உருடிசலா என்றும் அறியப்படும் உருத்திரசாகர் ஏரி, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மெலாகர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு ஏரி. இதன் உயிரியற் பல்வகைமை, சமூக பொருளாதார முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய அரசின் சூழலுக்கும் காடுகளுக்குமான அமைச்சு, பாதுகாப்பதற்கும், தாங்குவளர்ச்சிப் பயன்பாட்டுக்கும் உரிய தேசிய முக்கியத்துவம் கொண்ட ஈரநிலங்களில் ஒன்றாக இதை அடையாளம் கண்டுள்ளது. ஈரநிலங்கள் தொடர்பான ராம்சர் மாநாட்டின் செயலாளர் நாயகம் இதை அனைத்துலகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அறிவித்ததுடன், அனைத்துலகச் சிறப்பு வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[1] இந்த அறிவிப்பை இந்திய அரசின் சூழலுக்கும் காடுகளுக்குமான அமைச்சு 29-02-2007 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
உருத்திரசாகர் ஏரி, சிப்பாகிசாலா மாவட்டத்தில், சொனமுரா துணைப் பிரிவில் உள்ள மெலாகர் பகுதியில் உள்ளது. இதன் புவியியற் பரப்பளவு 2.4 சதுர கிலோமீட்டர்கள். மாநிலத் தலைநகர் அகர்தலாவில் இருந்து 52 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரியின் அமைவிடம் 23°29’ வ, 90°01’ கி ஆகும்.
உருத்திரசாகர் ஏரி, ஒரு இயற்கையான வண்டற்படிவு நீர்த்தேக்கம். இது, நோவா செர்ரா, துர்லவ்நாரய செர்ரா, கெம்தாலி செர்ரா ஆகிய மூன்று வற்றா ஓடைகளிலிருந்து நீரைப் பெறுகிறது.