எட்வர்ட் கிரீன் பால்ஃபோர் (Edward Balfour, 6 செப்டம்பர் 1813 - 8 திசம்பர் 1889) [1] என்பவர் ஒரு ஸ்காட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், கீழ்த்திசைவாணர், இந்தியாவில் முன்னோடி சுற்றுச்சூழல் நிபுணர் ஆவார். மதராஸ் மற்றும் பெங்களூரில் அருங்காட்சியகங்களையும், மதராசில் ஒரு விலங்கியல் பூங்காவையும் நிறுவியவர் ஆவார். இவர் இந்தியாவில் வனப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் இந்தியா குறித்த கலைக்களஞ்சியத்தை சைக்ளோபீடியா ஆப் இந்தியா என்ற பெயரில் வெளியிட்டார், அதன் பல பதிப்புகள் 1857 க்குப் பிறகு வெளியாயின. பொது சுகாதாரம் பற்றிய படைப்புகளை ஆங்கிலத்தில் இருந்து இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பல்வேறு தலைப்புகளில் வெளியிட பலமுன்னெடுப்புகளை மேற்கொண்டார்.
பால்ஃபோர் மாண்ட்ரோஸ், ஆங்கஸில் பிறந்தார். இவரது பொற்றோர் கிழக்கிந்திய கம்பெனி கடற்பணி கேப்டன் ஜார்ஜ் பால்ஃபோர் மற்றும் சூசன் ஹியூம் ஆகியோராவர். பெற்றோருக்கு இவர் இரண்டாவது மகனாவார். இவரது அண்ணன் சர் ஜார்ஜ் பால்ஃபோர் (1809-1894) பின்னர் கின்கார்டைன்ஷையரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு முன்பு மாண்ட்ரோஸ் அகாடமியில் கல்வி பயின்றார். மருத்துவம் பயின்ற பிறகு 1833 இல் எடின்பரோவின் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் உறுப்பினராக ஆனார். குடும்ப நண்பர் ஒருவர் இந்தியாவில் மதராஸ் மருத்துவ சேவையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு ஏற்பாடு செய்தார். இதனால் இவர் 1834 இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுக்கு வரும் வழியில் மொரிசியசைப் மார்வையிட்டார். அங்கு பெர்னார்டின் டி செயிண்ட்-பியர் மற்றும் ஜீன்-பாப்டிஸ்ட் பவுசிங்கால்ட் ஆகியோரின் படைப்புகளில் தான் படித்த அத்தீவின் இயற்கை வாழிடங்கள் சீர்குலைக்கப்படுவதைக் கண்டார். இதுவே இவருக்கு காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் வாழ்நாள் முழுவதும் கவனத்தை செலுத்த தூண்டுகோலானது. [2]
1836 இல் இந்தியா வந்தவுடன் இவர் ஒரு ஐரோப்பிய படைப்பிரிவில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இவர் 1862 வரை ஐரோப்பிய மற்றும் பூர்வீக பீரங்கிப் படை, பூர்வீக குதிரைப்படை, மதராஸ் மற்றும் பம்பாய் காலாட்படை பிரிவுகளின் மருத்துவராக பணியாற்றினார். இவர் அகமத்நகர் மற்றும் பெல்லாரியில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றினார், மேலும் 1850 இல் சேப்பாக்கத்தில் அரசாங்க முகவராக பணியாற்றினார் மற்றும் கருநாடக படைவீரர்க்குச் சம்பளம் வழங்கும் அலுவலராகவும் இருந்தார். இந்தி மற்றும் பின்னர் பாரசீக மொழிகளில் திறமை கொண்டவராக மாறியதால் இவரை சிப்பாய் படைப்பிரிவுக்கு மாற்ற இவரது மொழியறிவு உதவியது. இதுவே இவர் சிறிய பகுதிகளுக்கு செல்ல வழிவகுத்தது, மேலும் இவர் அடுத்த பத்து ஆண்டுகள் தென்னிந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார். இந்துஸ்தானி மற்றும் பாரசீக மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளராக இவர் அவ்வப்போது அரசாங்கத்தால் பயன்படுத்தபட்டார்.
1848 இல் பால்ஃபோர் மதராஸ் திரும்பினார். அங்கு இவருக்கு ஆளுநரின் மெய்க்காப்பு மருத்துவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்பணி இவருக்கு எழுதுவதற்கும் பிற ஆர்வமுள்ள பணிகளில் ஈடுபடவும் போதுமான நேரத்தைக் கொடுத்தது. மேலும் இவர் ஆற்காடு நவாபின் அரசவைக்கு முகவராக கூடுதல் பொறுப்பையும் வகித்தார். 1858 முதல் 1861 வரை நவாபின் கடன்களை விசாரிக்கும் ஆணையத்தில் பணியாற்றினார். 1850 ஆம் ஆண்டில், இவர் மதராஸ் நாணயச் சாலை நிறுவனத்தில் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
1852 ஆம் ஆண்டில் இவர் முழு அறுவை மருத்துவ நிபுணரானார். மே 24 அன்று மதராசில் சக அறுவை மருத்துவரின் மகள் மரியன் மாடில்டா ஆக்னஸ் கில்கிறிஸ்ட்டை மணந்தார். இவர் பர்மா மற்றும் நீரிணை குடியேற்றங்கள், அந்தமான் மற்றும் மைசூர் பிரிவுகளில் துணை சர்ஜன் ஜெனரலாக பணியாற்றினார். 1871 முதல் 1876 வரை சர்ஜன் ஜெனரலாகவும், சென்னை மருத்துவத் துறையின் தலைமை தாங்கினார். [2] பால்ஃபோரின் மனைவி மரியான், பால்ஃபோரின் கலைக்களஞ்சியத்தை மெய்ப்பு பார்க்க உதவினார். 1864 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி பெல்லாரியில் இவர்களது ஒரு மகனான எட்வர்ட், குழந்தைப் பருவத்தில் இறந்தான்.
பால்ஃபோர் இந்தியாவுக்கு வரும் வழியில் மொரிசியசில் இயற்கை வாழிடங்கள் சீர்குலைக்கப்படுவதைக் கண்டார். அதன் பிறகு மனித நலனுக்கும் சுற்றுச்சூழல் சீர் குலைவுக்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து ஆராயத் தொடங்கினார். இவர் தனது பயணத்தின் போது நலவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றிய தகவல்களை சேகரித்தார். படை வீரர்களின் உடல் நலம் எந்தெந்த இடங்களில் நன்றாக உள்ளது என்பது குறித்த தரவுகளை சேகரித்து, எங்கெல்லாம் இராணுவ முகாம்களை அமைக்கலாம் என்பது குறித்த அறிக்கையை 1845 ஆம் ஆண்டு வெளியிட்டார். இது இவரை பொது நலவாழ்வில் ஒரு அதிகாரியாக மாற்றியது. 1849 ஆம் ஆண்டில், மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்டரேச்சர் அண்ட் சயின்சில், 1840 இல் ஒரு நாட்டின் காலநிலையில் மரங்களின் தாக்கத்தைப் பற்றி எழுதினார். பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கும் அதற்கான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கும் உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி , காலராவின் புள்ளிவிவரங்கள் மற்றும் 1842-3 முதல் 1846-7 (1850) வரை ஐந்தாண்டுகளில் மதராஸ் இராணுவத்தின் பூர்வீக சிப்பாய்கள் பணியிலிருந்து விடுபட்டதற்கான காரணங்கள் பற்றிய குறிப்புகள் போன்ற படைப்புகளை எழுதினார். எடின்பரோவில் நடந்த மருத்துவப் பயிற்சியானது மனித நலவாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. தண்ணீர் பகிர்மானம் குறைவாக இருத்ல் என்பது, ஒரு பொது சுகாதார பிரச்சனை என்பதை பால்ஃபோர் உணர்ந்தார். மொரீசியஸ் அனுபவத்தின் அடிப்படையில், காடுகளை அழிப்பதால் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தார், மேலும் மழைப் பொழிவுக்கும் ஈரப்பதத்தை சீராக பராமரிக்கவும் மரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்த குறிப்புகளில் தண்ணீருக்கும் வனப்பகுதிக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிவியல் இதழ்களில் (மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்டரேச்சர் அண்ட் சயின்ஸ் 15(1849) :402-448) எழுதினார். அத்துடன் வறட்சி ஆணையக் குழுவுக்கும் ( இந்திய தீபகற்பத்தின் தட்பவெப்பநிலை மற்றும் உற்பத்தித்திறன் மீது மரங்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் . பஞ்ச கமிஷன் IV.) அனுப்பி வைத்தார். கிழக்கிந்திய கம்பெனி இவரது எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்து 1840 க்குப் பிறகு வன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதுவும் ஹக் ஃபிரான்சிஸ் கிளெஹார்னின் மற்ற அறிக்கைகளும் டல்ஹவுசி பிரபு மீது தாக்கத்தை ஏற்படுத்தி மதராசு வனத்துறையை நிறுவ காரணமாயிற்று. காடழிப்பால் காலநிலை மாற்றம் ஏற்படுதல் குறித்த விவாதம் பிரிட்டனிலும் நடைபெற்றது. அங்கு எட்வர்டின் சகோதரர் கர்னல் ஜார்ஜ் பால்ஃபோர் காடுகளை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தினார், டேவிட் லிவிங்ஸ்ட்டன் போன்ற மற்றவர்கள் மழைப் பொழிவானது புவியியல் மாற்றங்களுடன் தொடர்புடையது என்று பரிந்துரைத்தனர்.[3] [4]
படைவீரர்களின் உடல்நிலையை ஆய்வு செய்ய பால்ஃபோர் புள்ளிவிவரங்களை பரவலாகப் பயன்படுத்தினார். [5] இவரது மாமா ஜோசப் ஹியூம் லண்டனில் உள்ள புள்ளியியல் சங்கத்தில் வாசித்த உடல்நலப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில், மனிதர்கள் புதிய காலநிலைக்கு ஏற்றவாறு மாறுகிறார்கள் என்ற நம்பிக்கையை நிராகரித்தார். மேலும் வெவ்வேறு இன மக்கள் காலநிலை மற்றும் நோய்களுக்கு எதிரான மாறுபட்ட உடல் எதிர்ப்புத் திறனைக் கொண்டுள்ளனர் என்று பரிந்துரைத்தார். இவரது தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் மலைப்பகுதிகளில் ஐரோப்பியர்கள் வாழ்க்கை சிறந்து விளங்குவதை சுட்டிக் காட்டினார். [6]
இவர் அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் குறித்த பதிவுகளை ஆவணப்படுத்தியதோடு, எந்தக் காட்டமைப்புகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதை ஆராய்ந்தார். உயிருள்ள ஒரு ஓராங்குத்தானைக் காண பெரும் கூட்டம் கூடியதைக் கொண்டு, ஒரு உயிரியல் பூங்காவைத் தொடங்கும் திட்டத்தை அரசிடம் முன்வைத்தார். மேலும் அது நிறுவப்பட்டபோது, பிரித்தானிய அருங்காட்சியகம், ரீஜண்ட்ஸ் பார்க், கியூ கார்டன்களை விட அதிகமான மக்களை அது ஈர்த்ததாக இவர் குறிப்பிட்டார். [7]
பொது சுகாதாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த, இவர் பேறுகால மருத்துவம் குறித்து மருத்துவர் ஜே.டி. கான்குவெஸ்ட் எழுதிய Outlines of Midwifery என்ற நூலை உருதுவில் மொழிபெயர்த்தார் மேலும் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். கன்னட பதிப்பின் முன்னுரையில் மொழிபெயர்ப்பை செய்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதாகவும், கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட படைப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அதை மலையாளத்தில் மொழிபெயர்க்க இன்னும் யாரும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். "உள்நாட்டு மருத்துவ மாணவர்களுக்கான பாடப் புத்தகத்கங்களை வழங்குவது; பூர்வீக மருத்துவச்சிகளின் மருத்துவ முறையை மேம்படுத்துவது; மேலும் இயற்கையான உழைப்பின் போதும், கடினமான உழைப்பின் போதும் பெண்களுக்கு உதவுவதில் ஐரோப்பிய மக்கள் பின்பற்றும் முறைகளை இந்தியாவின் கற்றறிந்த ஆண்களுக்கு தெரியப்படுத்துவது" என்று அவர் தனது நோக்கத்தைக் குறிப்பிட்டார். [2] தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் மருத்துவக் கல்வியை கற்பிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தார், ஆனால் அதில் தோல்வியடைந்தார். இந்திய சமூகத்தில் பெண்களுக்கு ஆண் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது மரபுக்கு மாறாக கருதப்பட்டதால் மருத்துவமனைக்குப் பெண்கள் வராமல் போகும் சூழல் இருப்பதை உணர்ந்தார். இதனால் இந்தியாவில் ஐரோப்பிய பெண்களை மருத்துவம் படிக்க ஊக்குவித்தார். இவரின் முயற்சி வெற்றியடைந்த்தின் விளைவாக 1875 இல், மேரி ஷார்லிப் மதராசு மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் விண்ணப்பதாரராக அனுமதிக்கப்பட்டார்.
பால்ஃபோர் திரள் நிதிதிரட்டல் முறையில், மக்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு, 1850 ஆம் ஆண்டு சென்னையில் அரசு மத்திய அருங்காட்சியகத்தை நிறுவினார். இவர் சென்னை அருங்காட்சியகத்தின் முதல் அதிகாரியானார். 1879 வாக்கில், அருங்காட்சியகம் ஒவ்வொரு ஆண்டும் 180,000 பேரையும், 1886 இல் 230,000 பேரையும் ஈர்த்தது. சிறப்பு நாட்களில் பெண்களை அருங்காட்சியகத்துக்கு வந்து செல்ல ஊக்குவித்தார். அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்களை ஆவணப்படுத்தியதோடு, எவ்விதமான காட்சியமைப்புகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன என்பதையும் இவர் ஆராய்ந்தார். அருங்காட்சியகத்தின் இயற்கை வரலாற்றுப் பிரிவில் உயிருள்ள ஒரு புலிக்குட்டி மற்றும் சிறுத்தையையும் வைக்கப்பட்டிருந்தபோது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததை இவர் கவனித்தார். இதனால் விலங்கியல் பூங்கா ஒன்றைத் தொடங்கும் திட்டத்தை அரசாங்கத்திடம் முன்வைத்தார். அது 1856 ஆம் ஆண்டில் அருங்காட்சியக வளாகத்திலேயே ஒரு சிறிய உயிரியல் பூங்கா உருவாக்க வழிவகுத்தது. அதுவே மதராஸ் விலங்கியல் பூங்காவாக வளர்ந்தது. அருங்காட்சியகத்தை கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்ற அழுத்தங்கள் இருந்தன, ஆனால் பால்ஃபோர் இந்த அருங்காட்சியகம் "...அனைத்து வகுப்பினருக்கும் திறந்திருக்க வேண்டும், மேலும் அனைத்து வகுப்பினரையும் மகிழ்விப்பதற்கும் கற்பிப்பதற்கும் தேவையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது" என்று உறுதியாக நம்பினார். துவக்கத்தில் இந்த அருங்காட்சியகம் வணிக மதிப்புமிக்கப் பொருட்களை காட்சிப்படுத்தியது மற்றும் பொருள் வளப்பாட்டு புவிப்பொதியியல் மற்றும் வனவியல் மீது கவனம் செலுத்தியது. இது பின்னர் தொல்லியல் மற்றும் இனவியல் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கியது. "அனுப்பப்படும் ஒவ்வொரு பொருளும் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறி அருங்காட்சியகத்திற்கான பங்களிப்புகளை ஊக்குவித்தார். அருங்காட்சியகத்திற்காகக் குறிக்கப்பட்டு, " பாங்கி டாக் " மூலம் அனுப்பினால், பொருட்களை அஞ்சல் மூலம் கட்டணமின்றி அனுப்பலாம். ஓரியண்டல் மற்றும் ஸ்க்ரூ நேவிகேஷன் நிறுவனம் அருங்காட்சியகத்திற்கான சேகரிப்புகளை இலவசமாக அனுப்ப அனுமதித்தது. இதனால் ஒரு மாதத்திற்கு சுமார் 1000 உருப்படி பொருள் வந்து சேர்ந்தன. பொதுமக்கள் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக பொருட்களை அளிப்பதால், நுழைவுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கருதினார். 1853 வாக்கில், அருங்காட்சியகமானது 19,830 இக்கும் மேற்பட்ட கலைப்பொருட்களால் நிரம்பி வழிந்தது. அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டவை. [8] விதிவிலக்கான கலைப்பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும் என்று பால்ஃபோர் நம்பினார். [7] 1866 ஆம் ஆண்டு மைசூர் இராச்சியத்தில் பெங்களூர் அருங்காட்சியகத்தைத் தொடங்கினார். 1851 ஆம் ஆண்டின் மாபெரும் கண்காட்சி, 1855 மற்றும் 1868 ஆம் ஆண்டுகளின் பாரிஸ் கண்காட்சிகள், லண்டனின் சர்வதேச கண்காட்சி (1862), வியன்னா கண்காட்சி (1872) ஆகியவற்றிற்கான மதராஸ் மத்திய குழுவின் செயலாளராக இருந்தார். [2]
பால்ஃபோர் இந்திய மொழிகளில் சிறப்பாக ஆர்வம் கொண்டிருந்தார். உள்ளூர் மொழிகளைக் கற்க நிறைய நேரம் செலவிட்டார். 1850 இல் இவர் குல்-தஸ்தா அல்லது தி பன்ச் ஆஃப் ரோஸஸ், பாரசீக மற்றும் ஹிந்துஸ்தானி கவிஞர்களின் படைப்புகளை கல்லச்சுக்கலையில் வெளியிட்டார். இவர் மதராசில் முகம்மதன் பொது நூலகத்தை நிறுவினார். பல படைப்புகளை பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். ஆங்கில படைப்புகளை (வானியல் போன்றவை) இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தார். இவரது ஆய்வுகளின் அடிப்படையில், குறிப்பாக உடல்நலம் தொடர்பான உள்நாட்டு அறிவியல் அறிவு குறித்து ஐயம் கொண்டிருந்தார். மேலும் இவரது கலைக்களஞ்சியத்தில் இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவே பாடுபடுபவர்களாக இருப்பதாகவும், அவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை துல்லியமாக ஆராய அவர்களுக்கு நேரமோ அல்லது வழியோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பால்ஃபோர் தான் வகித்த அருங்காட்சியகப் பதவியில் இருந்து விலகியபோது, அடுத்து அப்பதவியில் அமர எட்வர்ட் பிளைத்தை பொருத்தமானவராக ஒருவர் என்று கருதினார் ஆனால் இது குறித்த கடிதப் பரிமாற்றம் சென்னை அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது. இவரது பதவியை மதராஸ் மவுண்டட் காவல்துறையின் கமாண்டன்டாக பணிபுரிந்த கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் ஏற்றுக்கொண்டார். [9]
இந்தியாவின் பல்வேறு அம்சங்களைக் குறித்த பால்ஃபோரின் தொகுப்பாக தி என்சைக்ளோபீடியா ஆஃப் இந்தியா என்ற கலைக்களஞ்சியமானது முதலில் 1857 இல் வெளியிடப்பட்டது. அது கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் வணிகம், தொழில்துறை, அறிவியல் ஆகியவற்றை குறித்த களஞ்சியங்களை வெளியிட வழிவகுத்தது. இதன் மூலப் படைப்பானது 1851 ஆம் ஆண்டின் பெரிய கண்காட்சிக்காக (Great Exhibition) இவர் எழுதிய குறிப்புகளிலிருந்து உருவாக்கபட்டது. அடுத்தடுத்த பதிப்புகள் சர் டீட்ரிச் பிராண்டிஸ் [10] உட்பட மற்றவர்களின் ஆராய்ச்சிகளையும் இணைத்து 1871-83 இல் ஐந்து தொகுதிகள் கொண்ட படைப்பாக வளர்ந்தது. [10]
பால்ஃபோர் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 1876 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்டார். அவருக்கு பிரியாவிடை கொடுத்த போது மதராசில் இருந்த இந்து, முஸ்லீம் ஐரோப்பிய சமூகத்தினர் அரசாங்க மத்திய அருங்காட்சியகத்தில் அவரது உருவப்படத்தை வைத்துப் பாராட்டினர். இவரது சிறப்பான பணிகளுக்காக ஆண்டுக்கு கூடுதலாக £100 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. [11] 1891 ஆம் ஆண்டில் , மதராஸ் பல்கலைக்கழகம் மருத்துவக் கல்வியை பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பால்ஃபோர் நினைவு தங்கப் பதக்கம் வழங்கத் துவங்கியது.
{{cite book}}
: Empty citation (help)