உரோம் ஆப்பிள் (Rome apple) (சிவப்பு உரோம், உரோம் அழகு, கில்லட்டின் நாற்று என்றும் அழைக்கப்படுகிறது) என்பது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உரோமின் ஓஹியோ நகரத்தின் அருகே தோன்றிய ஆப்பிள் வகைகளுள் ஒன்றாகும். இதனைச் சமையலுக்கும் பயன்படுத்தலாம். இந்த ஆப்பிள் பளபளப்பான சிவப்பு நிறத்தின் காரணமாக, சமையலில் இதன் பயன்பாட்டு அதிகமாக உள்ளது.
உரோம் ஆப்பிள் வட்டமானது, முழுமையான சிவப்பு நிறமுடையது, மற்றும் மிகவும் பளபளப்பானது. அடர்த்தியான தோல் மற்றும் உறுதியான சதை கொண்டது. இது முதன்மையாக பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அதன் சுவை சமைக்கும்போது உருவாகிறது. மேலும் அதன் வடிவத்தை நன்றாக வைத்திருக்கிறது. இது பொதுவாக உண்ணுபதற்கு விரும்பத்தக்க தாக இல்லை. ஏனெனில் இதன் நுட்பமான சுவை வேறு சில வகைகளைப் போல இனிமையாகவோ, புளிப்பாகவோ இல்லை. இது செப்டம்பர் பிற்பகுதியில் சந்தைக்கு வரும். உரோம் ஆப்பிள்கள் பரவலாக விளையக்கூடியவை, அமெரிக்க வர்த்தகத்தில் முக்கிய பங்குவகிக்கின்றது.
1817ஆம் ஆண்டில் ஜோயல் கில்லட் நாற்றங்கால் நிலையத்திலிருந்து இந்த வகையினை பெற்றதாகக் கூறப்படுகிறது.[1] கில்லட் மகன் இந்த ஆப்பிள் செடியினை ஓஹியோ ஆற்றங்கரையில், புரோக்டர்வில்லி அருகே உரோம் நகரத்தில் நட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இது சிவப்பு பழங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. கில்லட் உறவினர் ஹோராஷியோ நெல்சன் கில்லட் இந்த ஆப்பிள் மரத்தின் கிளையிலிருந்து பதியம் எடுத்து நாற்றங்கால் பண்ணையினைத் தொடங்கினார். முதலில் "கில்லட்டின் நாற்று" என்று அழைக்கப்பட்ட இது, நகரத்தின் நினைவாக 1832ஆம் ஆண்டில் "உரோம் அழகு" எனப் பெயர் மாற்றப்பட்டது. அசல் மரம் 1850களில் ஆற்றங்கரையில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாகச் சாய்ந்துவிட்டது.