உபர்கோட் குகைகள் | |
---|---|
உபர்கோட் குகைகளின் மேல் தளம் | |
உபர்கோட் குகைகள் (Uparkot Caves) என்பது, பண்டைய மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளாகும். குகைகள் இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் ஜுனாகத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜூனாகத் பௌத்த குகைக் குழுமங்களின் ஒரு பகுதியாகும்.
300 அடி ஆழமான அகழிக்கு அப்பால் உள்ள இந்த குகைகள், ஆதி காதி கிணற்றுக்கு அருகில், கி.பி 2-3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவை. இந்த குகைகள் இந்தோ சிதியன் பாணியின் கலவையுடன் சாதவாகன கட்டிடக்கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது. [1]
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கூற்றுப்படி, "குகைக் குழுமம் மூன்று அடுக்குகளில் உள்ளது. ஆனால் இரண்டு மாடிகள் மட்டுமே வழக்கமான தளங்களைக் கொண்டிருக்கின்றன. உபர்கோட்டில் உள்ள குகைகள் இரண்டு தளங்களாக வெட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில், சுமார் 11 அடி சதுர ஆழமான ஒரு குண்டா உள்ளது. அதன் மூன்று பக்கங்களிலும் மூடப்பட்ட அறை உள்ளது. ஆறு தூண்களுடன் கூடிய ஒரு பெரிய அறை, அதை ஒட்டி கூரையைத் தாங்கி நிற்கிறது. தாழ்வாரத்தின் கீழ், மீதமுள்ள பகுதியில், வடகிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள சுவர்களில் சாய்வு கல் பலகை-இடைவெளிகள் உள்ளன. கீழ் தளத்தில், ஒரே மாதிரியான அறைகள், ஒரு நடைபாதை, மேலே தரையைத் தாங்கும் தூண்கள், கல் பலகை-இடைவெளிகள் மற்றும் அவற்றுக்கு மேலே, சைத்தியம் - சாரள வேளைப்பாடுகள் உள்ளன.
கீழ் தளத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. அவற்றின் அடித்தளம், தனித்துவமான அலங்கார வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்த குகைகள் அழகான தூண்கள் மற்றும் நுழைவாயில்கள், தண்ணீர் தொட்டிகள், குதிரைவாலி வடிவ சைத்ய சாரளங்கள், ஒரு மண்டபம் மற்றும் தியானத்திற்கான அறை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.