ப. சா. குட்டிகிருஷ்ணன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பருத்தோலி சாலப்புரத்து குட்டிகிருஷ்ணன் மேனன் 8 சூன் 1915 பொன்னானி, மலப்புறம், கேரளம், இந்தியா |
இறப்பு | 11 சூலை 1979 ,மருத்துவக் கல்லூரி, கோட்டயம், கேரளம், இந்தியா | (அகவை 64)
புனைபெயர் | உரூப் |
தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை, பத்திரிக்கையாளர் |
மொழி | மலையாளம் |
கருப்பொருள் | சமூக அம்சங்கள் |
இலக்கிய இயக்கம் | யதார்த்தவாதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சுந்தரிகளும் சுந்தரன்மாரும், உம்மாச்சு |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
துணைவர் | தேவகி அம்மா |
குடும்பத்தினர் | கருணாகர மேனன் (தந்தை) பாருக்குட்டி அம்மா (தாயார்) |
பருத்தோலி சாலப்புரத்து குட்டிகிருஷ்ணன் (Parutholli Chalappurathu Kuttikrishnan) (1915 – 1979) உரூப் (Uroob) என்ற தனது புனைப்பெயரால் அறியப்படும் இவர், மலையாள இலக்கியத்தின் இந்திய எழுத்தாளராவார். முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, பி. கேசவதேவ், எஸ். கே. பொட்டெக்கட் ஆகியோருடன், இருபதாம் நூற்றாண்டில் மலையாளத்தில் முற்போக்கான எழுத்தாளர்களில் இவரும் கணக்கிடப்பட்டார். சுந்தரிகளும்ம் சுந்தரன்மாரும், உம்மாச்சு போன்ற புதினங்களுக்கும், ராச்சியம்மா போன்ற சிறுகதைகளுக்கும், தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதல் மலையாளத் திரைப்படமான "நீலகுயில்" உட்பட பல மலையாளப் படங்களின் திரைக்கதைகளுக்கும் இவர் பெயர் பெற்றவர். முதல் முறையாக புதினங்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கேரள சாகித்திய அகதாமி விருது உட்பட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார்.
தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டம் பொன்னானிக்கு அருகிலுள்ள பல்லாபிரம் என்ற சிறிய கிராமத்தில் கருணாகர மேனன், பாருக்குட்டி அம்மா ஆகியோருக்கு 1915 சூன் 8 அன்று குட்டிகிருஷ்ணன் பிறந்தார்.[1] இவரது ஆரம்பக் கல்வி பொன்னானியின் ஏ.வி. உயர்நிலைப் பள்ளியில் இருந்தது. மெட்ரிகுலேசனுக்குப் பிறகு, இவர் ஆறு ஆண்டுகள் பயணம் செய்தார், இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.[2] இந்த காலகட்டத்தில், நீலகிரி மலைகளில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்திலும், ஒரு துணித் தொழிற்சாலையிலும், கோழிக்கோடு, மங்களோதயத்தில் உள்ள கே.ஆர் பிரதர்ஸ் பிரிண்டர்ஸ் ஆகியவற்றிலும் பணியாற்றினார். பின்னர், 1954 இல் அனைத்திந்திய வானொலியின் கோழிக்கோடு நிலையத்தில் சேர்ந்தார்.[3] 1975ஆம் ஆண்டில் நிலையத்தின் தயாரிப்பாளராக ஓய்வு பெற்ற பின்னர், 1976இல் மலையாள மனோரமாவில் சேருவதற்கு முன்பு குங்குமம் வார இதழின் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அங்கு மலையாள மனோரமா வார இதழ் மற்றும் பாஷாபோஷினியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். கேரள சாகித்ய அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர், 1948இல் இடச்சேரி கோவிந்தன் நாயரின் மைத்துனியான தேவகி அம்மாவை மணந்தார்.[1] கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, 1979 சூலை 10 அன்று தனது 64 வயதில் காலமானார்.[2]
குட்டிகிருஷ்ணன் 1930களில் பொன்னானியில் ஒரு இலக்கியக் குழுவில் சேர்ந்தார். அதில் இடச்சேரி கோவிந்தன் நாயர், குட்டிகிருஷ்ணா மரார், அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, கடவநாத் குட்டிகிருஷ்ணன், மூத்தேதத் நாராயணன் வைத்தியர் ஆகியோர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த காலத்தில் இவர் "வேலக்காரியுடே செக்கன்" என்ற தனது முதல் சிறுகதையை எழுதினார்.[4] பாரசீக மொழியில் நித்திய இளமை என்றும் அரபு மொழியில் அந்தி என்றும் பொருள்படும் உரூப் என்ற புனைப் பெயரை இவர் ஏற்றுக்கொண்டார்.[5] தன்னுடன் வானொலியில் பணிபுரிந்த மலையாளத் திரையுலகில் பிரபல இசை இயக்குனரான கி. இராகவன் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்கு தனது அடையாளத்தை மறைத்து இந்தப் புனைப்பெயரைப் பயன்படுத்தினார்.[6] இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான நீர்சலுகல் 1945 இல் வெளியிடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது முதல் புதினமான அமினா, வெளியிடப்பட்டது. இவரது படைப்புகளில் 8 புதினங்கள், 27 சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாடகங்கள், 3 கவிதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் இருந்தன.[7] உம்மச்சு 1954ஆம் ஆண்டு வெளியானது. 1956 இல் வெளியிடப்பட்ட மிண்டப்பென்னுவும், 1958 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுந்தரிகளும் சுந்தரன்மாரும், கோபாலன் நாயருடே தாடி, ராச்சியாமா, துரன்னிட்டா ஜலகம் ஆகியவை இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். அறியப்பட்ட மலையாள இலக்கிய விமர்சகரான எம். கிருட்டிணன் நாயர் உலக இலக்கியத்தின் சிறந்த கதைகளில் ராச்சியாமாவை எண்ணினார்.[8] உம்மாச்சு கதை தி பிலவ்டு என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[9] இவரது பல படைப்புகளில் வலுவான பெண் கதாபாத்திரங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் பாலின சமத்துவத்தை ஆதரிப்பவராக அறியப்பட்டார். இவரது மூன்று புராணக்கதைகளான அங்கவீரன், மல்லனும் மாரனும், அப்புவின்டே லோகம் ஆகியவை குழந்தைகள் இலக்கியம் மற்றும் மலையாள இலக்கிய வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
1954 ஆம் ஆண்டில், இவரது "நீலக்குயில்" என்ற இவரது கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை தயாரிக்க இராமு கரியத் முடிவு செய்தபோது, எழுத்தாளர் பி. பாஸ்கரனுடன் இணைந்து திரைக்கதையை எழுதினார். இந்த படம் மலையாளப் படங்களில் ஒரு அடையாளமாக மாறியது. மேலும் மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றதன் மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் திரைப்படமாகும்.[10] பி. பாஸ்கரனுடனான இவரது தொடர்பு, ராரிச்சன் என்ன பவுரன் (1956),[11] நாயரு பிடிச்ச புலிவாலு (1958),[12] குருசேத்ரம் (1970) [13] ,உம்மாச்சு (1971) ஆகிய நான்கு படங்கள் தொடர்ந்து வெளிவரக் காரணமானது.[14] இதற்கிடையில், 1970இல் கே. எஸ். சேதுமாதவனின் மைண்டபென்னு என்ற படத்திற்கு திரைக்கதை எழுதினார்.[15] 1972இல் திரிசந்தியா, 1978இல் வெளியான அனியாரா ஆகிய படங்களுக்கும் இவர் திரைக்கதையை எழுதியிருந்தார்.[16] பிந்தைய' படத்தை இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார்.[17]
இவர், தமிழக அரசிடமிருந்து (அப்போதைய மெட்ராஸ் அரசு), 1948 இல் கதிர் கட்டாவுக்காகவும், 1949 இல் துரன்னிட்டா ஜலகம் மற்றும் 1951 இல் கும்பெடுக்குண்ணா மன்னு ஆகியவற்றுக்காகவும் மூன்று விருதுகளைப் பெற்றார்.[5] கேரள சாகித்ய அகாடமி 1958 ஆம் ஆண்டில் புதினங்களுக்கான வருடாந்திர விருதை அறிமுகப்படுத்தி, தொடக்க விருதுக்கு இவரது உம்மாச்சுவை தேர்ந்தெடுத்தது.[18] 1960ஆம் ஆண்டில் சுந்தரிகளும் சுந்தரன்மாரும் என்ற தனது படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[19] அதே ஆண்டில் தனது கோபாலன் நாயருடே தாடி கதைக்காக எம்.பி. பவுல் விருது பெற்றார். 1971ஆம் ஆண்டில், உம்மாச்சுவின் திரைப்படத் தழுவலுக்காக சிறந்த கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[20] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுந்தரிகளும் சுந்தரன்மாரும் இவருக்கு மற்றொரு கௌவரமான ஆசான் நூற்றாண்டு விருதை பெற்றுத் தந்தது.[21] கோழிக்கோட்டில் உள்ள கிலியானட் பள்ளியின் வளாகத்தில் இவரது நினைவாக கேரள அரசு "உரூப் நினைவு இலக்கிய அருங்காட்சியகம்" என்ற அருங்காட்சியகத்தை அமைத்தது.
(English translation of Ummachu)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)