உத்தராகண்டம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மலை மாவட்டங்களில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் புதிய மற்றும் பாரம்பரியப் பெயராகும். உத்தராகண்ட் என்ற பெயர் சமஸ்கிருத மொழியில் வடக்கு நிலம் அல்லது வடக்குப் பகுதி என பொருள் தருவதாகும், உத்தராகண்ட் என்ற பெயரை துவக்கக்காலத்தில் கேதர்கண்ட் மற்றும் மனஸ்கண்ட் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிலப்பரப்பை குறிப்பிட இந்து வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய இமயமலைப் பகுதியில் உள்ள உத்தராகண்டமானது பழங்கால இந்திய புராணங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதன் சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் கங்கை ஆற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இங்கு பல இந்து யாத்திரைத் தலங்கள் உள்ளதால் பழங்காலத்திலிருந்து, இது "கடவுள்களின் தேசம்" (தேவ்பூமி) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியை பௌரவர், குசான், குலிந்தர், குப்தர், கடியூரிகள், பாலா, சேண்ட்டுகள், பரமரா அல்லது பன்வா, பிரித்தானியர் ஆகியோர் ஆட்சிபுரிந்துள்ளனர்.[1]
இந்த பிராந்தியத்தில் முதலில் முண்டா மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி பேசும் கோல் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்பு கோல் மக்களுடன் வேத காலத்தில் வடக்கில் இருந்து வந்த இந்தோ-ஆரிய (காஸ்) பழங்குடியினர் இணைந்தனர். அந்த நேரத்தில், இன்றைய உத்தராகண்ட்டானது ரிஷிகள் மற்றும் சாதுக்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. இங்கிருந்துதான் மகாபாரதத்தை வியாசர் எழுதினார் என்று நம்பப்படுகிறது, மேலும் இப்பகுதியில் பாண்டவர்கள் பயணித்து தங்கி இருந்தார்கள் என நம்பப்படுகிறது. இப்பகுதியானதியை முதலில் ஆண்ட மரபுகள் கார்வால், குமாவுன் ஆகியவை ஆகும். கி.மு. 2 ஆண்டாம் நூற்றாண்டில் குலிந்த மரபினர் ஆண்டனர். இவர்கள் பழங்கால சைவ சமயத்தை ஆதரித்தனர். அவர்கள் மேற்கு திபெத்துடன் உப்பு வணிகம் செய்தனர். இப்பகுதியில் அசோகரின் காலத்தில் பௌத்தம் நுழைந்தது. கோல் மக்களால் சாமனிசம் பின்பற்றப்பட்டு வந்தது. இருப்பினும் சங்கராச்சாரியாரின் பணிகள் மற்றும் சமவெளிகளில் இருந்து குடியேறியவர்களின் வருகை காரணமாக கார்வால் மற்றும் குமாவோன் ஆகியன பிராமணிய ஆட்சிக்கு திரும்பின. நான்காம் நூற்றாண்டில், குய்ந்தா நாகா வம்ச ஆட்சிக்கு வழிவகுத்தார். இங்கு குடியேறிய பிற மக்களான கிராதகர்கள் என அறியப்படும் திபெத்-பர்மிய குழு மக்கள் இப்பிரதேசத்தின் வடக்கு மலைப்பகுதிகளில் குடியேறியிருப்பதாக அறியப்படுகிறது, இவர்களின் சந்ததிகளாக தற்கால பூட்டியா, ராஜி, புஷ்சா, தாரு ஆகிய மக்கள் என நம்பப்படுகிறது.[2]
இடைக்காலத்தில், இப்பிராந்தியமானது மேற்கில் கார்வால் ராஜ்யத்தாலும், கிழக்கில் குமாவோன் ராஜ்யத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டது. 13-ஆம் நூற்றாண்டில், குமாவோன் இராச்சியமானது சமவெளியில் தோன்றிய சந்த் மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புதிய ஓவிய பாணியானது (பஹாரி பள்ளி ஓவியம்) வளர்ச்சியுற்றது.[3] சமவெளிகளில் இருந்து பிராமணர் மற்றும் ராஜபுத்திரர்கள் பெருமளவில் குடியேற்றியதால்,[4] தற்கால கார்வால் பகுதியானது பர்மார் / பன்வார் ராஜக்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 1791 ஆம் ஆண்டில், நேபாளத்தின் கூர்கா பேரரசு, குமாவோன் இராச்சியத்தை வெற்றிகொண்டது, 1803 ஆம் ஆண்டில், கர்வால் ராஜ்யமும் கூர்காக்களிடம் விழுந்தது. 1816 ஆம் ஆண்டு ஆங்கிலேய-நேபாள போர் முடிவுக்கு வந்தவுடன், கர்வால் ராஜ்யத்தின் ஒரு பகுதியானது டெஹ்ரியில் மறுபடியும் நிறுவப்பட்டது, ஒப்பந்தத்தின் காரணமாக பிரித்தானியரின் வசம் கர்வால் மற்றும் குமாவோன் ஆகியவை வந்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் டெஹ்ரி சுதேச அரசானது உத்தரப்பிரதேச மாநிலத்தினுடன் இணைக்கப்பட்டது, இதில் உத்தராகண்ட் பகுதிகள் கார்வால் மற்றும் குமாவுன் கோட்டங்களாக இருந்தன. உத்தரகாண்ட் கிராந்தி தால் (உத்தரகாண்ட் புரட்சிகர கட்சி 1979) உட்பட, பல்வேறு அரசியல் குழுக்கள் அதன் பதாகையின் கீழ் தனி மாநிலம் வேண்டி கிளர்ச்சியைத் தொடங்கின. உத்தராகண்டத்தின் கர்வால் மற்றும் குமாவுன் போன்ற மலைப் பகுதிகளானது அவற்றுக்குள் இருந்த பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களின் தாக்கங்களுடன் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தாலும், அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகள் ஆகியவற்றினால் பிரிக்க முடியாத முழுமையான தன்மை கொண்டவையாக இருந்தன. இந்த இரு பகுதிகளுக்கு இடையில் இருந்த பத்தமானது உத்தராகண்டின் புதிய அரசியல் அடையாளத்தை உருவாக்கியது.[5] இது 1994-இல் வேகம் பெற்றது. தனி மாநிலத்திற்கான கோரிக்கையானது தேசிய அளவிலும், உள்ளூர் மக்களிடையேயும், அரசியல் கட்சிகளாலும் கிட்டத்தட்ட ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6] இந்த காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க சம்பவமாக 1994-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் திகதி ராம்பூர் திராமா துப்பாக்கி சூட்டு வழக்கு இருந்தது, இந்தப் படுகொலைகள் 2000 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவினையை விரைவுப் படுத்தின.[7] புதிய மாநிலம் உத்ராஞ்சல் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
உத்ராஞ்சல் என்ற பெயரே உத்தராகண்ட் என மாற்றவேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2006 அக்டோபரில் மாநில சட்ட மன்றத்தில் பெயர்மாற்றச் சட்டம் இயற்றப்பட்டது.[8] நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பெயர் மாற்ற மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது மற்றும் 2006 டிசம்பரில் ஜனாதிபதியால் சட்டப்படி கையெழுத்திட்டது. அதன் பின்னர், உத்தராகண்ட் என்ற பெயர் மாற்றம் நிகழ்ந்தது.