந்திரம்’ என்ற கபாலத்தில் உள்ள துவாரம் வழியாக பிராணனை வெளியேற்ற வேண்டும். இச்சக்திக்கு கபால மோட்சம்↑ என்பர்.
  • மனம், உடல், அதில் உறையும் வாயுக்களுடன் சேர்ந்து பகவானை தியானிப்பவனுக்கு, ’மனோஜவம்’ என்ற ஆற்றல் கிடைத்து அதன் மூலம் யோகி தான் விரும்ம்பும் இடத்திற்கு அந்த விநாடியே வாயு வேகத்தில் சென்றடைகிறான்.
  • தான் விரும்பும் உடலில் நுழைய விரும்பும் யோகி, தான் அவ்வுடலில் இருப்பதாகச் தியானித்துக் கொண்டு, பிராணன் சூட்சும வடிவாக, வெளியிலிருக்கும், வாயுவுடன், தன் உடலை விட்டு விட்டு வேறு உடலில் நுழைகிறான். இதனை கூடு விட்டு கூடு பாய்தல் என்பர்.
  • தேவ லோகம் போன்ற மேல் உலகங்களுக்கு சென்று விளையாட வேண்டும் எனில், சத்துவ குணம் வடிவான பகவானை தியானிக்க வேண்டும்.
  • சத்ய சங்கல்ப மூர்த்தியான பகவானிடமே சித்தத்தை நிலை நிறுத்தி இருக்கும் யோகியின் எண்ணங்கள் மெய்யாக நிறைவேறுகிறது. இந்த யோகத்திற்கு சங்கல்ப சித்தி யோகம் என்பர்.
  • பகவானின் ஈசித்துவம், வசித்துவம் எனும் இரண்டு சித்திகளை தியானிக்கும் யோகியின் கட்டளைகளை யாரும் மீற முடியாது.
  • பகவானிடம் அத்யந்த பக்தி செலுத்தி, அதனால் மனத்தூய்மை அடைந்து தாரணையைத் (மனதை பகவானிடம் நிலை நிறுத்துதல்) தெரிந்து கொண்ட யோகி, பிறப்பு-இறப்பு போன்ற அறிவுக்குப் புலப்படாத, முக்காலம் அறியும் ஆற்றல் கிடைக்கிறது.
  • பகவானிடம் ஒன்றிப்போன சித்தத்தை உடையவருடைய உடல் யோகமயமாக ஆகிவிடுவதால், நீர், நெறுப்பு முதலியவற்றால் அழிவடையாது.
  • பகவானின் அவதாரங்களை தியானிப்பவர்களை எவராலும் வெல்ல முடியாது.

ஆனால் கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற உயர்ந்த யோகங்களில் மனம் ஒன்றிப் போயிருப்பவர்களுக்கு, இந்த சித்திகள் எல்லாம் இடையூறுகள் என்று மேலோர்கள் சொல்கிறார்கள். ஏன் எனில் இவைகள் எல்லாம் பகவானை அடைவதை தாமதப்படுத்துகிறது.

16வது அத்தியாயம்: பகவானுடைய பெருமைகளின் (விபூதிகள்) வர்ணனை

[தொகு]

உத்தவர் கேட்டதற்கு இணங்க, பகவானும் தனது விபூதிகளை உத்தவருக்கு கூறத் தொடங்கினார்.

17வது அத்தியாயம்: வர்ணாசிரம தர்ம விளக்கம்

[தொகு]

வர்ணங்கள் விராட் புருசனின் முகம், கை, தொடை மற்றும் கால்களிலிருந்து முறையே வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர்.

நால்வகை ஆசிரமங்கள் விராட் புருசனின் இடுப்புக்குக்கு கீழுள்ள முன்புறப் பகுதியிலிருந்து இல்லறம் ஆசிரமமும், இருதயத்திலிருந்து பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) ஆசிரமமும், மார்பிலிருந்து வனப் பிரஸ்த ஆசிரமமும், தலையிலிருந்து சந்நியாச ஆசிரமமும் தோன்றின.

நால்வகை வர்ண இயல்புகள் மற்றும் கடமைகளும்

வேதியர் வர்ண இயல்புகள் மற்றும் தர்மங்கள்

[தொகு]

வேதியர் இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள்.

வேதியர் தர்மங்கள் (கடமைகள்) :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் வைசியர்களின் (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது.

சத்திரியர் வர்ண இயல்புகள் மற்றும் தர்மங்கள்

[தொகு]

சத்திரியர் இயல்புகள் :- ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன்.

சத்திரியர் தர்மங்கள் (கடமைகள்) :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், வைசிய தர்மத்தை கைக்கொண்டு வாணிபம் செய்யலாம் அல்லது வேதியர்களுக்குரிய வேலைகளைச் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது.

வைசியர் வர்ண இயல்புகள் மற்றும் தர்மங்கள்

[தொகு]

வைசியர் வர்ண இயல்புகள் :-வாணிபம் செய்தல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடையாதிருப்பது.

வைசிய வர்ண தர்மங்கள் (கடமைகள்) :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம்.

சூத்திரர் வர்ண இயல்புகளும் கடமைகளும்

[தொகு]

வேளாளர்கள், மூன்று வர்ணத்தவர்களுக்கும், பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல்.

அனைத்து வர்ணத்தினருக்கான பொதுவான இயல்புகள்

[தொகு]

மனம்-மொழி-மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாமை, வாய்மையில் உறுதியுடன் நிற்பது, திருடாமை, விருப்பு-வெறுப்பு, பேராசை, பழி தீர்க்கும் உணர்வு, கருமித்தனம் இன்றி வாழ்தல்.

நால்வகை ஆசிரம தர்மம்

[தொகு]
பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம தர்ம இயல்புகள்
[தொகு]

பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவானவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுலக் கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.

இல்லற தர்ம இயல்புகள்
[தொகு]

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ யக்ஞம்:- வேள்விகள் வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.

2. ரிஷி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை,இதிகாசங்கள், திருமுறை, திருக்குறள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.

3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.

4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.

5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பக்தி யோகத்தில் செய்ய வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வனப் பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனப் பிரஸ்த (காடுறை வாழ்வு) தர்மம்
[தொகு]

வானப்பிரஸ்த ஆசிரமவாசிகளின் முதன்மையான கடமைகள் தர்மம், தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை அடைவான்.

சந்நியாச தர்மம் (துறவறம்)
[தொகு]

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்களும் கூட துயரத்தை தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்,உடமைகள், உறவினர்கள் மற்றும் வைதீக கர்மங்களை துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவனம்) அணிந்து கொண்டு, கமண்டலம், தண்டம் கையில் வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுள்ள செயல்களை செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம்: இந்த மூன்று தண்டங்களை (த்ரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதே போல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவராசிகளையும் சமமாக பார்த்து, பூலகில் தொடர்ந்து ஒரிடத்தில் தங்காமல், நிலையின்றி தனியாக திரிந்து வாழவேண்டும்.

மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரமம் நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம்.

துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.

ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை எனும் இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம் போன்ற உணர்வுகள் காண முடியாது.

எந்த துறவியிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சை ஆகும்.

சந்நியாசி தன்னுடைய தர்மங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விஞ்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.

18வது அத்தியாயம்: வானப்பிரஸ்த, சந்நியாச தர்மத்தை விளக்குதல்

[தொகு]

வனப் பிரஸ்த தர்மம்

[தொகு]

உத்தவரே, இல்லற ஆசிரமத்தில் மனநிறைவு அடைந்தவன், தன் மனைவியுடன் அல்லது தனியாக, மூன்றாம் ஆசிரமமான வனப் பிரஸ்த ஆசிரமத்தை கடை பிடிக்க, காட்டிற்கு செல்லாம். காட்டில் கிடைக்கும் கிழங்கு-காய்கனிகள் உண்டு, மரவுரி, இலைகள், மான்தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, முடி, நகம், மீசை, தாடிகளை மழித்துக் கொள்ளாது, தவ வாழ்வு வாழவேண்டும்.

கோடைகாலாத்தில், நாற்புரம் தீ மூட்டி, கண்களால் சூரியனை பார்த்துக் கொண்டும், மழைக்காலத்தில், மழையில் நின்று கொண்டும், குளிர்காலத்தில், நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்து உடல் சுண்டிப்போனவன், முனிவர்கள் அடையும் மகர்லோகத்தை அடைந்து பின் இறைவனை அடைவான்.

கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பினும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உணர்ந்து நிறைவான வைராக்கியம் பெற்று, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும்.

சந்நியாச தர்மம்

[தொகு]

சந்நியாசி கோவனத்தை ஆடையாக கொண்டு, கையில் கமண்டலம் மற்றும் தண்டு ஏந்தி அல்லது ஏந்தாமலும் இருக்கலாம். மௌனம் வாக்கின் தண்டம், பலனில் கர்மாக்களை விடுவது, உடலின் தண்ட்ம், பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம், இந்த மூன்று தண்டங்களையும் சுமக்காதவன், வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான்.

துறவி தனக்கு கிடைக்கும் பிட்சையில் மனநிறைவுடன் உண்டு வாழ வேண்டும். எதனிடத்திலும் பற்று கொள்ளாமலும், புலன்களை அடக்கியவனாகவும், ஆத்மாவிலேயே மகிச்சியடைந்து, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு உடையவனாக இருந்து) அனைத்து சீவராசிகளிடம் சமமாக பார்த்து தனியொருவனாக உலகை வலம் வரவேண்டும். பிட்சைக்காக, துறவி நகரம், கிராமங்களுக்கு செல்லலாம். எவ்விடத்தையும் தனது இடம் என்று பற்று வைக்கக் கூடாது.

ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற சந்நியாசி (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், மோட்சத்தில் விருப்பம் உள்ளவன், வேறு எதிலும் பற்று இல்லாதவன், ஆசிரம நியமங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாக உலகை வலம் வருவான். வேதத்தில் கூறப்பட்ட கர்ம காண்ட விளக்கத்தில் ஈடுபடமாட்டான்.

வைராக்கியம் அடைந்தவர்கள்

[தொகு]

உத்தவரே இனி வைராக்கியம் அடைந்தவர்களைப் பற்றி கூறப்போகிறேன். மகிழ்ச்சியைத் தரும் பொறிநுகர் பொருட்கள், இறுதியில், துன்பத்திற்குகே காரணம் என்பதை உறுதியாக உணர்ந்து பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வைராகி, பிரம்மநிஷ்டராக, குருவை அடைந்து, குருவிடம் பக்தி மற்றும் நம்பிக்கை வைத்து, தனக்கு பிரம்ம ஞானம் அடையும் வரை, குருவை இறைவனாக உணர்ந்து பணிவிடைகள் செய்ய வேண்டும்.

எவன் ஒருவன் காமம் முதலான ஆறு எதிரிகளை அடக்காமலும், புலன்கள் எனும் குதிரைகளை புத்தி என்ற சாரதியால் அடக்கப்படாமலும் உள்ளானோ, எவனிடம் ஞானமும், வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாகவும், தன்னுள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னையும் (இறைவனை) ஏமாற்றுகிறான். அவனுடைய உடை மட்டும் காவி; அந்த போலித்துறவிக்கு மனத்தூய்மை இல்லாததால் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நன்மை இல்லை.

துறவியின் முதன்மையான தர்மம், அமைதியும் - அகிம்சையும்; வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம், தவம் - இறை பக்தியும்; இல்லறாத்தானின் முதன்மையான தர்மம், அனைத்து சீவராசிகளைக் காத்தலும் - அக்னி ஹோத்திரமுமே; மாணவனின் முதன்மை தர்மம், குருவுக்கு பணிவிடை செய்வதே.

இவ்விதம் தங்களுக்குரிய ஆசிரமங்களை கடைப்பிடிப்பவர்களின் உள்மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று விரைவில் இறைவனை அடைகிறார்கள்.

19வது அத்தியாயம்: பக்தி, ஞானம் மற்றும் புலனடக்கம் பற்றிய விளக்கம்

[தொகு]

உத்தவரே, உபநிடதங்கள் முதலிய வேதாந்த சாத்திரங்களை கேட்டு, சிரவணம், மனனம், நிதித்யாசனம் மூலம் சாத்திர ஞானமுடைய பிரும்ம நிஷ்டன், யுக்தி மற்றும் அனுமானங்கள் முதலியவற்றின் அடிப்படையில் நேரடியாக ஆத்மாவை (பிரம்மத்தை) தரிசித்து விட்டவன் ஆவான். அவன் இந்த உலகத்தையும் அதன் நிவிருத்திக்கான சாதனங்களை மாயை என்று உணர்ந்து, அவைகளை என்னில் ஐக்கியப்படுத்தி, அவைகள் இரண்டுமே என் மேல் ஏற்றி வைக்கப்பட்டவை என்ற ஞானத்தை அடைகிறான்.

ஏனெனில், ஞானிக்கு மிகவும் பிரியமான வஸ்து பிரம்மம் ஆகிய நான் தான்! ஞானியின் இலட்சியம், என்னைத் தவிர அன்றி தேவலோகம் போன்ற லோகங்களில் பிரியம் கொள்வதில்லை.

தத்துவ ஞானத்தினால் மனதிற்கு ஏற்படும் புனிதம், தவம், தீர்த்தம், ஜெபம், தானம் மற்றும் பிற சாதனங்களால் தர இயலாது.

சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் விகாரங்களின் கூட்டுறவுதான், இந்த உடல். இந்த உடல், மனம், ஆத்மா ஆகியவைகளை மாயை திரை போட்டு மறைத்துள்ளது. இந்த உடல் முதலில் இருந்ததில்லை; இறுதியிலும் இருக்கப்போவதும் இல்லை; இடைக்காலத்தில் மட்டுமே இருக்கிறது.

இந்த உடலின் ஆறு வகையான இயல்புகள்- பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு மற்றும் மறைவு. இவைகள் ஆத்மாவுடன் சம்பந்தப்பட்டவைகள் அல்ல. இந்த மாற்றங்கள் உடல் சம்பந்தப்பட்டவையும் அல்ல. ஏனென்றால், அதுவே ‘அஸத்’- உண்மையில் இல்லாதது. நானே அஸத்தான வஸ்து- துவக்கத்தில் இல்லை; முடிவாக இருக்கப் போவதும் இல்லை என்னும் போது, இடையில் மட்டும் எப்படி இருக்க முடியும்?

பிரகிருதி, புருஷன், மஹத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் – இவை ஒன்பது; ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் – இவை பதினொன்று; பஞ்சபூதங்கள், முக்குணங்கள் – இவை எட்டு: ஆக இந்த இருபத்தி எட்டு தத்துவங்களும் பிரம்மா முதல் புல் பூண்டு வரையிலான எல்லா சீவராசிகளிடம் காணப்படுவதாலும், அவற்றில் பரமாத்மா இருக்கிறார் என்று அறிவதுதான், பிரம்ம ஞானம் என்று உறுதியாக சொல்கிறேன்.

பலவகையான பொருட்களால் ஆனது இந்த உலகம் என்று கருதாமல், பரமாத்மா என்ற ஒன்றினால் மட்டுமே இந்த அண்ட சராசரங்கள் வியாபிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக அறிந்து கொள்வது “விக்ஞானம்” எனப்படும்.

எனவே, படைப்பு, காத்தல், அழித்தல் இவற்றிக்கு உள்ளீடாக தொடர்ந்து இருப்பது எதுவோ, காரியங்கள் அழிந்து போனாலும், தான் அழியாமல் இருப்பது எதுவோ, அதுவே சத்தியமான வஸ்து (ஸத்) அல்லது ஆத்மா அல்லது பிரம்மம்.

இவ்வுலக வஸ்துக்கள் நிரந்தரமில்லாதவை என்பதாலும், மாறும் தன்மை உடையவை என்பதாலும், சத்தியமானவை அல்ல என்பது உறுதியாகும். எனவே, விவேகியானவன் உலகப் பொருட்களில் பற்று நீக்க வேண்டும்.

தானம், தவம், யாகம், யக்ஞங்களால் கிடைக்கும் சுவர்க்கம் மற்றும் பிரம்மலோகம் போன்ற மேலுகங்கள் கூட நிலையற்றவை என்பதை ஞானி அறிவான்.

தூயதான சத்வகுணம் பொருந்தி சாந்தமாக இருக்கும் சித்தத்தை எப்போது பகவானிடம் சமர்ப்பிக்கும் சாதகனுக்கு தர்மம், ஞானம், வைராக்கியம் மற்றும் சகல் ஐசுவர்யங்கள் தாமாகவே வந்தடைகின்றன.

உத்தவரே, யமம் என்பது பன்னிரண்டு வகைப்படும்- அகிம்சை, சத்தியம், திருடாமை, அஸங்கம் (ஒரு கூட்டத்தில் இருந்தாலும், தனிமையாக இருத்தல்), நாணம், அபரிக்கிரகம் (தேவைக்கு அதிகமாக பொருட்கள் சேர்த்தல்), ஆஸ்திக்யம் (பகவானிட்த்தில் நம்பிக்கை), பிரம்மச்சரியம், மௌனம், தைர்யம், பொறுமை, அச்சமில்லாமல் இருப்பது.

நியமம் என்பதும் பன்னிரண்டு வகைப்படும்; உடல் மற்றும் மனத்தூய்மை (சௌசம்), ஜெபம், தவம் (உண்டி சுருக்கல்), ஹோமம், சிரத்தை, விருந்தோம்பல், பகவானை பூஜிப்பது, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வது, பிறர்க்கு உதவுவது, தெய்வாதீனமாக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்தல், குருவுக்கு பணிவிடை செய்தல், பலனில் பற்றுடன் அல்லது பற்று இல்லாதும் இவைகளை கடைப்பிடிக்கலாம். இந்த யமம் மற்றும் நியமங்களை கடைப்பிடிப்பவன் விரும்பியதை அடைகிறான்.

மனதை பகவானிடம் செலுத்துவது, ’சமம்’; புலனடக்கம் என்பது ’தமம்’; ’திதிக்ஷா’ என்பது துன்பங்களை சகித்துக் கொள்வது. நாக்கையும், பிறப்புறுப்பையும் வெற்றி கொள்வது, ’திருதி’ எனப்படும் தைரியம்.

தன்னை அண்டி வந்த சீவராசிகளுக்கு அடைக்கலம் அளிப்பது: தானம்; காமத்தை விட்டுவிடுதல்; தவம்; தீய இயல்புகளை அடக்குவது, சௌர்யம் எனும் சூரத்தனம்; அனைத்து சீவராசிகளை சமமாக (பிரம்மமாக) பார்த்தல்; சத்தியம்; உண்மையாகவும், இனிமையாகவும் பேசுவதையே மகாத்மாக்கள் ’ரிதம்’ என்பர். கர்மங்களில் பற்றில்லாமல் இருப்பது ’சௌசம்’. கர்மங்களை விட்டுவிடுவது ’சந்நியாசம்’.

ஜீவாத்மா- ப்ரமாத்மாக்களிடையே பேத புத்தியை அழிக்கும் கல்வியே பிரம்மவித்யா ஆகும். விலக்கப்பட்ட செயல்களை செய்ய அஞ்சுவது, நாணம் (ஹரீ).

எதற்கும் ஆசைபடாமலிருப்பது, உடலுக்கு அழகு (ஸ்ரீ); சுகத்தையும் துக்கத்தையும் கடந்து நிற்பது, சுகம்; மனம் மற்றும் உடலின்பங்களில் நாட்டம் கொள்வது, துக்கம்; கட்டு-விடுதலை (மோட்சம்) என்பவைகளை அறிந்தவன், ஞான் யோகி ஆவான்.

உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ‘நான்’ என்று பற்றுக் கொள்பவன், மூர்க்கன்; சம்சாரச் சக்கரத்திலிருந்து விலகி, பகவானை நோக்கி செல்லும் பாதையே, நன்மார்க்கம்; வாழ்க்கை இன்பங்களில் ஈடுபடுவதே, தீய மார்க்கம் (குமார்க்கம்). சத்வ குணத்தின் வளர்ச்சியே, சுவர்க்கம்; தமோ குண வளர்ச்சியே, நரகம்; குருவே உண்மையான உறவினர்; நற்குணங்கள் நிரம்பியவனே செல்வந்தன்.

கிடைத்ததைக் கொண்டு எவன் மகிழ்ச்சி அடையவில்லையோ அவனே தரித்திரன் (ஏழை); புலன்களை கட்டுப்படுத்தாதவன், கிருபணன்; விஷயப் பற்றில்லாத சித்தம் உடையவன், ஈசன்; இதற்கு மாறாக விஷய போகங்களில் மனத்தைச் செலுத்துபவன், அநீசன் ஆவான்.

குறை-நிறைகளில் பார்வையை செலுத்து குற்றமாகும். இவ்விரண்டு பார்வையையும் கடந்து, தன் சுய ரூபத்தில் நிலைத்து நிற்பதே, சிறந்த குணமாகும்.

20வது அத்தியாயம்: ஞான-கர்ம-பக்தி யோக விளக்கங்கள்

[தொகு]

ஞான-கர்ம-பக்தி யோகங்கள் தவிர மனிதனின் ஆன்மிக மேம்பாட்டிற்கு வேறு வழிகளே இல்லை. கர்மாக்களிலும், கர்மபலன்களிலும் விரக்தி அடைந்து, அவற்றை கைவிட்டவர்களே ஞான யோகத்திற்கு தகுதியுள்ளவர்கள். மாறாக, கர்மாக்களிலும், கர்மபலனில் ஆசையை விடாதவர்கள், கர்ம யோகத்திற்கு தகுதியானவர்கள்.

முன் செய்த நல்வினையால் புண்ணியவசமாக பகவானின் கதைகளில் பெரும் ஈடுபாடு கொண்டவனுக்கு பக்தி யோகம் விரைவில் சித்தியைத் தரும்.

எதுவரையில் கர்மத்தின் பயனில் ‘போதும்’ என்ற நிறைவு தோண்றவில்லையோ, அதுவரையில் கர்மாக்களை செய்து கொண்டிருக்கவே வேண்டும்.

தன்னுடைய வர்ண-ஆசிரமங்களுக்கு உரிய தர்மங்களைச் செய்து கொண்டு, எவ்வித பற்றும், பலனில் ஆசையும் இன்றி பகவானை வழிபட வேண்டும். செய்யத் தகாதன என்று விலக்கப்பட்ட கர்மாக்களை விடுத்து, விதிக்கப்பட்ட கர்மாக்களையே செய்து வருபவர், சுவர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போகமால், பகவானிடத்திலே இரண்டறக் கலந்து விடுகிறார்.

ஞானம்-பக்திக்கு, மனித உடல்தான் சாதனமாக உள்ளது. எனவே சுவர்க்கத்தில் மற்றும் நரகத்தில் உள்ளவர்களும் மனித உடலைத்தான் அடைய விரும்புவர். இந்த மனித உடல் அழியும் தன்மையுடையது என்றாலும் இந்த உடல் மூலமாகத்தான் பரமாத்மாவை அடைய முடியும். எனவே ஞானமுள்ளவன், இறப்புக்கு முன் ஆத்மசாதனை புரிந்து, அதனால் பிறப்பு-இறப்புச் சூழலிருந்து நிரந்தரமாக விடுதலை அடைய வழிகளைக் காணவேண்டும்.

உடல் மீது இல்லாத மனிதன், உடலை உதிர்த்த பின்பு மோட்சத்தை அடைகிறான். உடல் மீது பற்று உடையவன் துக்கத்தை அடைகிறான்.

ஒவ்வொரு விநாடியும் உடலின் ஆயுள் குறைந்து கொண்டே வருவதை நன்கு உணர்ந்தவன், உடலின் மீது பற்று கொள்ளாமல், பரமாத்ம தத்துவ ஞானத்தை அடைந்து, பிறப்பு-இறப்பு எனும் காலச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, ஆத்மாவிலேயே பேரமைதி பெறுகிறார்.

கர்மாக்கள் துக்கத்தையே தரக்கூடியது என்பதை ஞானத்தால் உணர்ந்து, கர்மாக்களின் மீதான பற்றினை விட்டு, புலன்களை வென்று, மனதை விஷயங்களில் செல்லாமல் தடுத்து, ஆத்மாவிலேயே நிலைத்திருக்கும்படி பயிற்சி செய்து ஸ்திரப்படுத்த வேண்டும்.

மனதை ஆத்மாவில் நிலைப்படுத்த முயலும் போது, அவ்வப்போது மனம் இங்குமங்கும் செல்லத் துடிக்கும். அப்போது விழிப்புடன் இருந்து மனதிற்கு அறிவுரை கூறி, மனதை திரும்பவும் தன் வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். புலன்களையும், பிராணனையும் தன் வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்; மனதை சுதந்திரமாக திரிய விடக்கூடாது. மனதின் போக்குப்படி செல்வதற்கு சில வேளைகளில் அனுமதித்துவிட்டுப் பின்னர், அடிக்கடி அறிவுரை கூறி, தன் வசத்தில் கொண்டு வரவேண்டும். ஆத்ம சொரூபத்தில் மனதை நிலைநிறுத்தி பயிற்சி செய்து வந்தால், உடலின் மீதான பற்றை துறந்துவிடலாம்.

புலனடக்கம்-மனவடக்கம் (யமம்-நியமம்)- அகிம்சை, தவம் முதலிய யோகமார்க்கத்தில் பகவானை தியானிக்கலாம். அல்லது, ஆத்மா-அனாத்மா, திருக்-திருஷ்யம், ஸத்-அஸத் போன்ற வேதாந்த தத்துவங்களை விசாரணை மேற்கொண்டு பகவானை தியானிக்கலாம்.

யோகி, தவறுதலாக நிந்திக்கத்தக்க செயலை செய்து விட்டால், அந்தப் பாவத்தைத் தன் யோகத் தீயினாலேயே அழித்துவிடலாம்; வேறு பிராயச்சித்த கர்மாக்கள் செய்ய வேண்டியதில்லை.

கர்மா, தவம், ஜெபம், ஞானம், வைராக்கியம், யோகம், தானம், தர்மம் மற்றும் யாகம், யக்ஞம் செய்வதால் பிதுர் லோகம், சுவர்க்க லோகம், பிரம்ம லோகம் மற்றும் வைகுண்டம் கிடைக்குமோ, அதை எல்லாம் பகவானின் பக்தன் விரும்பினால் பக்தி யோகப் பிரவாகத்தால் எளிதாக அடைந்துவிடலாம்.

பகவானிடத்திலேயே மனதை நிலை நிறுத்தி, விருப்பு-வெறுப்பு அற்றவனாக, எல்லாச் சீவராசிகளை சமமான நோக்கில் பார்த்து, புத்தியைக் கடந்த பரமாத்மா தத்துவத்தை அறிந்தவர்களுக்கு, விதி விலக்குகளால் ஏற்படக்கூடிய புண்ணிய-பாவங்களோடு எந்த சம்பந்தமும் இல்லை.

21வது அத்தியாயம்: குண-தோஷங்களின் வடிவமும், மறைபொருளும்

[தொகு]

உத்தவரே, என்னால் விளக்கப்பட்ட பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகியவைகளை விட்டுவிட்டு, புலன்கள் தரும் சிற்றின்பங்களில் ஈடுபடுகிறவர்கள், மீண்டும் மீண்டும் பிறப்பு – இறப்பு எனும் வாழ்க்கை எனும் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருப்பார்கள்.

சீவர்கள் தங்களுடைய கர்மவாசனையின் விளைவாக செயல்படும் புலன்களின் தறிகெட்ட ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு இலக்குகளை அடைய வேண்டும். எந்தெந்த பொருள்களிலிருந்து பற்று நீங்கி, மனநிறைவைப் பெறுகிறானோ, அவ்வவற்றின் தளையிலிருந்து மனிதன் விடுபடுகிறான். துயரம், மயக்கம், பயத்தைப் போக்கும் இந்த முறைதான் ஆன்மவிடுதலையைத் தரும் தர்ம வழியாகும்.

புலனுகர் பொருட்களில் உயர்வை ஏற்றி வைப்பதால், அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதல் ஏற்பட்டதும் அவற்றை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டாகிறது. அப்பொருளை அடைய தடை ஏற்படின் கோபம், கலக்கம் உண்டாகிறது. இந்த கலக்கம், கோபத்தினால் நல்லது கெட்டது என்ற அறிவு அப்போது ஏற்படுவதில்லை. அறிவு கெட்டவுடன், மனிதனுடைய சிந்தனை சக்தி மறைந்து விடுகிறது.

அறிவு கெட்டபின் மனிதனிடம் மனிதத்தன்மை நீங்கி, விலங்கின் தன்மை பற்றிக்கொள்கிறது. அவன் ஒரு சூன்யத்தை போல் ஆகி விடுகிறான். புலனுகர் பொருட்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் மனிதனும் போகப் பொருளாகி விடுகிறான்.

உட்கொள்ள முடியாத கசப்பான மருந்துகளை, இனிப்பைத் தடவி கொடுப்பது போல், வேதங்களில் சுவர்க்கம் முதலிய லோகங்களை மனிதன் அடைய வேண்டிய இலக்காக முதலில் கூறினாலும், மனிதன் அடையத்தக்க உயர்ந்த இலக்காக விளக்கப்படவில்லை. புலனுகர் இன்பங்களில் ஈடுபாட்டைச் சுருக்கிக் கொண்டு, உள்மனதில் தூய்மை பெற்று, மோட்சத்தை அளிக்கும் செயல்களில் ஆர்வத்தை மேம்படுத்துவதே அதன் நோக்கம்.

பொருள் இன்பங்களில் சிக்கித் திணறும் அறிவிலிகள், அக்னியில் ஆஹிதி கொடுக்கும் யாகயக்ஞங்களில் மனம் மகிழ்ந்து போகிறார்கள். அவர்கள் தற்காலிகமான தேவலோகம், பித்ரு லோகம் அடைகிறார்கள். ஆனால் நிலையான ஆத்ம லோகம் அடைவதில்லை.

வேள்வியில் பசு போன்ற விலங்குகளை பலி இட வேண்டும் என்று கட்டாயமாக விதிக்கப்படவில்லை. இதனுடைய உட்கருத்தை உணராத மூடர்கள் புலன்களை திருப்தி செய்வதற்காக வேள்விகளில் பசு போன்ற விலங்குகளை பலியிட்டு தேவதைகள் – பிதுரர்கள் - பூதங்களைப் பூசிப்பதாக சொல்கிறார்கள்.

இலாபத்திற்கு பேராசைப்படும் வணிகன், மூலதனத்தை இழந்து விடுவது போல், பலனில் பற்றுக் கொண்டவர்கள், வேள்வி முதலியன செய்து, ஆத்மாவையே இழக்கிறார்கள்.

வேதங்களில் கூறப்பட்ட கர்ம – உபாசனை – ஞான காண்டங்களை ஆராய்ந்ததில், ஜீவாத்மாவும்பரமாத்தாவும் ஒன்றே என்பதுதான். இதனை முனிவர்கள் நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறியுள்ளனர். மனம் தூய்மை பெற்று, செயல்களை (கர்மாக்கள்) துறந்த தெள்ளறிவாளர்களுக்கே (ஞானிகளுக்கே) பிரம்மம் புலப்படும். வேத வேதாந்தகளின் மறைபொருள் அறிந்து கொள்வது கடினம். மரபு வழிவந்த வேதாந்திகளிடமிருந்து பிரம்மத்தைப் பற்றிய அறிவை கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

வேத வடிவாகவும், அமுதமயமாகவும் உள்ள நான், ஹிரண்யகர்பனாகவும் இருக்கிறேன். பிராணனை உபாதியாகக் (ஆதாரமாக) கொண்டு சூக்கும ஓங்கார வடிவிலிருக்கும் அநாஹத சப்தம் மூலமாக அது வெளிப்படுகிறது. சிலந்திப் பூச்சி தன் வாய் மூலமாக வலையைப் பின்னி, பின்னர் அதை தானே உள்ளூக்குள் இழத்துக் கொள்கிறது. அது போன்று ஈசுவரன் தான் படைத்த சீவராசிகள் உட்பட அனைத்து லோகங்களையும் காத்து பின்பு தன்னுள் இழத்துக் கொள்கிறான்.

ஞான காண்டத்தில் (வேதாந்தம்), சீவராசிகளும் உலகங்களும் பரமாத்மாவைக் காட்டிலும் வேறானது அல்ல என்று அனைத்து பொருட்களும், பிரம்மத்தின் மேல் ஏற்றி வைத்து, பின்பு அவைகளை நீக்குகிறது. பிரபஞ்சமே பிரம்ம மயமானது, பிரம்மத்தின் மீது வேற்றுமைகள் கற்பித்து, அவையெல்லாம் மாயை என்று ஒதுக்கி தள்ளிவிட்டு பிரம்மத்திடம் நிலையான அமைதி பெறுகிறது. (மரத்தின் வேரில் உள்ள நீரே மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் பரவுதைப் போல், ஓங்காரப் பொருளாகிய பரப்பிரம்ம்மே, அந்த நாதத்திலிருந்து வெளிப்பட்டு எல்லையில்லாமல் விரிந்த வேதத்தின் உட்பொருள் என்பது கருத்து).

22வது அத்தியாயம்: தத்துவங்களின் எண்ணிக்கை மற்றும் புருஷன் - பிரகிருதி - விவேகம்

[தொகு]

தத்துவங்களின் எண்ணிக்கை பலவாறாக கூறப்பட்டிருந்தாலும், 3+9+11+5=28 என இருபத்தி எட்டு தத்துவங்கள் என்பதே சரியாகும்.

சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்கள்.

புருஷன், பிரகிருதி, மஹத் தத்துவம், அகங்காரம், ஆகாயம், தேஜஸ், நீர், பூமி எனும் ஒன்பது தத்துவங்கள்.

ஐந்து ஞானேந்திரியங்களான, காது, தோல், கண், மூக்கு, நாக்கு, எனும் ஐந்துடன், ஐந்து கர்மேந்திரியங்களான, வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றுடன் ’மனம்’ (மனதை ஞானேந்திரியமாகவும் அல்லது கர்மேந்திரியமாகவும் கொள்ளலாம்) சேர்த்தால் பதினொரு தத்துவங்கள்.

சப்தம் (கேட்கும் சக்தி), ஸ்பர்சம் (தொடு உணர்வு), ரூபம் (பார்க்கும் திறன்), இரஸம் (சுவைக்கும் உணர்வு) , கந்தம் (வாச்னை அறியும் சக்தி) எனும் ஞானேந்திரியங்களின் ஐந்து விசேஷ சேர்க்கைக் சேர்த்தால் ஐந்து தத்துவங்கள

உத்தவரே, பிரகிருதி - புருஷன் (சீவன் – ஆத்மா) ஆகிய இரண்டும் முற்றிலும் மாறுபட்டவர்களே. பிரகிருதியின் காரியமாக உலகில் பிறப்பு – இறப்பு; மற்றும் வளர்ச்சி – தேய்வு – அழிவு முதலிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவைகள் குணங்களின் சேர்க்கையால் ஏற்பட்டதே. மாயை மூவகையானது. அது, தனது சத்வ-இரஜோ-தமோ எனும் முக்குணங்களைக் கொண்டு பலவித பேத புத்திகளான படைப்புக்களை மூன்று பகுதிகளாக – அத்யாத்மம், அதிதைவம், அதிபூதம் எனப் பிரித்துள்ளனர்.

உதாரணமாக கண் எனும் புலன் – அத்யாத்மம், அதனுடைய பார்க்கும் செயல் என்பது அதிபூதம், நேத்திரகோளத்திலிருக்கும் சூரியதேவனின் அம்சம் அதிதைவம். இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுவது என்று உறுதியாகிறது.

பிரகிருதியிலிருந்து (பிரதானம் என்ற தத்துவத்திலிருந்து) மஹத் தத்துவம் தோன்றுகிறது. மகத் தத்துவத்திலிருந்து அகங்காரம் தோன்றுகிறது. அதனால், அகங்காரமும் பிரகிருதியின் ஒரு விகாரமாகிறது. அகங்காரம் – வைகாரிகம், தாமசம், ஐந்திரியம், (சாத்விக-தாமச-ராஜசம்) என மூவகை குணமாக இருந்து மோகத்துக்கும், படைப்பின் பல்வகைக்கும் காரணமாகிறது.

ஆத்மா ஞான வடிவானது. நிர்குணமானது. சத்தியமானது. அழிவற்றது. மனிதர்களின் மனம் என்பது, கர்ம – சம்ஸ்காரங்களின் ஒரு தொகுப்பு. சம்ஸ்காரங்களுக்கு ஏற்றபடி போகங்களை அனுபவிப்பதற்காக அதனுடன் இந்திரியங்கள் ஒட்டிக்கொண்டுள்ளது. இதற்கு ’லிங்க சரீரம்’ என்பர். அதுதான், நாம் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்களுக்கு ஏற்ப ஓர் உடலிருந்து இன்னோர் உடலுக்கும், ஓர் உலகத்திலிருந்து இன்னோர் உலகத்திற்கும் போய் வந்து கொண்டிருக்கிறது. ஆத்மா இந்த் லிங்க சரீரத்திலிருந்து வேறானது. அது போவதும் இல்லை, வருவதும் இல்லை. ஆனால் லிங்க சரீரத்தையே தானாக எண்ணி, அதில் அகங்காரத்தை அடையும்போது, அதுவும் போய் – வந்து கொண்டிருப்பதாக தோற்றம் அளிக்கிறது.

சீவன் தான் செய்த கர்மங்களுக்கு ஏற்ப கிடைத்த உடலில் மிகவும் பற்று ஏற்பட்டு விடுகிறது. தன்னுடைய முந்தைய உடலின் நினைவு கூட இருப்பதில்லை. எதோ காரணத்தால், முற்றிலுமாக உடலை மறந்து விடுவது தான் மரணம் என்ப்படுகிறது. (உடல் அழிந்தாலும், அதன் ஆத்மா அழிவதில்லை என்பது கருத்து)

சீவன், ஓர் உடலை தன்னிலும் வேறானது என்ற உண்மையை மறந்து, ’இது நான் தான்’ என்று பற்றுக் கொள்கிறதோ, அது பிறப்பு. ஆத்மா ஒன்றுதான்; இரண்டற்றது; முழுமையானது; அதற்கு உட்புறம்-வெளிப்புறம் என்ற பிரிவு இல்லை. மனம் தான், பிறப்பு – இறப்பு என்ற பேத புத்திக்கு காரணம். மனதின் ஆட்சியில் புலன்கள் இயங்குகிறது. மனம் தான் பலவித கற்பனைகளைச் செய்கிறது. மனம் தான், பிறப்பு – இறப்பு போன்ற நிலைகளை ஆத்மாவின் மேல் ஏற்றி வைக்கிறது (அத்யாரோபம்).

உடலுக்கு ஒன்பது நிலைகள் - கர்ப்பதானம், கர்ப்பத்தின் வளர்ச்சி, பிறப்பு, குழந்தைப் பருவம், வாலிப பருவம், யெளவனம், நடு வயது, வயோதிகம், மரணம்.

கர்மவினைப்படி சீவன் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழல்கிறான். அப்போது சீவனுக்கு, சத்வகுணம் அதிகமாக இருந்தால் முனிவர்களாகவும், ராஜச குணம் அதிகமாக இருப்பின் மனிதர்களாகவும், அசுரர்களாகவும். தாமச குணம் அதிகமாக இருப்பின் பூதங்களாகவும், விலங்கினங்களாகவும் பிறக்கிறான்.

எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத புலன்களைக் கொண்டு, பொருட்களில் இன்பம் துய்க்காதீர்கள். ஆத்மா பற்றிய அக்ஞானத்திலிருந்து தோன்றும் உலகப்பொருட்களின் பேதங்கள், வெறும் மனப்பிரமை என்று அறிந்து கொள்ள வேண்டும்.

23வது அத்தியாயம்: பொறுமை குணம் படைத்த அந்தணர் கதை

[தொகு]

'மிகுந்த மான-அவமானத்திற்கும், துயரங்களுக்கும் உள்ளான மனிதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளமுடியுமா? என்று கேட்ட உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் முடியும் என்கிறார். அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்.

அவந்தி நாட்டில் ஒரு அந்தணர் இருந்தார். விவசாயம், வாணிபம் செய்து செல்வச் செழிப்புடன் இருந்தாலும் ஈகை குணம் இல்லாத பேராசையும் கோபக்குணமும் உடையவன். தர்மம் செய்து புண்ணியம் ஈட்டாத காரணத்தால் பஞ்சமகா யக்ஞ தேவதைகள் அவனிடம் கோபம் கொண்டதால், அவனுடைய செல்வங்கள் அனைத்தும் வற்றச் செய்தது.

செல்வங்கள் அனைத்தும் இழந்த அவனுக்கு வாழ்க்கையில் வெறுப்பும், திடமான வைராக்கியம் தோன்றின. பின்பு துறவற வாழ்க்கை மேற்கொண்டார். மனம், புலன்கள், பிராணன் முதலியவைகளை தன்னுள் வசப்படுத்தி, பிச்சை எடுத்து உலகத்தை சுற்றி வந்தார். பின்பு முதுமைக் காலத்தில், தீயவர்கள் அவரை கேவலப்படுத்தியும் அவமானப்படுத்தியும் வந்தாலும், அவர் தமது தர்மத்தில் உறுதியாக இருந்தார்.

இந்த உலகத்தில் மனிதனுக்கு யாரும் சுக-துக்கங்களை தருவதில்லை. சுக-துக்கம் என்பதே சித்தத்தின் பிரமை தான். இவ்வுலகமும், அதில் நண்பன்-விரோதி-உதாசீனன் என்ற வேறுபாடுகள் அக்ஞானத்தால் ஏற்பட்டவை. புத்தியால் மனதை வசப்படுத்தி, எல்லா எண்ணங்களையும் ஒடுக்கி பகவானில் ஆழ்ந்து நிலைத்திருக்க வேண்டும். இது தான் எல்லா யோகங்களின் சாரமான பிட்சு கீதை ஆகும்.

24வது அத்தியாயம்: சாங்கிய யோகம்

[தொகு]

கபில முனிவர் ஆக்கிய சாங்கிய யோகத்தின் சிறப்புக்களை பகவான், உத்தவருக்கு விளக்குகிறர்.

  • பிரம்மம் இரண்டற்றது. சத்தியமானது; மனமும், சொற்களும் அதனைச் சென்றடைய மாட்டாது. ஆனால் அதே பிரம்மம், மாயை மற்றும் சீவன் (காண்பவன் – காணப்படுபவன்) என்று இரு கூறுகளாக பிரிந்தது. அவற்றின் ஒன்றின் பெயர், பிரகிருதி; அதுவே உலகத்தில் காரிய-காரண வடிவங்களை ஏற்று நடத்துகிறது. ஞான வடிவான மற்றொரு பொருள், புருஷன் (சீவன்).
  • பிரகிருதியிடமிருந்து சத்வம்-ரஜஸ்- தமஸ் என்ற முக்குணங்கள் தோண்றின. இந்த முக்குணங்களும் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பதால், அவற்றில் கிரியா சக்தி அதிகமாக உள்ள சூத்ரமும், ஞானசக்தி அதிகமாக உள்ள மஹத்தும் உண்டாயின. மஹத் தத்துவம் மாற்றமடைந்து அகங்காரம் வெளிப்பட்டது. இந்த அகங்காரம்தான் சீவன்களை மாயையில் (உடலை ஆன்மா எனும் மயக்கத்தில்) தள்ளுகிறது.
  • அகங்காரம் மூன்று வகையானது – சத்துவ குணம், இராட்சத குணம், மற்றும் தாமச குணம். அதுவே ஐந்து தான்மாத்திரைகள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் மற்றும் மனம் ஆகியவற்றுக்கும் காரணமாகிறது. எனவே அது சடம் (அஸத்), அறிவு வடிவம் (சைதன்யம்) என்ற இரு தன்மைகளும் உடையதாக உள்ளது. தாமச அகங்காரத்திலிருந்து தோண்றிய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து ஐந்து மகாபூதங்களும், இராஜச அகங்காரத்திலிருந்து புலன்களும், சாத்விக அகங்காரத்திலிருந்து புலன்களின் பதினோறு அதிஷ்டான தேவதைகளும் உண்டாயின (ஐந்து கர்மேந்திரியம், ஐந்து ஞானேந்திரியம், மனம் - ஆக பதினொன்று)
  • பின்பு மஹத் தத்துவத்தில் பிரம்மம் நுழைந்ததால், அவைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அண்டத்தை படைக்கும் ஆற்றலைப் பெற்றது. அந்த அண்டத்தில் பகவான் நாராயணனாக தோண்றினார். நாராயணின் தொப்புள் கொடி தாமரையிலிருந்து பிரம்மா தோண்றினார். பிரம்மா நீண்டகாலம் தவமியற்றி பகவானின் அருளால், ரஜோ குணத்தால் பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம் ஆகிய மூன்று லோகங்களையும், லோக பாலகர்களையும் படைத்து, சுவர்க்கலோகத்தில் தேவர்களும், புவர்லோகத்தில் (ஆகாயத்தில்) பூதப் – பிரேதாதிகளும், பூலோகத்தில் (மண்ணுலகம்) மனிதன் முதலான சீவராசிகளும் வசிக்கத் தொடங்கினர். இம்மூன்று லோகங்களுக்கு மேல் மகர்லோகம், ஜனலோகம், தபோலோகம் மூன்று லோகங்கள் உண்டாயின. அசுரர்களும், நாகர்களும் வசிப்பதற்கு, பூலோகத்திற்கு கீழ் அதலம் முதலிய ஏழு உலகங்களை படைத்தார்.
  • யோகம், தவம், சந்நியாசம் இவைகளை கடைப்பிடிக்கும் தூய்மை அடைந்த சித்தர்கள், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகங்களை அடைகிறார்கள். பக்தி யோகத்தை கடைப்பிடிப்பவர்கள் உறுதியாக பகவானை அடைகிறார்கள்.
  • இந்த அண்டங்களுக்கு உபாதான காரணம் பிரகிருதி; நிமித்த காரணம் பரமாத்மா. இதை வெளிப்படுத்துவது ’காலம்’ எனும் பகவானே. விவகார காலத்தில் பயன்படும் இம்மூன்றும் உண்மையில் பிரம்ம வடிவமே. அந்த சுத்தப் பிரம்மமான பகவானே.
  • பரமாத்மாவின் சங்கல்பம் உள்ள வரையில், உலகப்படைப்புகளும், பரிபாலனமும் தொடர்ந்து நடைபெறும்.
  • இந்த விராட் புருஷன்தான் உலகங்களை உண்டாக்குதல், நிர்வாகம் செய்தல், அழித்தல் (தன்னுள் லயப்படுத்தி கொள்வது) எனும் செயல்களுக்கு நிலைக்களன். கால வடிவான பகவான், பிரளயத்தை நடத்த வேண்டும் என்ற சங்கல்பத்துடன் உலகங்களைத் தழுவிக் கொள்ளும் போது, அந்த பேரழிவில் இதுவும் மறைந்து போகிறது.
  • சீவராசிகளின் உடல் அன்னத்திலும்; அன்னம் விதையிலும்; விதை பூமியிலும்; பூமி கந்தத்திலும்; கந்தம் (சுவை) நீரிலும்; நீர் தன் குணமாக ரசத்திலும்; ரசம் தேஜஸ்ஸிலும்; தேஜஸ் உருவத்திலும் லயமடைகிறது. உருவம் வாயுவிலும்; வாயு தொடுவுணர்விலும்; தொடுவுணர்வு ஆகாயத்திலும்; ஆகாயம் ஏழு தன்மாத்திரைகளிலும் லயமடைகிறது. இந்திரியங்கள் தங்கள் அதிஷ்டான தேவதைகளிடமும் பின் இறுதியில் ராஜஸ அகங்காரத்திலும் சேர்ந்து விடுகிறது.
  • ராஜஸ அகங்காரம் தன் தலைவனான சாத்விக அகங்கார வடிவான மனதிலும்; சப்த தன்மாத்திரைகள் பஞ்சபூதங்களுக்குக் காரணமான தாமஸ அகங்காரத்திலும்; எல்லா உலகங்களையும் மயக்கும் வல்லமை படைத்த இம்மூவகை அகங்காரம், மஹத் தத்துவத்திலும் லயம் அடைகிறது.
  • ஞானம் மற்றும் கிரியாசக்தியை முக்கியமாக உடைய மகத் தத்துவம் தனக்கு காரணமான குணங்களில் ஒடுங்குகிறது; குணம் வெளிப்பட்ட பிரகிருதியிலும்; பிரகிருதி அழிவற்ற காலம் எனும் தத்துவத்திலும் ஒடுங்குகிறது.
  • விவேகத்துடன் இவ்வுலகை பார்ப்பவனுக்கு, உலகம் அழிவற்றது என்ற மயக்கம் ஏற்படாது.
  • ஈஸ்வரன் காரண – காரியங்களுக்கு சாட்சியாக மட்டும் இருப்பவன். படைப்பிலிருந்து பிரளயம் வரையிலும், பிரளயத்திலிருந்து படைப்பு வரையிலும் கூறப்பட்ட சாங்கியயோகத்தை அறிந்து கொள்வதால், மனிதனுடைய சந்தேகங்கள் வெட்டித் தள்ளப்படுகின்றது.

25வது அத்தியாயம்: முக்குணங்களின் செயல்பாடுகள்

[தொகு]
  • மனிதன் சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணங்களினால் ஆனவன்.
  • சத்வகுணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு, விவேகம், வைராக்கியம், தவம், சத்தியம், தயை (முன்பின் ஆலோசிப்பது), மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சம் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
  • ரஜோ குண இயல்புகள்- ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்ப்ப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாத்த்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
  • தமோ குண இயல்புகள்- கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல்.
  • இக்குணங்களின் சேர்க்கையால் உண்டாகும் நன்மைகள்- சத்வ குணத்திலிருந்து, தர்மச்செயல்கள்; ரஜோ குணத்திலிருந்து; இன்பப் பற்று; தமோ குணத்திலிருந்து, செல்வம் உண்டாகிறது.
  • சத்வ குணம் பெருகுவதால் தேவத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும்; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், பிரவிருத்தி மார்க்கமும்; தமோ குணப்பெருக்கினால் இராக்கத தன்மையும், மோகமும் அதிகரிகின்றது.
  • சத்வ குணத்தினால் விழிப்பு நிலையும், ரஜோ குணத்தினால் கனவு நிலையும், தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. இம்மூன்று குணங்களும் சம நிலையில் இருக்கும் போது ”துரீய நிலை” உண்டாகிறது. அதுதான் சுத்த, ஆனந்த மயமான ”ஆத்மா” (சுத்த சைதன்யம்) என்பர்.
  • ஒருவன் சத்வ குணத்தால் மேலுலகங்களை அடைகிறான். ரஜோ குணத்தால் மனித உடலை அடைகிறான். தமோ குணத்தால் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
  • தன் செயல்களை பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செய்வது சாத்வீகமாகும். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும். பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள், அது தாமசமாகும்.

26வது அத்தியாயம்: புரூரவசின் வைராக்கியம்

[தொகு]

உத்தவரே, என்னை அடைவதற்கான முக்கிய சாதனமான மனித உடலை அடைந்தவன், என்னிடம் உண்மையான பக்தி செலுத்தினால், அவனுடைய அந்தக்கரணத்திலுள்ள பரமானந்த சொரூபியான என்னை அடைந்து விடுவான். பெரும் புகழ் படைத்த மன்னன் பூரூரவசை, ஊர்வசி பிரிந்து சென்றதால் மனம் கலங்கிப் போனான்.

பின்னர், சோகம் குறைந்தவுடன் மனதில் வைராக்கியம் ஏற்பட்டது. மாபெரும் மன்ன்னாக இருந்த நான் ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து அவள் கைப்பாவை ஆகினேன். ஊர்வசி என்னிடம் வேத வாக்கியங்கள் மேற்கோள்களாக கூறியும், அவள் நற்போதனைகள் என் மனதில் பதியவில்லை. பாம்பை கயிற்றாக எண்ணியது எனது குற்றம் தானே. விவேகியாக இருப்பவர்கள், தீயவர் சேர்க்கையை விட்டுவிடவேண்டும். சாதுக்களை அண்டி, சேவை செய்து கொண்டு இருப்பவனுக்கு கர்மத்தளை என்ற அக்ஞான இருள் நீங்கி விடுகிறது. துயரக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு பிரம்மத்தை அறிந்த சித்தர்களான ஞானிகள், உறுதியான படகு போன்றவர்கள்.

ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மன்னர் புரூரவஸ் என்ற இளநந்தன் உலகத்திடம் பற்று நீங்கிற்று. அவனுடைய பந்த-பாசங்கள் எல்லாம் அழிந்தன. அவர் ஆத்ம ஞானியாக பற்று-பாசமில்லாமல் மண்ணுலகில் சுற்றித் திரிந்தார்.

27வது அத்தியாயம்: கிரியா யோக விளக்கம்

[தொகு]

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிரியா யோகத்தின் வழிபாட்டு முறைகளை, உத்தவர் கேட்டுக் கொண்டபடி விளக்குகிறார். என்னை வழிபடுவதற்கு வைதிகம், தாந்திரிகம், மிச்ரம் (கலவை) எனும் மூன்று முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

எனது உருவத்தை எட்டு வகையான பொருட்களில் செய்து வழிபடலாம்- கல், மரம், உலோகம், சந்தனம், சித்திரம், மண், இரத்தினம். (சந்தனக் குழம்பினால் வரி வடிவம் எழுதியும், மனத்தால் தியானித்தும் மூர்த்தியை கல்பிக்கலாம்) சூரியனில் தெய்வ வடிவத்தை தியானித்து வழிபடுவதால், அர்க்கயம் (தீர்த்தம்) அளித்தலும், உபஸ்தானமும் முக்கியம். தண்ணீரில் தெய்வத்தை உபாசிப்பதனால், தர்ப்பணம் முதலியவற்றால் செய்ய வேண்டும். ஒரு பக்தன், மிகுந்த பக்தியுடன், சாதாரணத் தண்ணீரையே அர்ப்பணம் செய்தாலும் அதை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னில் பக்தி உடையவன் சந்தனம், பூ, நறுமணப்புகை, தீபம் முதலியவற்றால் பூசித்தாலேயே நான் திருப்தி அடைவேன்.

என்னுடைய ஆசனத்துக்கு தர்ம்ம் முதலான எட்டு குணங்களே, கால்கள். (எட்டுகால்கள்:- கோணங்களில் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவர்யம் எனும் நான்கு கால்களும், திசைகளில் அதர்மம், அக்ஞானம், அவைராக்கியம், அநைசுர்யம் என்று நான்கு பாதங்கள். அதன் மீது சத்வம், இரஜஸ், தமஸ் எனும் மூன்று பீடங்கள். அவற்றில் விமலா, உத்கர்ஷிணீ, ஞானம், கிரியை, யோகம், ப்ரஹ்வீ, சத்யா, ஈசானா, அனுக்ரஹா என்று ஒன்பது சக்திகள். இந்த ஆசனத்தின் மேல் எட்டு தளங்கள் கொண்ட ஒரு தாமரை; அதன் நடுவில் ஒளிமிக்க கர்ணிகையில் பொன்மயமான துகள்கள். ஆசனம், இவ்வாறு அமைந்திருப்பது போன்ற பாவனை செய்து, பாத்யம், ஆசமநீயம், அர்க்யம், முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். போகம், மோட்சம், (இக-பர சுகம்) கிடைக்க வேண்டி, வைதிக-தாந்திரிக முறைகளால் என்னை வழிபட வேண்டும். (வைதிகம்-மந்திரங்கள்; தாந்திரிகம்-முத்திரைகள்; நியாசங்க்ள்- பூதசுத்தி, ஆத்ம பிராண பிரதிட்டை முதலியன.

சுதர்சன சக்கரம், பாஞ்சஜன்யம் (சங்கு), கௌமோதகீ எனும் கதாயுதம், கட்கம், (வாள்), பாணம் (அம்பு), சாரங்கம் எனும் வில், கலப்பை, முசலம், என்ற எட்டு ஆயுதங்களையும் எட்டு திக்கிலும் பூசிக்க வேண்டும். கௌஸ்துபமணி, வைஜயந்தி மாலை, ஸ்ரீவத்சம் என்ற மரு ஆகியவற்றை, மார்பில் பூசிக்க வேண்டும். நந்தன், சுநந்தன், பிரசண்டன், சண்டன், மகாபலன், பலன், குமுதன், குமுதேக்ஷ்ணன் ஆகிய பார்வசதர்களை எட்டு திக்குகளிலும், கருடனை எதிரிலும், துர்கை, விநாயகர், வியாசர், விஸ்வக்சேனர் முதலியோரை நான்கு கோணங்களிலும், குருவை இடது பக்கத்திலும், இந்திரன் முதலிய திக்பாலகர்களை அவரவர்க்குரிய திக்குகளிலும் நிலைநிறுத்தி, புரோச்சனம், அர்க்கயம், முதலிய செய்து பூசிக்க வேண்டும்.

பின் தோத்திரப் பாக்களால் தோத்தரித்து, பகவானே, எனக்கு அருள் புரிய வேண்டும்; என்னிடன் பிரசன்னமாயிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து, உடல் முழுவதும் தரையில் தோயும்படி விழுந்து சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும்.

பலனில் பற்றில்லாமல், கிரியா யோகத்தினால் என்னை பூசிப்பவன், பக்தியோகத்தை அடைந்து, நிறைவாக என்னையே அடைகிறான்.

28வது அத்தியாயம்: பரமார்த்த நிரூபணம் (ஞானயோகச் சுருக்கம்)

[தொகு]

உலக விவகார நோக்கில், படைப்பில், புருஷன், பிரகிருதி-பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் (உள்மனதில்) பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் சுபாவத்தையும், அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்ப்வன் ஞானநிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான்.

ஆத்மவின் தன்மை:- இவ்வுலகில் பார்க்கப்படும் பொருள்கள், பார்வைக்கு அகப்படாத பொருள்கள் ஆகிய எல்லாமே, பரமாத்மாதான். அவரே உலகத்தை படைக்கிறார், உலகமாகவும் ஆகிறார். உலகத்தைக் காப்பாற்றுகிறார், காப்பற்றப்படுபவராகவும் இருக்கிறார், அவரே உலகத்தை அழிக்கிறார், அழிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார். (செய்பவரும், செய்யப்படும் பொருளும் அவரே; ஆத்மாவன்றி வேறோன்றில்லை. விவகார நோக்கில் பார்க்கையில் ஆத்மா, இவ்வுலகிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆன்மநோக்கில் பார்த்தால் அதைத் தவிர வேறு பொருளே இல்லை.

ஆத்மதத்துவத்தை வாயால் சொல்ல இயலாது (அனிர்வசநீயம்). படைப்பு-நடப்பு-துடைப்பு அல்லது அத்யாத்மம்-அதிதைவம்-அதிபூதம் என்று ஆத்மாவில் கற்பிக்கப்பட்டுள்ள நிலைகள் ஆதாரமற்றவை. இவைகள் இல்லை என்றாலும் இருப்பன போல் தோற்றமளிக்கிறது. இவை சாத்வீகம்-ராஜசம்-தாமஸ குணங்களால் தோண்றுவன. காண்பவன் - காட்சி - காணப்படும் பொருள் என்று மாயையின் மூன்று வகையான விளையாட்டுகள் இது.

இந்த உலகம் தோற்றம் - அழிவு உடையதாக இருப்பதால், அநித்தியம் - அசத்தியம் என்பதை, பிரத்யக்ஷயம் - அனுமானம் - வேதாந்த சாத்திரங்கள், ஆப்த வாக்யம், சுய அனுபவம் மற்றும் குரு உபதேசம் எனும் பிரமாணங்களால் (கருவிகளால்) உறுதியாகிறது. எனவே உலகம் அநித்தியம் (நிலையற்றது), அசத்தியம் (பொய்யானது) என்பதை உணர்ந்து, எதனுடன் ஒட்டுதல் இன்றி வாழவேண்டும். (சங்கத்தில் நிஷ்சங்கமாக வாழவேண்டும்).

சோகம், மகிழ்ச்சி, அச்சம், கோபம், லோபம், மோகம், வேட்கை, பிறப்பு-இறப்பு இவையெல்லாம் அகங்காரத்துக்கே அன்றி, ஆத்மாவுக்கு அல்ல.(சான்றாக, அகங்காரமில்லாத ஆழ்ந்த உறக்கத்தில், துயரங்கள்-குழப்பங்கள் ஏற்படுவதில்லை. சுக-துக்கங்கள் ஆத்மா சம்பந்தப்பட்டதாக இருந்தால், உறக்கத்திலும் அவை ஏற்பட வேண்டும். எனவே அவைகள் இந்த உடலின் தர்மங்கள் தவிர ஆத்மாவுடையதல்ல).

உடல், ஞான கர்ம உறுப்புகள், பிராணன், மனம் ஆகியவற்றால் நிலைபெற்றுள்ள ஆத்மா, இவைகளில் பற்று கொண்டு, ’இவைகளே நான்’ என்று கருதும் போது, ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. அதிநுட்பமான ஆத்மாவின் மூர்த்திதான் - குண கர்மங்களான லிங்க சரீரம், அல்லது சூத்ராத்மா, அல்லது மஹத் தத்துவம் என்பர். அவன் காலரூபியான பரமேசுவரனுக்கு அடங்கி சம்சாரச் சக்கரத்தில் சுழல்கிறான்.

விவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அஞ்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி ஏகாத்மபாவம் எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.

எது ஞானம்:- எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம்.

தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.

பிரம்ம தத்துவம் :- மனதிற்கு விழிப்பு நிலை - கனவுநிலை - உறக்கநிலை உள்ளது. இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்துவ குணம் - இராட்சத குணம் - தாமச குணம் என்பன காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன. மும்மூன்றாக இருப்பனவெல்லாம் எவருடைய இருப்பில் உண்மை போல் காட்சியளிக்கின்றனவோ, சமாதி நிலையில் மூவகை வேறுபாடுகள் இல்லாத போதும் எது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறதோ, அந்த நான்காவது தத்துவம் - பிரம்ம தத்துவம் - அதுவே சத்தியம்.

படைப்புக்கு முன் எது இருக்கவில்லையோ, பிரளயத்துக்குப் பின் எது இருக்கப் போவதில்லையோ, அது, அந்த இடைப்பட்ட காலத்திலும் இல்லை - என்றே கருதவேண்டும். ‘ உலகம் இருக்கிறது’ என்பது வெறும் கற்பனையே. ஒரு பொருள் எதனால் ஆக்கப்படுகிறதோ, எதனால் பிரகாசிக்கப்படுகிறதோ, அதுவே - அந்த காரணப் பொருளே - இதன் உண்மையான வடிவம் என்பது உறுதியான உண்மை. இதுவே முடிவான முடிவாகும்.

பற்பல மாறுதல்களை அடையும் இப்பிரபஞ்சம், உண்மையில் இல்லாத போதிலும், இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. இது சுயம்பிரகாசமான பிரம்மமே ஆனதால், புலன்கள், விஷயங்கள், மனம், பஞ்சபூதங்கள் என பல்வகை நாம-ரூபங்கள் உண்டோ, அவை அத்தனையிலும் பிரம்மமே விளங்குகிறது.

பிரம்ம ஞானத்தை அடைவதற்கான சாதனங்கள் - வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் (மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல், அடைந்த ஞானத்தில் நிலை பெறுதல், முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.

இது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்).

ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக-துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை.

ஆகாயத்தை, வாயுவால் உலர்த்தப்படுவதில்லை; நெருப்பினால் எரிக்க முடியாது; நீரினால் ஈரப்படுத்த முடியாது; பூமி தனது புழுதியால் மாசுபடுத்த இயலாது; காலங்களின் தன்மைகளான வெப்பம்-குளிர் ஆகியவாற்றால் பாதிக்கப்படுவதில்லை. காரணம், இந்தத் தன்மைகள் எல்லாம் சில நேரங்களில் மட்டுமே இருப்பவை. ஆனால் ஆகாயாமோ, இவைகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருப்பது. அதுபோலவே, சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் செயல்களும் கர்மாவும், அழிவில்லாத ஆத்மாவை தொடக்கூட முடியாது. ஆத்மா இவைகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆனால் இவைகளில் அகங்காரம் கொண்டிருப்பவன் (இவைகள்தான் நான் என்று எண்ணிக் கொண்டிருப்பவன்) துயரக்கடலில் சிக்கித் திரிகிறான்.

பகவானிடம் பக்தி செலுத்துவதால் மட்டுமே, மனதின் தோஷமாகிய ரஜோகுணத்தைப் போக்கிக் கொள்ளும் வரை மாயையின் காரியமான குணங்களுடன் சம்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.

நன்கு ஆத்மக்ஞானத்தை அடையாதவனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள கர்மவாசனை-கர்ம பதிவுகள் அடிக்கடி தலைதூக்கி, அஞ்ஞானம் தலைதூக்கச் செய்து, யோகப்பிரஷ்டனாக்கிவிடும் (ஆத்மவித்தையை அடையாமல் ஒதுக்கி வைக்கப்படுவர்).

ஞானப்பயிற்சி செய்து முன்னேறும் யோகிகளை, உறவினர்கள், நண்பர்கள் பந்தபாசத்தையோ அல்லது கவலையோ ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்கள் தன் நிலையில் இருந்து வழுக்கி விழுந்து விடுவார்கள். அப்படிபட்டவர்கள் அடுத்த பிறவியில், முன் பிறப்பில் விட்ட இடத்திலிருந்து ஞானயோகப் பயிற்சியை தொடங்குவார்கள். கர்மாக்களில் பற்று வைக்க மாட்டார்கள்.

ஞான யோகத்தை அடைந்து பண்டிதனாக விளங்குபவன், உலகத்தில் வாழ்ந்து கொண்டே கர்மவினைப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி-வருத்தம் முதலிய மன மாற்ற்ங்களை அடைவதில்லை. ஆத்மாவில் அறிவை நிலைநிறுத்திய ஞானி, இந்த உடல் செயல்படுகிறது என்பதையே அறிய மாட்டான்.

உடலிலும் உலகிலும் தான் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆத்மா எப்போதும் ஒரேவிதமாக மாற்றமின்றி உள்ளது என்ற உண்மையை ஞானி அறிந்து கொள்கிறான்.

பகவானின் சாக்ஷாத்காரம் (உணர்வு) ஏற்பட்டதும், மனிதனின் மனதை மூடியிருந்த அக்ஞானம் விலகி, ஆத்ம சொரூபமாகி விடுகிறான்.

ஆத்மா, அது நம்மால் அடையப்பட்ட பொருள்; சுயம்பிரகாசமானது; பிறப்பில்லாதது; அளவிடமுடியாதது; எல்லா அனுபூதிகளும் அதிலே நிகழ்கிறது; எல்லா விபூதிகளையும் (பெருமைகளையும்) தன்னுள் கொண்டது; தனக்குச் சமமான இரண்டாவது வஸ்து (பொருள்) இல்லாத தனிப்பொருள்; மனம்-வாக்குகளுக்கு எட்டாதது; நிர்குணமானது; அருவமானது; வடிவம் அற்றது; குணதோசங்களை கடந்தது.

இரண்டாவதற்ற அகண்ட ஆத்ம தத்துவத்தில், அறியாமை காரணமாக வேற்றுமை காண்பது, மனதின் மயக்கமே. சீவன், பிரகிருதியின் தொடர்பால் அகங்காரமடைந்து பேதத்தைக் கற்பிக்கிறது. மனமயக்கத்துக்கும், அக்ஞானத்துகும் தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது.

29வது அத்தியாயம்: பாகவத தர்ம நிருபணம், உத்தவர் பத்ரிகாசிரமம் புறப்படுதல்

[தொகு]

அதிக -முயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார், எந்த செயல் செய்தாலும் அதை என்னுடைய பிரீதிக்காக செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்து என்னிடம் அனன்ய பக்தி செலுத்த வேண்டும்.

எல்லா சீவராசிகளிடத்தில் நானே இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு இருப்பவனுக்கு, விரோதம்-பொறாமை-பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப் போகிறது. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாக பார்ப்பவனுக்கு, அனைத்தும் பிரம்ம ஞானம் ஏற்பட்டவுடன், எல்லா அறியாமைகளில் விலகி, என்னை சாட்ச்சாத்தாகப் பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்-மொழி-மெய்களால் என்னைப் பார்ப்பதே, என்னை அடைவதற்கான சாதனங்களுக்குள் மேலானது.

மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு, என்னையே சரண் அடைந்து , எல்லாச் செயல்களையும் என் பொருட்டாக எவன் செய்கிறானோ, அவனுக்கு உதவ வேண்டும் என்ற பலமான ஆசை என்னுள் எழுகிறது. இப்படிப்பட்ட பக்தன் அமரத்தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகிவிடுகிறான்.

உத்தவரே! எனது ஆசிரமம் பத்ரியில் அருகில் உள்ளது. அங்கு செல்ல கட்டளையிட்டார். பகவான் கூறியபடி உத்தவர், பதரிகாசிரமத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்டு, வாழ்நாள் முடிவில் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

30வது அத்தியாயம்: யது குலத்தை அழித்தல்

[தொகு]

யது குலத்தவர்களின் அழிவுக்கு முனிவர்களின் சாபம் இன்னும் ஏழு நாட்களில் நிகழவிருப்பதை அறிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையிலிருந்து பெண்டிர், சிறுவர்-சிறுமியர், முதியவர்களை சங்கத்துவாரம் என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, மற்ற யாதவர்களை, ஓடங்களில் பயணித்து கடலைக் கடந்து பின் ரதங்களில் ஏறி பிரபாச பட்டினம் எனும் கடற்கரை நகருக்கு செல்ல உத்தரவிட்டார்.

சாத்தியகி மற்றும் கிருதவர்மன் தலைமையில் பிரபாச பட்டினத்திற்கு சென்ற யாதவர்கள், அறிவை அழிக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறி பருகியதன் விளைவாக மதி மயங்கி, கர்வம் மேலோங்கிய தாசர்ஹர்கள், விருஷ்ணிகள், விசர்ஜனர்கள், மாதுரர்கள், சூரசேனர்கள், போஜர்கள் மற்றும் குந்திகள் ஆகிய யது குலத்தவர்கள் தங்களுக்கிடையே இருந்த உறவை மறந்து ஒருவரையொருவர், இரும்புத் தடி போன்று வளர்ந்திருந்த வச்சிராயுதத்திற்கு நிகரான கோரைப்புற்களால் தாக்கிக் கொண்டு, முனிவர்களின் சாபத்தாலும், கிருஷ்ணனுடைய மாயையாலும், அகம்பாவம் நிறைந்த யது குலத்தவர்கள் முற்றிலும் அழிந்தனர். பூமிக்கு சுமையாக மிச்சம் மீதி இருந்த யாதவர்களின் அழிவை கண்ட கிருஷ்ணர் மனநிறைவடைந்தார்.

பலராமன், கடற்கரையில் அமர்ந்தபடி பரமாத்மாவைத் தியானித்து, தன்னுடைய ஆத்மாவை தன்னிலேயே நிலைப்படுத்தி மனித உடலை துறந்தார்.

கிருஷ்ணர் தாமரைப் போன்ற சிவந்த இடது காலை, வலது தொடையின் மேல் வைத்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்த நிலையில், ஜரன் என்ற வேடன் தூரத்திலுருந்து கிருஷ்ணரின் காலை, மானின் முகம் என தவறாக நினைத்து, இரும்பு உலக்கையின் ஒரு சிறு இரும்பு துண்டு சொருகப்பட்ட அம்பை குறிபார்த்து எய்தான்.

ஸ்ரீகிருஷ்ணன் காலில் அம்படிபட்டு, உயிர் நீக்கும் தருவாயில், தனது தேரோட்டியான தாருகன் என்பவனை அழைத்து, பிரபாச நகர் கடற்கரையில் யாதவர்கள் மது மயக்கத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடிந்ததையும், பலராமனும், நானும் வைகுந்தம் செல்ல இருப்பதையும், துவாரகை நகர் கடலில் மூழ்கப் போவதையும், துவாரகையில் மீதம் உள்ள யாதவர்கள் துவாரகையை விட்டு நீங்கி அருச்சுனனுடன் இந்திரப்பிரஸ்தம் நகருக்கு சென்று விடுங்கள் என துவாரகையில் உள்ளவர்களிடம் கூறிவிடு என்றார். அவ்வாறே துவாரகையில் மீதமிருந்த யாதவர்கள் இந்திரப்பிரஸ்தம் சென்றனர்.

31வதுஅத்தியாயம்: பகவான் வைகுந்தத்திற்கு எழுந்தருளல்

[தொகு]

பிரம்மா-பார்வதி-சிவன்-இந்திரன், முதலான தேவர்கள், சப்தரிஷிகள் , பிரஜாபதிகள், பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள்-வித்தியாதரர்கள்-நாகர்கள்-சாரணர்கள் - யட்சர்கள்- யட்சினிகள் கின்னரர்கள்- கிம்புருசர்கள்-அப்சரசுகள்- வேதியர்கள் ஆகியோர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தத்திற்கு எழுந்தருளுவதை காணும் பேராவலுடன் குவிந்து, பக்தியுடன் பகவான் மீது பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். பகவான் தன் திருமேனியுடன் வைகுந்தம் எழுந்தருளினார்.

ஆதார நூல்கள்

[தொகு]
  • ஸ்ரீமத் பாகவத புராணம், ஏகாதச ஸ்கந்தம்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brown, Manisha Wilmette (editor, author) & Saraswati, Ambikananda (translator) (2000). The Uddhava Gita. Frances Lincoln Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7112-1616-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7112-1616-7. With a foreword by Prof. Vachaspati Upadhyaya, Vice Chancellor, Lal Bahadur Sanskrit University, New Delhi. Source: [1] (accessed: Monday march 8, 2010)
  2. Ramanand Vidya Bhawan (n.d.). The Indian historical quarterly. Volume 2, Issues 3-4. Ramanand Vidya Bhawan. Source: [2] (accessed: Tuesday March 9, 2010) p.537
  3. Brown, Manisha Wilmette (editor, author) & Saraswati, Ambikananda (translator) (2000). The Uddhava Gita. Frances Lincoln Ltd. With a foreword by Prof. Vachaspati Upadhyaya, Vice Chancellor, Lal Bahadur Sanskrit University, New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7112-1616-9, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7112-1616-7. Source: [3] (accessed: Monday March 8, 2010), p.8