உமேஷ் சந்திர பானர்ஜி | |
---|---|
உமேஷ் சந்திர பானர்ஜி | |
பிறப்பு | கல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 29 திசம்பர் 1844
இறப்பு | 21 சூலை 1906 | (அகவை 61)
படித்த கல்வி நிறுவனங்கள் | ஓரியண்டல் செமினரி இந்துப் பள்ளி, கல்கத்தா |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | முதல் தலைவர், இந்திய தேசிய காங்கிரசு |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
வாழ்க்கைத் துணை | ஹேமாங்கினி மோதிலால் (தி. 1859) |
உமேஷ் சந்திர பானர்ஜி (Womesh Chunder Bonnerjee) (1844 – 1906) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவர் ஆவார். இவர் வங்காளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை உறுப்பினர் பதவிக்கு, பிரித்தானிய இந்தியா சார்பாக போட்டியிட்ட முதல் இந்தியர் ஆவார்.
1844ல் கல்கத்தாவில் பிறந்த உமேஷ் சந்திர பானர்ஜி, பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 1862ல் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின்னர் 1864ல் இங்கிலாந்து சென்று, 1867ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.[1]
31 டிசம்பர் 1885ல் பம்பாய் நகரத்தில், உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையில், தாதாபாய் நௌரோஜி மற்றும் ஆங்கிலேயரான ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், பிரித்தானிய இந்திய அரசில் இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, இந்திய தேசிய காங்கிரசு என்ற அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவராக உமேஷ் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
1886ல் கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற அகில இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களை ஒருங்கிணைக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நிலைக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டது.
1892ல் அலகாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மீண்டும் உமேஷ் சந்திர பானர்ஜி கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இக்கூட்டத்தில் இந்தியர்கள் தங்களது அரசியல் சுதந்திரத்திற்கானத் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.[3]
உமேஷ் சந்திர பானர்ஜி இங்கிலாந்து சென்று பிரிவி கௌன்சில் நீதிமன்றத்தில், இந்தியர்களின் மேல்முறையீடு வழக்குகள் குறித்து வாதாடினார்.[1]